Designed by Iniyas LTD
ஊடகவியலாளர்களிடம் மன்னிப்பு கோரியது ஸ்ரீலங்கா காவல்துறை!
ஸ்ரீலங்காவின் சிறப்பு அதிரடிப்படையின் கட்டளை அதிகாரி பிரதி பொலிஸ் மா அதிபர் ரஞ்சித் பெரேரா, ஊடகவியலாளர்களை அச்சுறுத்திய சம்பவம் தொடர்பில் மன்னிப்பு கோரப்பட்டுள்ளது.
அத்துடன், பிரதிக் பொலிஸ் மா அதிபர் ரஞ்சித் பெரேரா எதிராக கடுமையான ஒழுக்காற்று நடவடிக்கை எடுக்கப்படும் என உறுதியளிக்கப்பட்டுள்ளது.
கொழும்பில் நேற்று இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து தெரிவித்த பொலிஸ் பேச்சாளர் அஜித் ரோகண இதனை தெரிவித்துள்ளார்.
அத்துடன் குறித்த சமபவம் தொடர்பில் விசாரணை மேற்கொள்வதற்காக பொலிஸ் மா அதிபர் பூஜித ஜயசுந்தரவினால் குழுவொன்று நியமிக்கப்பட்டுள்ளதாகவும் அவர் கூறியுள்ளார்.
பிரேசிலில் இருந்து கடத்தி வரப்பட்ட பாரிய அளவிலான கொக்கெய்ன் போதைப்பொருள் அண்மையில் கைப்பற்றப்பட்டன.
இதனை ஜனாதிபதி மற்றும் நிதியமைச்சர் ஆகியோர பார்வையிடச் சென்றிருந்தனர். இதன் போது அங்கிருந்த சிறப்பு அதிரடிப்படை கட்டளை அதிகாரி ஊடகவியலாளர்களை எச்சரித்திருந்தார்.
ஊடகத்தை எப்படிக் கட்டுப்படுத்துவதென்று தனக்குத் தெரியும் என தெரிவித்துள்ள ரஞ்சித் பெரேரா ஊடகவியலாளர்களை எச்சரிக்கும் வகையில் கருத்துகளையும் வெளியிட்டிருந்தார்.
எனினும், இது இலங்கை பொலிஸ் மற்றும் சிறப்பு அதிரடிப்படையினரின் கருத்து அல்லவென குறிப்பிட்டுள்ள பொலிஸ் பேச்சாளர் அஜித் ரோகண இதனை வன்மையாக கண்டிப்பதாகவும் தெரிவித்துள்ளார்.
இதேவேளை, குறித்த விடயம் தொடர்பில் அனைத்து ஊடகங்கள் மற்றும் ஊடகவியலாளர்களிடம் மன்னிப்புக் கோருவதாக பொலிஸ் பேச்சாளர் அஜித் ரோகண மேலும் தெரிவித்துள்ளார்.