தமிழினத்திற்கான தனித்துவமான ஊடகம்

இலங்கை தமிழ் மீனவர்கள் மூவரையும் விடுவிக்க கோரி யாழில் ஆர்ப்பாட்டம்

கொழும்பு மேல் நீதிமன்றத்தினால் மரண தண்டனை விதிக்கப்பட்ட தமிழக மீனவர்கள் ஐவரும் இலங்கை அரசினால் விடுவிக்கப்பட்டு விட்ட நிலையினில் இச்சம்பவத்துடன் தொடர்பு படுத்தப்பட்டு மரணதண்டனை விதிக்கப்பட்டுள்ள இலங்கை தமிழ் மீனவர்கள் மூவரையும் விடுவிக்க கோரி யாழ்.நகரில் ஆர்ப்பாட்டமொன்று இன்று வியாழக்கிழமை நடத்தப்பட்டுள்ளது.

இந்திய மீனவர்களிற்கு ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச பொதுமன்னிப்பு வழங்கியுள்ளதாக ஜனாதிபதியின் பேச்சாளர் மொஹான் சமரநாயக்க தெரிவித்திருந்தார். போதைப்பொருள் கடத்தல் வழக்கில் தூக்குத் தண்டனை விதிக்கப்பட்ட 5 தமிழக மீனவர்கள் விடுதலை செய்யப்பட்டனர். தூக்கு தண்டனை ரத்து செய்யப்பட்டமையால் அவர்கள் இந்தியாவில் சிறை தண்டனை எதுவும் அனுபவிக்க வேண்டிய தேவையில்லை.fish

ராமேஸ்வரம் மீனவர்களான வில்சன், செல்வன் லாங்கெட், அகஸ்டன், லோயலோ, எமர்சன், பிரசாத் ஆகியோர் மீன்பிடிக்கச் சென்றபோது இலங்கை கடற்படையால் சிறைபிடிக்கப்பட்டனர். அவர்கள் இந்தியாவில் இருந்து ஹெராயின் கடத்தி வந்ததாக கடந்த 2011ம் ஆண்டு நவம்பர் 5ம் திகதி கைது செய்யப்பட்டனர். இந்த வழக்கை விசாரித்த இலங்கை நீதிமன்றம் அவர்கள் 5 உட்பட எண்மரிற்கு தூக்கு தண்டனை விதித்து தீர்ப்பளித்தது.

யாழ்ப்பாணம் குருநகரை சேர்ந்த முத்துராஜா கமல் கிறிஸ்ரியன் (வயது 38) மற்றும் ஞானப்பிரகாசம் துசாந்தன் (வயது 28) ஆகிய இரண்டு மீனவர்களும் மண்டைதீவினை சேர்ந்த கிறிஸ்துராசா கில்மெட்ராஜ் (வயது 25) எனும் மீனவருமாக உள்ளூர் மீனவர்கள் மூவர் கைதாகி தற்போது மரணதண்டனை விதிக்கப்பட்டுள்ள நிலையில் சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர். அவர்களது குடும்பங்கள் மற்றும் ஊர்மக்கள் ஆகியோருடன் மீனவ அமைப்புக்கள் ஒன்று சேர்ந்து இப்போராட்டத்தை நடத்தியுள்ளனர்.

யாழ்.சிறைச்சாலைக்கு முன்னதாக ஆரம்பமான பேரணி இறுதியில் ஸ்ரீதர் திரையரங்கில் முடிவடைந்தது. அங்கு வைத்து அரச அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா மூலம் ஜனாதிபதிக்கான மகஜர் அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.

Comments
Loading...