Designed by Iniyas LTD
புலிப் பீதி! யாருடைய? எதற்கான திட்டம்?
கடந்த இரு நாட்களில் வடக்கில் இரு இடங்களில் வெடிபொருட்கள் கண்டு பிடிக்கப்பட்டுள்ளன. யாழ்ப்பாணம் மறவன்புலவில் வீடு ஒன்றிலிருந்து வெடிபொருட்கள் மீட்கப்பட்டுள்ளன. அத்துடன் அந்த வீட்டின் உரிமையாளர் கிளிநொச்சியில் வைத்து ஸ்ரீலங்கா காவல்துறையால் கைது செய்யப்பட்டுள்ளார். அவர் தமிழீழ விடுதலைப் புலி உறுப்பினர் என்றும் புனர்வாழ்வு பெறாதவர் என்றும் அவரது மனைவியே காட்டிக் கொடுத்ததாகவும் கொழும்பு ஆங்கில ஊடகம் ஒன்று செய்தி வெளியிட்டிருக்கிறது.
இதேவேளை மன்னார், மாந்தை கிழக்கு, இலுப்பைக் கடவையிலும் பெருமளவான வெடிபொருட்கள் கைப்பற்றப்பட்டுள்ளன. இரு வேறு இடங்களில் அடுத்தடுத்து வெடிபொருட்கள் மீட்கப்பட்டமை “மீண்டும் புலிகள்“ என்ற சந்தேகத்தை ஏற்படுத்தியுள்ளன. ஆனால் மறவன்புலவு சம்பவம் பல சந்தேகங்களை எழுப்பியுள்ளது. இலுப்பைக்கடவையில் கமநல சேவைகள் திணைக்களம் கடந்த காலத்தில் ஸ்ரீலங்கா பொலிஸ் நிலையாக இயங்கியுள்ளது. அவை போர்க்காலத்தில் புலிகள் புதைத்து வைத்திருந்த ஆயுதங்களாக இருக்கலாம் என்று ஸ்ரீலங்கா கூறுகிறது.
ஆனால் இப்போது ஏன் தோண்டப்பட்டது என்பதே சந்தேகத்தை ஏற்படுத்துகிறது. அந்த வெடிபொருள் கிடங்கை அறிந்தவர்கள் இப்போது அது குறித்து தகவல் சொல்லியது ஏன்? அவை எந்தக் காலத்தை சேர்ந்தவை? என்பதை மதிப்பிடாதது ஏன்? ஏழு வருடங்களாக ஆயுதம் மீட்கப்பட்ட கமநல சேவைகள் கட்டடத்தில் இயங்கிய ஸ்ரீலங்கா பொலிஸ் நிலையம் இதற்கு என்ன பொறுப்பையும் விளக்கத்தையும் வழங்கப் போகிறது?
ஸ்ரீலங்காவைப் பொறுத்தவரையில் சிங்களப் பேரினவாதிகளுக்கு புலிகள் தேவையாக உள்ளனர். புலிகள் இல்லாமல் அரசியல் செய்ய முடியாத நிலை காணப்படுகிறது. எனவே இந்தப் புலிப் பீதியின் பின்னணியில் வலுவான ஒரு சக்தி இருப்பதாகவே தென்படுகிறது. கடந்த காலத்தில் மகிந்த ராஜபக்சவின் ஆட்சிக் காலத்தில் அவ்வப்போது இவ்வாறு புலிப் பீதிகள் திட்டமிட்டு உருவாக்கப்பட்டுள்ளது. ஸ்ரீலங்காப் பேரினவாதிகளால் எதுவும் முடியாது என்று கூற இயலாது என்ற அனுபவத்தையும் வைத்தே இதனை ஆராய வேண்டும்.
இந்தச் செய்தி வெளியாக முன்னரே மகிந்த ராஜபக்ச அணியினர் தமது அரசியல் விளையாட்டைத் தொடங்கிவிட்டனர். வெடிபொருட்கள் மீட்கப்பட்ட சம்பவம் நாட்டில் மீண்டும் புலிகள் இயக்கம் தலைதூக்குவதை வெளிப்படுத்துவதாக மகிந்த ராஜபக்சவின் புதல்வர் நாமல் ராஜபக்ச தெரிவித்துள்ளார். சம்பவம் நடந்து வெகு நேரத்திற்கே அவர் தன் கருத்தை உதிர்த்துள்ளார். மிகவும் ஆவலுடன் இதனை எதிர்பார்த்திருந்ததைப்போல அவர் இந்தக் கருத்தை கூறியுள்ளார்.
