Designed by Iniyas LTD
ஈ.சி.ஆர். சாலையில் அறிவுறுத்தல் வாசகங்கள் அடங்கிய பேனர்கள்
ஈ.சி.ஆர். சாலையில் பஸ் விபத்து எண்ணிக்கை அதிகரித்து வருவதால், ஓட்டுனர், நடத்துனர்களுக்கு அறிவுறுத்தல் வாசகங்கள் அடங்கிய பேனர்கள் கோயம்பேடு பஸ் நிலையத்தில் வைக்கப்பட்டுள்ளன. 
சென்னையில் இருந்து புதுச்சேரி செல்லும் அரசு பஸ்களில் பயணிப்பவர்கள் மட்டுமின்றி, குடிபோதையில் வாகனம் ஓட்டுபவர்களும் பஸ்சில் சிக்கி விபத்துக்குள்ளாகி இறக்கின்றனர். கடந்த 16-ந்தேதி, கடப்பாக்கத்தில் பஸ்சில் இருந்து இறங்க முயன்ற ஒருவர் தவறி விழுந்து, சக்கரத்தில் சிக்கி பலியானார். அரசு பஸ் டிரைவர்கள், பஸ்சை நிறுத்தத்தில் நிறுத்தாமல் சிறிது தூரம் சென்று சாலையில் நிறுத்துவதாக குற்றச்சாட்டு எழுந்தது.
இதுகுறித்து ஆய்வு செய்த போக்குவரத்து அதிகாரிகள் கோயம்பேடு பஸ் நிலையத்தில் வெளியூர் பஸ்கள் நிறுத்தி வைக்கப்பட்டிருக்கும் நடைமேடைகளில் நடத்துனர், ஓட்டுனர்களுக்கு அறிவுறுத்தல் வாசகங்கள் அடங்கிய பேனர்களை வைத்துள்ளனர்.
அதில், கூறப்பட்டு இருப்பதாவது:-
* ஈ.சி.ஆர்., சாலையில் பஸ் நிழற்குடை உள்ள இடத்தில் பஸ்சை நிறுத்தவேண்டும்.
* சாலையில் பஸ்சை நிறுத்தி பயணிகளை இறக்கக்கூடாது.
* குடிபோதை ஆசாமிகள் ஏறிவிட்டால் நடத்துனர்கள் எச்சரிக்கையுடன் இருக்கவேண்டும்.
* விபத்து பகுதிகளான, மாமல்லபுரம், சீக்கனாய் குப்பம், கூவாத்தூர், கடப்பாக்கம், பூஞ்சேரி சாலை சந்திப்பு, வெண்ணாங்குப்பட்டு, கைதேனி குப்பம், மரக்காணம், கூனிமேடு, கணபதி செட்டிகுளம் ஆகிய இடங்களை கடக்கும் போதும், பஸ்சை நிறுத்தும் போதும் மிகுந்த கவனத்துடன் இருக்கவேண்டும்.
இதுபோன்ற வாசகங்கள் அதில் இடம் பெற்றுள்ளன.