Designed by Iniyas LTD
ஐக்கிய தேசிய கட்சியின் 70 ஆவது ஆண்டு நிறைவு நாள்
ஐக்கிய தேசிய கட்சியின் 70 ஆவது ஆண்டு நிறைவை முன்னிட்டு ஏற்பாடு செய்யப்பட்டுள்ள பிரதான வைபவம் இன்று நடைபெறவுள்ளது. கட்சியின் தலைவர் ரணில் விக்ரமசிங்க தலைமையில் இன்று முற்பகல் 9 மணிக்கு கெம்பல் மைதானத்தில் வருடப் பூர்த்தி வைபவம் நடைபெறவுள்ளதாக ஐக்கிய தேசிய கட்சியின் பொதுச் செயலாளர் அமைச்சர் கபீர் ஹாஷிம் குறிப்பிட்டார்.
இந்த வைபவத்தில் விசேட அதிதியாக ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன கலந்துகொள்ளவுள்ளதாகவும் அவர் தெரிவித்தார். சகல கட்சிகளினதும் தலைவர்கள், ஐக்கிய தேசிய கட்சியுடன் இணைந்துள்ள கட்சிகளின் பிரதிநிதிகள், முன்னாள் பாராளுமன்ற, மாகாண சபைகள், உள்ளூராட்சி மன்ற உறுப்பினர்கள் மற்றும் சகல தேர்தல் தொகுதிகளில் இருந்தும் சிரேஷ்ட அங்கத்தவர்களுக்கும் கட்சியின் வருடப் பூர்த்தி வைபவத்தில் கலந்துகொள்வதற்கான அழைப்பை விடுத்துள்ளதாக அமைச்சர் கபீர் ஹாஷிம் கூறினார். இதுதவிர ஐக்கிய தேசிய கட்சியின் 70 ஆவது ஆண்டு பூர்த்தி வைபவத்தில் கட்சியின் வெளிநாட்டு கிளைகளின் பிரதிநிதிகளும் கலந்துகொள்ளவுள்ளதாக கட்சியின் பொதுச் செயலாளர் சுட்டிக்காட்டினார்.
பெருந்திரலான கட்சி ஆதரவாளர்களும் இன்றைய கட்சியின் வருடப் பூர்த்தி வைபவத்தில் கலந்துகொண்டு சிறப்பிக்கவுள்ளதாக அவர் குறிப்பிட்டார். கடந்த 6 ஆம் திகதி நடைபெற்ற செயற்குழு கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட யோசனைகளை இன்றைய வருடப் பூர்த்தி வைபவத்தில் சமர்ப்பிக்கவுள்ளதாக அமைச்சர் கபீர் ஹாஷிம் தெரிவித்தார். இதேவேளை, கெம்பல் மைதானத்தில் நடைபெறவுள்ள ஐக்கிய தேசிய கட்சியின் 70 ஆவது வருடப் பூர்த்தி வைபவத்தை முன்னிட்டு காலை 6 மணிமுதல் நண்பகல் 12 மணி வரை பொரள்ளை பகுதியில் வாகன நெறிசல் ஏற்படலாம் என பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர்.
இதன் காரணமாக கெம்பல் மைதானத்தை அண்மித்துள்ள வீதிகளின் வாகனப் போக்குவரத்து மட்டுப்படுத்தப்பட்டுள்ளது. மாற்று பாதைகளை பயன்படுத்தி வாகன நெறிசலை தவிர்ப்பதற்கு ஒத்துழைப்பு வழங்குமாறு பொலிஸ் தலைமையகம், வாகன சாரதிகளை கேட்டுள்ளது.