Designed by Iniyas LTD
ஈழ இனப் படுகொலையும் ஐ.நாவும்! தாதமதிக்கப் படுவது நீர்த்துப் போகச் செய்யவுமே!!
இன்று ஐக்கிய நாடுகள் மனித உரிமைப் பேரவையின் 32 ஆவது கூட்டத் தொடர் ஆரம்பமாகிறது. ஐ.நா மனித உரிமைப் பேரவைத் தலைவர் செயிட் அல் ஹூசைன் தலைமையில் இடம்பெறும் இந்த மாநாடு எதிர்வரும் முதலாம் திகதி வரை இடம்பெறவுள்ளது. 30வது கூட்டத் தொடரில் ஸ்ரீலங்கா குறித்து நிறைவேற்றப்பட்ட தீர்மானம் குறித்து மனித உரிமைப் பேரவைத் தலைவர் செயிட் அல் ஹூசைன் தன்னுடைய வாய்மொழிமூல அறிக்கையை இந்தக் கூட்டத் தொடரில் சமர்பிக்கின்றார். இனப்படுகொலை புரிந்த ஸ்ரீலங்கா அரசிற்கு மிகவும் முக்கியத்துவம் மிக்க கூட்டத் தொடராக இது காணப்படுகிறது.
தமிழ் ஈழத்தில் 2009ஆம் ஆண்டின் மாபெரும் இனப்படுகொலை நிகழ்த்தப்பட்டது. சுதந்திர ஸ்ரீலங்காவின் பின்னர் தமிழ் ஈழர்களுக்கு எதிரான இனப்படுகொலைகள் திட்டமிட்ட ரீதியாக நிகழ்த்தப்பட்டு வந்தன. இதனுடைய உச்சகட்டமாக முள்ளிவாய்க்கால் இனப்படுகொலை நிகழ்த்தப்பட்டது. தமிழ் ஈழ இனப்படுகொலையை ஐ.நாவும் சர்வதேச சமூகமும் மனித உரிமை மீறல் என்றும் போர்க்குற்றம் என்றும் அழைப்பதே உண்மையை மறுக்கும் அநீதிச் செயலாகும். இப்படியான அணுகுமுறையின் மத்தியில் தமிழ் ஈழர் சந்தித்த இனப்படுகொலைக்கு நீதியை பெறுவது மிகவும் சிரமமானதே.
மகிந்த ராஜபக்சவின் காலத்தில் ஐ.நாவும் சர்வதேச நாடுகளும் போர்க்குற்றம் குறித்து ஆராய சர்வதேச விசாரணை தேவை என்று வலியுறுத்தின. ஆனால் ஸ்ரீலங்காவில் மேற்கின் கைப்பிள்ளையாக செயற்படும் ஒரு ஆட்சி ஏற்பட்டவுடன் கலப்பு நீதிமன்றம் போதும் என்று ஐ.நா சொல்கிறது. அது மாத்திரமின்றி ஸ்ரீலங்காவிற்கு விஜயம் மேற்கொண்ட ஐ.நா மனித உரிமை ஆணையாளர் அல் ஹூசைன் எப்படியான விசாரணையை மேற்கொள்வது என்பதை ஸ்ரீலங்காவே தீர்மானிக்கட்டும் என்று தெரிவித்திருந்தார். இந்தத் கூட்டத் தொடரில் ஸ்ரீலங்கா விஜயம் மற்றும் அந்நாடு ஐ.நா பிரேரணையை எப்படி செயல்படுத்துகிறது என்பது தொடர்பில் ஆணையாளர் வாய்மொழி மூல உரை ஆற்றுகின்றார்.
ஸ்ரீலங்காவில் ஆட்சி மாறியிருப்பதன் காரணமாக இனப்படுகொலை விவகாரத்தில் உலகின் அணுகுமுறைகளும் மாறக்கூடும் என்பதையே பலரும் குறிப்பிடுகிறார்கள். உலகம் ஒடுக்கப்பட்ட மக்களின் விடயத்தில் எப்படி எல்லாம் நடந்திருக்கிறது என்பதற்கு நம் முன்னால் உள்ள பல்வேறு வரலாற்றுச் சம்பவங்கள் உதாரணமாக உள்ளன. ஆனால் இந்த நீதியைப் பெறும் செயற்பாட்டில் நாம் சோர்ந்துவிட்டோமா என்பதை குறித்தே இன்றைய செண்பகப் பார்வை கேள்வி எழுப்ப விரும்புகிறது.