இதேவேளை முன்னாள் அமைச்சர் ஜி.எல். பீரஸ் கூறிய இது தொடர்பில் வெளியிட்ட கருத்தும் கவனிக்கத்தக்கது “பயங்கரவாதம் தலைதூக்காமல் இருப்பதற்காக பயங்கரவாதம் தடை சட்டம் காணப்படுகின்றது. அத்துடன் குறிப்பிட்ட சில பகுதிகளில் இராணுவ முகாம்கள் வைக்கப்பட்டிருந்தன. ஆனால் நல்லாட்சி அரசாங்கம் ஆட்சி பீடம் ஏறிய பின்னர் நாட்டின் எதிர்காலம் தொடர்பில் சிந்திக்காது முன்னாள் போராளிகளை விடுதலை செய்தும், பயங்கரவாத தடைச்சட்டத்தை நீக்கவும் நடவடிக்கை எடுத்தும் ஆபத்தை விலைக்கொடுத்து வாங்கி விட்டுள்ளது. அது மாத்திரம் அல்லாது பாதுகாப்பு படைகளின் முகாம்கள் அகற்றியமையும் முக்கிய காரணமாகும். சம்பூரில் காணப்பட்ட முகாம் அகற்றப்பட்டுள்ளது. இவ்வாறு தொடர்ச்சியாக நாட்டில் பாதுகாப்புடன் தொடர்புப்பட்ட விடயங்களில் அநாவசியமான தீர்மானங்கள் எடுக்கும் போது மீண்டும் பயங்கரவாதம் நாட்டில் தலைதூக்கி விடும்” என்று அவர் குறிப்பிட்டுள்ளார்.
மேலே குறிப்பிடப்பட்ட விடயங்கள், ஸ்ரீலங்கா அரசுக்கும் பேரினவாதிகளுக்கும் பிடித்த விடயங்கள். தமிழ் ஈழ மக்களை இனப்படுகொலை செய்த ராஜபக்ச தரப்புக்களும் இதையே விரும்பின. அத்துடன் தற்போது அரசாளும் தரப்பின் ஆசையும் இதுவே. ஆனால் சர்வதேச அழுத்தங்கள் காரணமாக சிறிய அளவில் சில நடவடிக்கைகளுக்கு தற்போதைய அரசு முன் வந்திருக்கிறது. அந்தச் சிறிய நடவடிக்கைகளை பெரும் நடவடிக்கைகளாக காட்டி ஸ்ரீலங்காவில் தோல்வியை தழுவியவர்கள் ஆட்சியைக் கைப்பற்ற நினைக்கின்றனர்.
இந்த இடத்தில் ஒரு விடயத்தினை தெளிவாக குறிப்பிடுதல் வேண்டும். ஸ்ரீலங்காவில் ஆட்சியைக் கைப்பற்றுவதற்கு முட்டி மோதும் இரு தரப்புக்கள் தமது அரசியல் நலன்களுக்காக விடுதலைப் புலிகளின் பெயரைப் பயன்படுத்துகின்றனர். விடுதலைப் புலிகள் என்ற பெயர் அல்லது அடையாளம் ஒட்டுமொத்த ஸ்ரீலங்காவின் தலைவிதியையும் மாற்றும் என்று பேரினவாதிகள் நம்புகின்றார்கள். அது மாத்திரமல்ல விடுதலைப் புலிகளின் பெயரைப் பயன்படுத்துவதன் மூலம் தமிழ் மக்களை நெருக்கடிக்கு உள்ளாக்குவதும் அவர்களின் இன்னொரு நோக்கமாகும்.
