Designed by Iniyas LTD
எனது தொகுதி மக்களின் பிரச்சினையை தீர்க்காவிட்டால் ராஜினாமா செய்வேன் : சூலூர் எம்.எல்.ஏ. கனகராஜ்
எனது தொகுதி மக்களின் பிரச்சினையை தீர்க்காவிடில் ராஜினாமா செய்து விடுவேன்.5 எம்.எல்.ஏ.க்கள் போனால் ஆட்சியே போய்விடும் சூலூர் அ.தி.மு.க. எம்.எல்.ஏ. மிரட்டல் விடுத்துள்ளார்.
திருப்பூர் மாவட்டம் சாமளாபுரம் பகுதியில் புதிய மதுக்கடை திறக்கப்பட்டதற்கு எதிர்ப்பு தெரிவித்துஅந்த பகுதியை சேர்ந்த பொது மக்கள் நேற்று முன்தினம் போராட்டம் நடத்தினர். அப்போது அந்த வழியாக வந்த சூலூர் அ.தி.மு.க. எம்.எல்.ஏ. கனகராஜை முற்றுகையிட்டனர்.
இதையடுத்து அவரும் பொது மக்களுடன் இணைந்து போராட்டம் நடத்தினார். அப்போது இந்த டாஸ்மாக் கடையை அகற்றாவிட்டால் பதவியை ராஜினாமா செய்வேன் என்றார். மேலும் அவர் கூறும் போது நான் ராஜினாமா செய்தால் இந்த தொகுதிக்கு இடைத்தேர்தல் வரும். தேர்தல் வந்தால் மக்களுக்கு பணம் கிடைக்கும். அவர்கள் சந்தோஷமாக இருக்கட்டும் என்றார். அவரது இந்த பேச்சு பரபரப்பை ஏற்படுத்தியது.
பின்னர் எம்.எல்.ஏ. கனகராஜ் அங்கிருந்து புறப்பட்டு சென்றார். அவர் சென்ற சிறிது நேரத்தில் போலீசார் தடியடி நடத்தி பொது மக்களை விரட்டி அடித்தனர். இதில் ஈஸ்வரி என்ற பெண்ணின் கன்னத்தில் கூடுதல் டி.எஸ்.பி. பாண்டியராஜன் அடித்தார். மேலும் தடியடியில் விசைத்தறி உரிமையாளர் சிவகணேசன் என்பவரது மண்டை உடைந்தது.
மதுக்கடைக்கு எதிரான போராட்டம் தீவிரம் அடைந்ததால் நேற்று சாமளாபுரம் பகுதியில் பதட்டமான சூழ்நிலை உருவானது. இந்த நிலையில் சூலூர் தொகுதி எம்.எல்.ஏ. கனகராஜ் நிருபர்களுக்கு பேட்டி அளிததார். அப்போது அவர் கூறியதாவது:-
இந்த தொகுதியில் 2 லட்சத்து 70 ஆயிரம் வாக்காளர்கள் உள்ளனர். எனக்கு 1 லட்சத்து 12 ஆயிரம் வாக்காளர்கள் தான் ஓட்டு போட்டனர். மற்றவர்கள் எல்லோரும் எனக்கு எதிராகத்தான் உள்ளனர்.
ஜெயலலிதா மறைவுக்கு பின்பு தான் நான் தடாலடியாக பேசுகிறேன் என்கிறார்கள். அது தவறு. நான் எப்போதும் உண்மையை எடுத்துக்கூற தவறியதில்லை. எனது தொகுதி மக்களின் பிரச்சினையை தீர்க்காவிடில் ராஜினாமா செய்து விடுவேன். வேறு அணிக்கு போய்விடுவேன் என தொடர்ந்து மிரட்டி வருவதாக கூறுகிறார்கள். நான் யாரையும் மிரட்டவில்லை. அந்தந்த காலகட்டம் வரும் போது எல்லாம் தானாக நடக்கும். எனக்கு கட்சியில் எந்த நெருக்கடியும் இல்லை. மக்களிடம் தான் நெருக்கடி உள்ளது. நான் மக்களின் பிரதிநிதி. மக்கள் சொல்வதை அரசிடம் எடுத்து சொல்வது எனது வேலை. பிரச்சினையை தீர்த்து வைக்கும்படி அரசிடம் கூறுவேன். நிலைமை மோசமாக இருந்தால் அது பற்றி அரசிடம் விளக்கி கூறுவேன். நடவடிக்கை எடுக்க வேண்டியது அரசாங்கம் தான். நான் யாருக்கும் பயப்பட மாட்டேன். இன்னும் 5 எம்.எல்.ஏ.க்கள் போனால் ஆட்சியே போய்விடும். இவ்வாறு அவர் கூறினார்.