Designed by Iniyas LTD
” எங்களால் எடுக்கப்படும் பல தீர்மானங்கள் சிறிலங்கா அரசால் முறியடிக்கப்படுகின்றது ” – வடக்கு முதல்வர் பிரித்தானிய தூதுவரிடம் முறையீடு
இலங்கையில் இடம்பெற்ற போர்க்குற்றங்கள் தொடர்பில் ஐ.நா அமர்வில் சர்வதேச விசாரணையைக் கோருவதற்கான உரிய நடவடிக்கையை பிரித்தானிய பிரதமர் டேவிட் கமரூன் எடுத்து வருவதாக வடமாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரனிடம் சிறிலங்காவுக்கான பிரித்தானிய நாட்டின் தூதுவர் கூறியதாக முதலமைச்சர் தெரிவித்துள்ளார்.
யாழ்ப்பாணத்திற்கு இன்று வருகை தந்த சிறிலங்காவுக்கான பிரித்தானிய தூதுவர் ஜோன் ரங்கின் வடமாகாண முதலமைச்சரை யாழ்.கோவில் வீதியுள்ள அவரது வாசஸ்தலத்தில் சந்தித்து கலந்துரையாடினார். இதனையடுத்து ஊடகவியலாளர்களுக்கு கருத்து தெரிவித்த முதலமைச்சர் மேலும் தெரிவிக்கையில்:-
ஆளுநருடன் சேர்ந்து ஒற்றுமையாக மாகாணசபையை நிர்வகித்தால் என்ன? என்று எம்மிடம் கேட்டிருந்தனர். இதற்கு பதிலளித்த நான் ஆளுநருடனும் அரசுடனும் இணைந்து மாகாண சபையை நிர்வகிக்க நாங்கள் எல்லா நடவடிக்கைகளையும் எடுக்கின்றோம். அத்தோடு தனிப்பட்ட ரீதியில் ஆளுநருடன் எங்களுக்கு எந்த வித பிரச்சனையும் இல்லை பல சந்தர்ப்பங்களில் எங்களால் எடுக்கப்படும் பல தீர்மானங்கள் முறியடிக்கப்படுகின்றது என்று பதிலளித்தேன். .
இதனையடுத்த சர்வதேச விசாரணை குறித்து ஊடகவியலாளர் ஒருவரினால் எழுப்பட்ட கேள்விக்கு பதிலளித்த அவர்:-
இந்த விடயம் தொடர்பாக தானாகச் சொல்லவில்லை. அதேவேளை தங்களின் பிரதமர் டேவிட் கமரூன் சிறிலங்காவுக்கு எதிராக சர்வதேச விசாரணையைக் கோருவோம் என்று கூறிய கூற்றுக்கு ஏற்ப நடவடிக்கையை எடுத்துக்கொண்டிருக்கின்றார் என்று எங்கள் மனசுக்கு சந்தோசம் அளிக்கும் விதத்தில் அவர் உரிய நடவடிக்கை எடுப்பார் என்றும் தம்மிடம் கூறியதாக முதலமைச்சர் மேலும் தெரிவித்தார்.