இராணுவத்தை தமிழர்களின் மண்ணிலிருந்து குறைப்பதை சிங்களப் பேரினவாதிகள் விரும்பவில்லை. தமிழ் மக்களின் வாழ் நிலங்களிலிருந்து இராணுவத்தை வெளியேற்ற அவர்கள் விரும்பவில்லை. தொடர்ந்தும் தமிழ் நிலங்களை அபகரித்து அதில் இராணுவத்தை நிலை நிறுத்தி தமிழ் மக்களை அடக்கி ஒடுக்கி அழிப்பதுவே அவர்களின் திட்டம். ஸ்ரீலங்காவில் ஆட்சி மாற்றம் ஏற்பட்ட பின்னர் வடகிழக்கின் சில பகுதிகளில் சில நிலங்கள் விடுவிக்கப்பட்டுள்ளன. சம்பூர் விடுவிக்கப்பட்டாலும் அனல் மின்னிலையம் அகற்றப்படவில்லை. அங்கு போராட்டம் தொடர்கிறது.
வலி வடக்கில் சில பகுதிகள் விடுவிக்கப்பட்டாலும் இன்னமும் அகதிமுகாங்கள் திறந்தே காணப்படுகின்றன. பல ஆயிரக்கணக்கான காணிகள் விடுவிக்கப்படவில்லை. பல ஆயிரக்கணக்கானவர்கள் இன்னமும் அகதிமுகாங்களில் வாழ்கின்றனர். அவர்களை தொடர்ந்தும் அகதிமுகாங்களில் வைத்திருக்கவே பேரினவாதிகளுக்கு விருப்பம். இதைப்போல தமிழ் அரசியல் கைதிகளையும் தொடர்ந்தும் சிறையில் அடைத்து வைத்திருக்கவே அவர்கள் விரும்புகின்றனர்.
இப்போது இன்னொரு முக்கிய விடயத்தை இப் பத்தி சுட்டிக்காட்ட விரும்புகிறது. அதாவது தம்முடைய ஆட்சி கைப்பற்றல் நலன்கள், நோக்கங்களுக்காகவும் தமிழ் மக்களை காயப்படுத்தி, தமிழ் மக்களை பாதிப்பிற்குள்ளாக்கி அரசியல் செய்யும் ஒரு நிலையே தென்னிலங்கையால் கையாளப்படுகிறது. ஈழத் தமிழ் மக்களை தொடர்ந்தும் தமது அரசியலுக்குப் பலியாக்குவதன் ஊடாகவும் அவர்களை ஒடுக்கி அழிக்கலாம் என்பதில் தென்னிலங்கை தெளிவாய் இருக்கிறது.
ஸ்ரீலங்காவில் ஆட்சி மாறியிருக்கலாம். ஆனால் ஸ்ரீலங்காவின் அதிகாரம் பேரினவாதிகளின் கையில்தான் இருக்கிறது. அதைத்தான் இந்த நிகழ்வுகள் காணப்பிக்கின்றன. காவல்துறையில் சில தரப்பு, பகுதி இராணுவத்தரப்பு, ஆளும் தரப்பில் சிலர், பேரினவாதிகள் அனைவரும் இணைந்துதான் அதிகாரத்தை கையில் வைத்திருக்கின்றனர் என்பது கூர்ந்து கவனிக்கத்தக்கது. வடகிழக்கை தொடர்ந்தும் இராணுவ ஆட்சி நடைபெறும் பிராந்தியமாக வைத்திருப்பதே அவர்களின் நோக்கம்.
புலிகள் குறித்தும் எமது போராட்டம் குறித்தும், அதன் வடிவம் குறித்தும் தமிழ் ஈழ மக்கள் நன்கு அறிவார்கள். அவ்வாறான பட்டறிவு ஒன்றை ஈழப் போராட்டம் தமிழ் ஈழ மக்களுக்கு உணர்த்திவிட்டது. சிங்களப் பேரினவாதிகள் எப்படி? என்ன மனநிலையில் இருக்கிறார்கள் என்பதை இந்த இடத்தில் விளங்குவதுதான் முக்கியமானது. சிங்களப் பேரினவாதம் மிக மிக வலுவோடு, பலமாக இருக்கிறது என்பதை விளங்கிக்கொள்வோம். அப்படியெனில் அதற்கு எதிராக மிகவும் நூதனமான போராட்டத்தை நடத்துவதன் ஊடாகவே தமிழ் ஈழ மக்கள் தங்கள் உரிமைகளை வெல்ல முடியும் என்பதையும் இந்நாட்கள் உணர்த்துகின்றன.
தமிழவன்,
செண்பகம்,
01.04.2016
