Designed by Iniyas LTD
சுவிசில் சிறப்பாக நடைபெற்ற வணக்க நிகழ்வு
தேசத்தின் குரல் அன்ரன் பாலசிங்கம் அவர்களின் 08 ஆம் ஆண்டு நினைவு வணக்க நிகழ்வு 21.12.2014 ஞாயிற்றுக்கிழமை அன்று சுவிசில் லுட்சேர்ன்; மாநிலத்தில் மிகவும் உணர்வெழுச்சியோடு சிறப்பாக நடைபெற்றது. இந்நிகழ்வில் தேசத்தின் குரல் அன்ரன் பாலசிங்கம், தமிழீழ அரசியற்துறைப் பொறுப்பாளர் பிரிகேடியர் சு.ப.தமிழ்ச்செல்வன் உட்பட்ட 7 மாவீரர்கள் மற்றும் தமிழீழ விடுதலைப் புலிகளின் பிரான்ஸ் கிளையின் பொறுப்பாளர் கேணல். பருதி ஆகிய மவீரர்களின் நினைவுகளைத் தாங்கி சுவிஸ் வாழ் தமிழ் மக்களால் மிகவும் உணர்வெழுச்சியோடு நினைவுகூர்ந்து வணக்கம் செலுத்தப்பட்டனர்.
சுவிஸ் தமிழர் ஒருங்கிணைப்புக் குழுவினரின் ஏற்பாட்டில் நடைபெற்ற இவ் வணக்க நிகழ்வில் முதலில் பொதுச்சுடரேற்றி, தமிமீழத் தேசியக்கொடி ஏற்றப்பட்டது. அதனைத் தொடர்ந்து ஈகைச்சுடர் ஏற்றப்பட்டு அகவணக்கம், மலர்வணக்கம் என்பன செலுத்தப்பட்டன. தேசத்தின் குரலின் வணக்க நிகழ்வைத் தரிசிக்க வந்த பெருந்தொகையான மக்கள் மலரஞ்சலி செலுத்திக்கொண்டிருந்த சமவேளையில், கலைப் பண்பாட்டுக் கழக இசைக்கலைஞர்களால் மாவீரர் நினைவுசுமந்த எழுச்சிப் பாடல்கள் இசைக்கப்பட்ட போது மிகவும் உணர்வெழுச்சியாக அமைந்தது.
சுவிஸ் லுட்சேர்ன் மாநிலத்தில் நடைபெற்ற இவ் வணக்க நிகழ்வில் நீண்ட காலத்துக்குப் பின்பு மிகவும் பெருந்தொகையான மக்கள் கலந்துகொண்டமையானது மாவீரர்கள் மீதும் எமது தேசத்தின் மீதும் எமது மக்கள் கொண்டிருக்கும் ஆழமான காதலை வெளிப்படுத்தி நிற்கிறது. இந் நிகழ்வில் கலந்துகொண்ட அனைத்து உள்ளங்களும் வெகு எழுச்சியோடும் மிகவும் உணர்வுபூர்வமாகவும் கலந்துகொண்டிருந்தமை, தமிழீழ விடுதலைப் போராட்டத்தில் எமது மக்கள் நம்பிக்கையோடும் உறுதியோடும் தொடர்ந்து பயணிப்பதைச் சுட்டிநிற்கிறது.
மேலும், இந் நிகழ்வில் சுவிசில் தமிழர் ஒருங்கிணைப்புக் குழவினரால் சிறப்பு வெளியீடுகள் வெளியிட்டு வைக்கப்பட்டன. உலகத் தமிழர் பேரமைப்பின் அறக்கட்டளை சார்பில் தமிழீழத் தேசியத் தலைவரின் அகவை அறுபதை முன்னிட்டு வெளியிட்டு வைக்கப்பட்ட தமிழீழத் தேசியத் தலைவர் மேதகு வே. பிரபாகரன் அவர்களின் சிந்தனைகளின் தொகுப்பு மற்றும் தலைவர் அவர்களின் அகவை அறுபது வெண்பாக்கள் உள்ளடங்கிய சிறப்பு நூல்கள் வெளியிட்டுவைக்கப்பட்டன.
மாவீரர் வித்துக்களான அரசியல் பெருந்தகைகள் மற்றும் புலத்தில் அயராது உழைத்த கேணல். பருதி ஆகியோரின் நினைவுகள் சுமந்த இவ்வணக்க நிகழ்வின் எழுச்சி நிகழ்வுகளாக இளையோர்களின் எழுச்சி நடனங்கள், கவியரங்கம் மற்றும் காலத்தின் தேவையை எடுத்துரைக்கும் சிறப்புரை, பேச்சுக்கள், கவிதைகள் என்பன இடம்பெற்றன. அத்துடன், மாவீரர் வித்துக்களின் நினைவுகள் சுமந்த காணொளிக் காட்சித் தொகுப்புக்களும் அகன்ற வெண்திரையில் காண்பிக்கப்பட்டன.
நிகழ்வின் இறுதியாக ‘நம்புங்கள் தமிழீழம் நாளை பிறக்கும்“ என்னும் புரட்சிப் பாடலைத் தொடர்ந்து தமிழீழத் தேசியக்கொடி இறக்கப்பட்டு, தமிழர்களின் தாரக மந்திரத்துடன் நிகழ்வுகள் யாவும் எழுச்சியுடன் நிறைவுபெற்றன.
சுவிஸ் தமிழர் ஒருங்கிணைப்புக் குழு
