Designed by Iniyas LTD
சமஸ்டி உரிமை மறுக்கப்பட்டால் தனிநாடு வேண்டும் – பொது அமைப்பு
புதிய அரசியலமைப்பின் ஊடாக தமிழ் மக்களுக்கு சமஸ்டி உரிமை மறுக்கப்பட்டால் தனிநாட்டையே தமிழ் மக்களுக்கு வழங்க வேண்டும் என பொது அமைப்புக்கள் மற்றும் பொது மக்கள் வலியுறுத்தியுள்ளனர்.
புதிய அரசியலமைப்பு சீர்திருத்தங்கள் தொடர்பில் பொது மக்களிடம் கருத்துக்களை கேட்டறியும் நடவடிக்கை நேற்று யாழ். மாவட்டச் செயலகத்தில் இரண்டாவது நாளாகவும் நடைபெற்றது. இதன்போது கருத்துக்களை முன்வைத்த பொது அமைப்புக்கள் மற்றும் பொது மக்களே இவ்வாறு வலியுறுத்தியுள்ளனர். இவ்வாறு வழக்கப்படும் தனிநாடு தமிழீழமாக அமைய வேண்டும் இதற்கு சர்வதேச நாடுகள் உதவிகளை வழங்க வேண்டும் என அவர்கள் கேட்டுக்கொண்டுள்ளனர்.
புதிய அரசாங்கமும் தமிழர்களுடைய உரிமைகளை தர மறுத்தால், சர்வதேசம் அதனை புரிந்து கொள்ள வேண்டும். சிங்களவர்கள் தமிழ் மக்களுக்கு உரிமைகளை வழங்க மாட்டார்கள். அத்துடன் இந்த முறையும் தமிழ் மக்கள் ஏமாற்றப்பட்டால் மீண்டும் ஒரு ஆயுதப்போராட்டத்திற்கு அடிகோலும் எனவும் அவர்கள் எச்சரிக்கை விடுத்துள்ளனர். தமிழ் மக்களின் தேசிய இனப்பிரச்சனை மிக நீண்ட காலமாக நாட்டில் இடம்பெற்று வருகின்றது. ஆங்கிலேயர் ஆட்சியின் பின்னர் சிங்களவர்களுக்கு தாரை வார்த்துக் கொடுக்கப்பட்ட தேசம் இன்றும் சிங்களவர்களுக்கு அடிமையானதாகவே இருந்து வருகின்றது.
எமக்கான உரிமைகள் தருவதாக ஆட்சியாளர்களால் கூறப்பட்டு ஏமாற்றப்பட்டு தொடர்ந்தும் ஏமாற்றப்பட்டே வந்துள்ளோம். இன்றும் எதிர்கட்சியில் உள்ள எமது அரசியல் தலைவர்கள் ஏமாற்றப்பட்டு வருகின்றார்கள்.எமது கருத்துக்கள் பெறப்பட்டு புதிய அரசியல் அமைப்பு உருவாக்கத்தின் போது எமக்கான தன்னாட்சி அதிகாரம் வழங்கப்படும் வகையில் அரசியல் அமைப்பு அமைய வேண்டும். மேலும் இந்த அரசாங்கமும் எம்மிடம் கருத்துக்களை பெற்று ஏமாற்றும் செயலில் இறங்குமாயின், எமது விடுதலை போராட்டத்தை அழிப்பதற்கு உதவிய சர்வதேச நாடுகள் எமக்கான தனி நாடான தமிழீழத்தை பெற்று தர வேண்டும் என பொது அமைப்புக்கள் மற்றும் பொது மக்கள் வலியுறுத்தியுள்ளனர்.