ஸ்ரீலங்காவில் ஆட்சி மாற்றத்தின் பின்னர் தமிழ் தலைமைகள் ஸ்ரீலங்கா அரசின் பல்வேறு பதவிகளைப் பெற்று தமது இனப்படுகொலைக்கான நீதியை பெறும் போராட்ட குணத்தை சாந்தப்படுத்தியுள்ளனர். எதிர்கட்சித் தலைவர், பிரதிக்குழுக்களின் தலைவர், மாவட்ட அபிவிருத்தி ஒருங்கிணைப்புக்குழுத் தலைவர் என்று பல்வேறு பதவிகளுடன் முள்ளிவாய்க்காலும் இனப்படுகொலையும் நம்முடைய தலைவர்களுக்கு மறந்துவிட்டன. இன்று ஐ.நாவில் மனித உரிமை கூட்டத் தொடர் ஆரம்பமாகும் நிலையில் தமிழ் உலகமே கபாலிப் பாடல்களில் மூழ்கியிருக்கிறது.
நாட்டில் ஸ்ரீலங்கா அரசின் சலுகைகளுக்கு தமிழ் தலைவர்கள் பலியாகிவிட்டதைப்போல உலகமெங்கும் வாழும் தமிழ் ஈழப் புலம்பெயர்ந்தவர்களும் கபாலியிலும் இறைவியிலும் மூழ்கிவிட்டனர். அவர்களின் சமூக வலைத்தளங்களில் எல்லாம் இன்றைய பேசு பொருள் இதுதான். எவரேனும் ஐநா இன்று கூடுகிறது, நீதியை பெறுவதில் எம் கடமை என்ன என்பதைக் குறித்து சிந்திக்கத் தயாராயில்லை. ஆனால் இனப்படுகொலையால் பாதிக்கப்பட்ட மக்கள் இன்னும் காயங்கள் ஆறாத நிலையில் வாழ்கிறார்கள். காணாமல் போகச் செய்யப்பட்டவர்களின் வீடுகள் இன்னும் அங்கலாய்ப்பு விழிகளைத் திறந்தபடியுள்ளனர்.
வடகிழக்கில் போரில் பாதிக்கப்பட்டவர்கள் இன்றும் மரணிக்கிறார்கள். இன்னும் இனப்படுகொலை நீடிக்கிறது. ஒரு நாள்காய்ச்சலுடன் மரணிப்பவர்களும் புற்றுநோயினால் மரணிப்பவர்களும் இன்னும் பல மர்ம மரணங்களால் மரணிப்பவர்களுமாய் இருக்கிறது தமிழ் ஈழம். இனப்படுகொலையின் விளைவு இன்னும் எங்களை அழித்துக் கொண்டே இருக்கிறது. தாமதிக்கப்படும் நீதி மறுக்கப்பட்ட நீதி என்பார்கள். ஆனால் ஸ்ரீலங்கா விவகாரத்தில் தாமதிக்கப்படுவது நீர்த்துப் போகச் செய்யவுமே என்றே புலப்படுகிறது. எனவே தாமதிக்கப்படும் நீதி என்பது நீதியை நீர்த்துப்போகச் செய்தலுமாகும்.
2011இலும் 2013இலும் ஐநாவை நோக்கி நீதி வேண்டி விழித்திருந்த எம் கண்கள் இன்று வேறு போதைகளில் மூழ்கிவிட்டது இதனால்தான். தமிழ் ஈழ இனப்படுகொலையை இவ்வாறே இழுத்துத்தடித்துச் சென்றால் நீதி வேண்டும் என்றும் என்று கேட்க ஈழத்தில் எவரும் இருக்கப்போவதில்லை என்பது ஸ்ரீலங்காவின் கணிப்பு. உலகத் தமிழர் எவரும் நீதிகேளார் என்பதும் ஸ்ரீலங்கா அரசின் திட்டம். ஸ்ரீலங்காவின் இனப்படுகொலை விவகாரத்தை நீர்த்துப்போகச் செய்யும் செயலுக்கு நாம் பலியாகிறோமா? நம்மை நாமே சுயவிசாரணை செய்து கொள்ளவும் நாமே நம்மை தட்டி விழித்துக்கொள்ளவும் செய்ய வேண்டிய காலம் இது.
இனப்படுகொலைக்கான நீதி என்பது கொல்லப்பட்டவர்களுக்கு செய்யப்படும் அஞ்சலி மாத்திரமல்ல, எஞ்சி வாழும் தமிழ் ஈழரின் வாழ்வுக்கும் அதுவே அடிப்படையானது. எனவே தமிழ் ஈழரும் உலகத் தமிழரும் ஸ்ரீலங்கா அரசின் தமிழ் இனப்படுகொலைக்குஎதிரான எம் போர்க்குணத்தை கூர்மைபடுத்த வேண்டிய அவசியமான தருணம் இதுவாகும். அதுவே தமிழீழ விடுதலைப் போராட்டத்தின் வெற்றிக்கும் முதல் படியாக அமையும்.
ஆசிரியர்,
செண்பகம்.
13.06.2016
