Designed by Iniyas LTD
உத்தரகண்ட் மாநிலத்தில் கனமழை – பலி எண்ணிக்கை 50ஐ தாண்டியுள்ளது
உத்தரகண்ட் மாநிலத்தில் கனமழைக்கு பலியானோர் எண்ணிக்கை 50ஐ தாண்டியுள்ளது. கனமழை மேலும் 2 நாட்களுக்கு தொடரும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
நிலச்சரிவு காரணமாக, 12 பேரும், டேராடூனில் 7 பேரும் உயிரிழந்தனர். கோத்வார் பகுதியில், ஆற்றுவெள்ளத்தில் சிக்கிய கிராம மக்களை தேசிய பேரிடர் மீட்புப் படையினர், கயிறு கட்டி மீட்டனர். கனமழை மற்றும் நிலச்சரிவுகள் காரணமாக சாலைகள் துண்டிக்கப்பட்டிருப்பதால், மலைவாழ் மக்களை பாதுகாப்பான இடங்களுக்கு அழைத்துச் செல்வதில் சிக்கல் நீடிக்கிறது. மேற்கு வங்க மாநிலம் ஜல்பாய்குரி மாவட்டத்தில் பல கிராமங்களை ஆற்றுவெள்ளம் சூழ்ந்துள்ளது.
இதனால், நூற்றுக்கணக்கான மக்கள், பாதுகாப்பான இடங்களுக்கு வெளியேற முடியாமல் தவித்து வருகின்றனர். உத்தரப்பிரதேச மாநிலத்தில் உள்ள ஆறுகளில் அபாய அளவைத் தாண்டிவெள்ளம் கரைபுரண்டு ஓடுவதால், வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. நதிகளை ஒட்டியுள்ள 7 மாவட்டங்களைச் சேர்ந்த 500 கிராமங்கள், ஆபத்தில் சிக்கியுள்ளன.
இதனால் 4 லட்சத்திற்கும் அதிகமானோர் பாதிக்கப்பட்டுள்ளனர். பீகார் மாநிலத்திலும் கடுமையான வெள்ளப்பெருக்கு காரணமாக, ஆயிரக்கணக்கான மக்கள் பாதிக்கப்பட்டுள்ளனர்.
இதேபோல், மேகாலயாவில் தொடர்ந்து 2 நாட்களாக பெய்து வரும் மழையால் அங்கும் வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. அபாயமுள்ள பகுதிகளில் வசித்த ஆயிரத்து 500 பேர் முன்னெச்செரிக்கையாக பாதுகாப்பான இடங்களுக்கு அப்புறப்படுத்தப்பட்டுள்ளனர்.