Designed by Iniyas LTD
புலிகள் தலைதூக்கும் எதிர்பார்ப்பில் ராஜபக்சக்கள்: சுஜீவ சேனசிங்க
தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கம் ஸ்ரீலங்காவில் மீண்டும் தலைதூக்கும் என்ற எதிர்பார்ப்பிலேயே ராஜபக்ச குடும்பத்தினர் உள்ளனர் என்று சர்வதேச முதலீட்டு அமைச்சர் சுஜீவ சேனசிங்க தெரிவித்துள்ளார்.
இதற்காக அவர்கள் உதவி வழங்கிவருகிறார்களா என்ற கேள்வியையும் அவர் இதன்போது எழுப்பினார்.
அரசாங்க தகவல் திணைக்களத்தில் இன்று வியாழக்கிழமை இடம்பெற்ற அமைச்சரவை முடிவுகளை அறிவிக்கும் வாராந்த ஊடக சந்திப்பில் கலந்துகொண்ட உரையாற்றிய போதே அவர் இந்த சந்தேகத்தை கிளப்பினார்.
அவர் அங்கு தொடர்ந்தும் உரையாற்றுகையில்,
தமிழீழ விடுதலைப் புலிகளை வைத்தே நாமல் ராஜபக்சவும், அவரது குடும்பத்தினரான ராஜபக்சக்களும் அரசியல் செய்து வருகின்றனர். தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கம் மீண்டும் தலைதூக்கும் என்ற எண்ணத்திலேயே அவர்கள் உள்ளனர்.
இதற்காக ராஜபக்சவினர் உதவி செய்கின்றார்களா என்ற சந்தேகமும் உள்ளது. அவ்வாறு மீண்டும் தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கம் தலைதூக்குவதற்கு இடமளிக்கப்போவதில்லை என்ற முடிவிலேயே ஜனாதிபதி, பாதுகாப்பு செயலாளர் உள்ளிட்ட அனைவரும் உறுதியாக உள்ளோம் – என்றார்.
