தமிழினத்திற்கான தனித்துவமான ஊடகம்

காஷ்மீர் பிரச்சனையில் வன்முறையாளர்களுடன் சமரசம் இல்லை: அருண் ஜேட்லி திட்டவட்டம்

arun-jaitley-1jaitleyஜம்மு-காஷ்மீரில் வன்முறையில் ஈடுபட்டுள்ளவர்களுடன் அரசு சமரசம் செய்து கொள்ளாது என்று மத்திய நிதியமைச்சர் அருண் ஜேட்லி தெரிவித்தார்.

இதுதொடர்பாக ஜம்மு-காஷ்மீர் மாநிலம், ஜம்முவில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற பொதுக் கூட்டத்தில் அவர் பேசியதாவது:

ஜம்மு-காஷ்மீர் தொடர்பாக பிரதமர் மோடி 3 கருத்துகளை வலியுறுத்தியுள்ளார். அதில் முதலாவது, நாட்டின் பாதுகாப்பு மற்றும் இறையாண்மை விஷயத்தில் சமரசம் செய்து கொள்ளக் கூடாது; வன்முறையில் ஈடுபடுவோருடன் சமரசம் செய்யக் கூடாது என்பதாகும். இரண்டாவது, பல போர்களை எதிர்கொண்ட ஜம்மு-காஷ்மீரில் கடந்த 60 ஆண்டுகளாக ஆட்சியில் இருந்த காங்கிரஸ், தேசிய மாநாடு கட்சிகள் வளர்ச்சியை ஏற்படுத்தவில்லை. எனவே, அங்கு வளர்ச்சியை ஏற்படுத்த வேண்டும் என்பது. மூன்றாவது, பாஜக செல்வாக்கு பெற்ற இடமாக திகழும் ஜம்மு மீது சிறப்பு கவனம் செலுத்தப்பட வேண்டும் என்பதாகும்.

ஜம்மு-காஷ்மீர் நிலவரம் தற்போது மிகவும் மோசமாகி விட்டது என்பதை ஒப்புக் கொள்கிறேன். அதேநேரத்தில், காஷ்மீரில் பாதுகாப்புப் படையினர் மீதும், போலீஸôர் மீதும் கற்களை வீசித் தாக்குதல் நடத்துவோர் சத்தியாகிரகிகள் கிடையாது; அவர்கள் வலுச்சண்டைக்கு செல்பவர்கள். ஏனெனில், 10 போலீஸôர் மீது 2 ஆயிரம் பேர் கற்களை வீசுவது என்பது தாக்குதலாகும்.

குறுகிய பார்வை கொண்டவர்களுக்கு, இந்த சம்பவம் தொடர்பான கைது மட்டுமே தெரிகிறது. கற்கள் வீச்சில் காயமடைந்து மருத்துவமனையில் சிகிச்சை பெறும் ஆயிரக்கணக்கான பாதுகாப்புப் படையினர், போலீஸôரை அவர்களுக்குத் தெரியவில்லை.

ஜம்முவில் கடந்த 2008-ஆம் ஆண்டு அமர்நாத் யாத்திரை தொடங்கியபோது, அவர்கள் புதிய வழியை கண்டறிந்தனர். அப்போதுதான் பாதுகாப்புப் படையினர் மீது கற்களை வீசுவது தொடங்கப்பட்டது. பள்ளிக்கு செல்லும் சிறுவர்களிடம், பாதுகாப்புப் படையினர், போலீஸôர் மீது தாக்குதல் நடத்துவதற்காக, அவர்களது பைகளில் புத்தகங்களுக்குப் பதிலாக கற்களை வைத்து கொடுக்கப்பட்டது.

காஷ்மீரில் நிலவும் பதற்றத்துக்கு பாகிஸ்தானே காரணம். கடந்த 1947-ஆம் ஆண்டில் நாடு பிரிவடைந்த பிறகு, காஷ்மீரில் பிரச்னையை பாகிஸ்தான் தூண்டிவிட்டது. அந்த மாநிலத்தை கைப்பற்றும் திட்டத்துடன் போர்களை தொடுத்தது. ஆனால், அதில் தோல்வியடைந்ததும் தற்போது புதிய வழியில் இந்தியாவின் இறையாண்மை மீது பாகிஸ்தான் தாக்குதல் நடத்துகிறது.

முன்பு போலில்லாமல் இந்த முறை, பாகிஸ்தான், பிரிவினைவாதிகள், மதவாத சக்திகள் ஆகியவை புதிய வழியில் கைகோத்துள்ளன. இது மிகப்பெரிய சவாலாகும். இந்த சூழ்நிலையில், பாதுகாப்பு, இறையாண்மை ஆகியவற்றில் சமரசம் செய்யாத நிலையே நாட்டுக்கு தேவையாகும். பிரிவினைவாதிகளுக்கு எதிரான நமது நாட்டின் போராட்டத்துக்கு ஜம்மு-காஷ்மீர் மக்கள் ஆதரவு அளிக்க வேண்டும். அப்போதுதான் பாகிஸ்தானின் புதிய வழியிலான போர் உத்தி தோல்வியடையும்.

கடந்த 1947-ஆம் ஆண்டில் பாகிஸ்தான் போர் தொடுத்தபோது, இந்தியா தயார் நிலையில் இல்லை. இதனால், ஜம்மு-காஷ்மீர் மாநிலத்தின் சில பகுதிகளை பாகிஸ்தான் பிடித்துக் கொண்டது. எனினும், கடந்த 1965, 1971-ஆம் ஆண்டுகளில் நடந்த போர்கள், இந்திய ராணுவத்தை வலுவானதாக மாற்றிவிட்டன.

போர்களில் தோல்வியடைந்ததும், காஷ்மீர் விவகாரத்தை சர்வதேச விவகாரமாக்க பாகிஸ்தான் முயற்சித்தது. இருப்பினும் பாகிஸ்தான் சொல்வதைக் கேட்க உலக நாடுகள் தயாராக இல்லை. போர்கள் மூலம் நாம் வெற்றி பெற முடியாது என்பதை பாகிஸ்தான் கடந்த 1990-ஆம் ஆண்டில் புரிந்து கொண்டது. எனவே, பயங்கரவாதிகளுக்கு பயிற்சி கொடுத்து இந்தியாவுக்குள் அனுப்புவதை தொடங்கியது. ஆனால், இதையும் இந்தியா எதிர்கொண்டது. இதனால் ஆயிரக்கணக்கான பயங்கரவாதிகள் கொல்லப்பட்டனர் என்றார் ஜேட்லி.

ஆம்னெஸ்டி விவகாரம்: ஆம்னெஸ்டி இன்டர்நேஷனல் அமைப்புத் தொடர்பாக ஜேட்லி கருத்து கூறியபோது, இந்த விவகாரத்தில், காங்கிரஸம், அக்கட்சியின் ஆட்சி நடைபெறும் கர்நாடக மாநில அரசும் வாக்குவங்கி அரசியலில் ஈடுபடுவதாக குற்றம்சாட்டினார்.

Comments
Loading...