Designed by Iniyas LTD
சபரிமலை கோவிலில் பெண்களை ஏன் அனுமதிக்கக் கூடாது? : உச்சநீதிமன்றம் கேள்வி
சபரிமலை ஐயப்பன் கோவிலில் பெண்களை அனுமதிக்க மறுப்பது அரசியலமைப்புச் சட்டத்திற்கு எதிரானது என உச்சநீதிமன்றம் கூறியிருப்பது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. பெண்களை கோவிலுக்குள் அனுமதிப்பது குறித்து கேரள அரசு மற்றும் திருவாங்கூர் தேவசம் போர்டு பதிலளிக்கவும் நீதிபதிகள் உத்தரவிட்டுள்ளனர். சபரிமலை ஐயப்பன் கோவிலில் பெண் பக்தர்களையும் அனுமதிக்கக் கோரி இந்திய இளம் வழக்கறிஞர்கள் சங்கம் சார்பில் தொடரப்பட்ட வழக்கு உச்சநீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தது.
அப்போது ஐயப்பன் கோவிலில் பெண் பக்தர்களுக்கு அனுமதி மறுக்கப்படுவது ஏன் என்று கேள்வி எழுப்பிய நீதிபதிகள் அரசியலமைப்பு அனுமதி வழங்கியுள்ள நிலையில், பெண்கள் கோவிலுக்குள் நுழைவதை தடுக்க முடியாது என்று கூறினர். இந்த விவகாரத்தில் சபரிமலை ஐயப்பன் கோவிலை நிர்வகிக்கும் திருவாங்கூர் தேவசம் போர்டு தனது நிலைப்பாட்டை தெளிவுபடுத்த வேண்டும் என்று வலியுறுத்திய நீதிபதிகள் இதுகுறித்து கேரள அரசு பிரமானப் பத்திரம் தாக்கல் செய்யவும் உத்தரவிட்டனர்.
கேரள மாநிலத்தில் உள்ள பிரபலமான சபரிமலை ஐயப்பன் கோவிலில் நுழைய 10 முதல் 50க்குட்பட்ட பெண்களுக்கு அனுமதியில்லை. பல ஆண்டுகளாக பின்பற்றப்பட்டு வந்த இந்த நடைமுறைக்கு எதிராக தொடங்கப்பட்ட மனுவை தள்ளுபடி செய்துவிட்ட உயர்நீதிமன்றம் பெண்களுக்கு விதிக்கப்பட்ட தடையை உறுதிசெய்தது குறிப்பிடத்தக்கது.