Designed by Iniyas LTD
சென்னை மெரினாவில் கடற்கரையை சுத்தப்படுத்தும் நிகழ்ச்சி ஏற்பாடு
‘‘தமிழக முதல்-அமைச்சர் உத்தரவுப்படி, மெரினா கடற்கரையை சுத்தப்படுத்தவும், கடற்கரை சாலைகளை மேம்படுத்தவும் புதிய நடவடிக்கைகள் எடுக்கப்படும்’’, என்று சென்னை மாநகராட்சி மேயர் சைதை துரைசாமி தெரிவித்தார்.
உலகம் முழுவதும் ‘சர்வதேச கடற்கரை தூய்மைப்படுத்தும் தினம்’ நேற்று கடைபிடிக்கப்பட்டது. இதையொட்டி தமிழக கடலோர காவல்படை சார்பில் சென்னை மெரினாவில் கடற்கரையை சுத்தப்படுத்தும் நிகழ்ச்சி ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. இந்த நிகழ்ச்சியில் சென்னை மாநகராட்சி மேயர் சைதை துரைசாமி சிறப்பு விருந்தினராக கலந்துகொண்டார்.
இதில் தமிழக கடலோர பாதுகாப்புப்படை ஏ.டி.ஜி.பி. சைலேந்திர பாபு, கிழக்கு பிராந்திய இன்ஸ்பெக்டர் ஜெனரல் எஸ்.பி.சர்மா, கூடுதல் இன்ஸ்பெக்டர் ஜெனரல் எஸ்.தியாகி, கடற்படை காவல் அதிகாரிகள், பள்ளி, கல்லூரி மாணவ-மாணவிகள், என்.சி.சி., என்.எஸ்.எஸ். உள்ளிட்ட இயக்கங்களைச் சேர்ந்த மாணவர்கள், தன்னார்வ தொண்டர்கள், சமூக ஆர்வலர்கள் உள்பட ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் கலந்துகொண்டனர்.
கடற்கரையை சுத்தப்படுத்தும் பணியை மேயர் சைதை துரைசாமி கொடியசைத்து தொடங்கி வைத்தார். பின்னர் அவர் பேசியதாவது:- உலகின் மிக அழகான கடற்கரையான மெரினா கடற்கரையை சுத்தப்படுத்தவும், கடற்கரை சாலையை மேம்படுத்தும் வகையிலும் முதல்-அமைச்சர் ஜெயலலிதா புதிய திட்டங்களை அறிவித்துள்ளார். மெரினா கடற்கரை மாசுபடுவது குறித்து சென்னை ஐகோர்ட்டில் ஒரு வழக்கு நடந்து வருகிறது.
வழக்கின் முடிவு விரைவில் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்த வழக்கு முடிந்ததும் முதல்- அமைச்சரின் உத்தரவின் படி மெரினா கடற்கரையை சுத்தப்படுத்தவும், கடற்கரை சாலையை மேம்படுத்தவும் விரைவில் புதிய நடவடிக்கைகள் எடுக்கப்படும்.
மேலும், மீனவ குடும்பங்களைச் சேர்ந்த படித்த இளைஞர்களிடம் கடற்கரையை தூய்மையாக வைத்திருப்பது பற்றியும், பாதுகாப்பது குறித்தும் விளக்கம் அளிக்கப்பட்டு வருகிறது. எனவே இனிவரும் காலங்களில் கடற்கரை சுத்தப்படுத்தப்பட்டு புதுப்பொலிவுடன் விளங்கும். அதனை அனைவரும் பார்க்கத்தான் போகிறீர்கள். இவ்வாறு மேயர் சைதை துரைசாமி பேசினார்.
நிகழ்ச்சியில் தமிழக கடலோர பாதுகாப்புப்படை ஏ.டி.ஜி.பி. சைலேந்திர பாபு கூறுகையில், ‘‘இந்தியாவிலேயே, தமிழகத்தில் தான் முதன்முறையாக கடலோர காவல்படைக்கு போலீசார் நியமிக்கப்பட்டனர். தற்போது கடலோர காவல்படைக்கு புதிதாக 30 எந்திர படகுகள் கொடுக்கப்பட்டுள்ளன. இதன்மூலம் எந்திர படகுகளின் எண்ணிக்கை 48 ஆக உயர்ந்துள்ளது.
மேலும், மீனவர்களின் பாதுகாப்புக்காக ‘1093’ என்ற எண் அறிமுகப்படுத்தப்பட்டு , சிறப்பாக நடைமுறைப்படுத்தப்பட்டு வருகிறது. தற்போது புதிதாக 500 இளைஞர்கள் தேர்வு செய்யப்பட்டு கடலோரப்பகுதிகளில் பாதுகாப்பிற்கும், ரோந்துப்பணிகளிலும் ஈடுபடுத்தப்பட்டு வருகின்றனர். சமீபத்தில் பாகிஸ்தான் உளவாளி அருண்செல்வராசன் கைது எதிரொலியால், கூடுதல் விழிப்புணர்வுடன் இருக்கிறோம். எப்போதும், எதற்கும் தயார் நிலையில் நாங்கள் உள்ளோம்’’, என்றார்.
இந்த நிகழ்ச்சியில் மாணவர்களோடு, மாணவர்களாக மேயர் சைதை துரைசாமி கடற்கரையில் கிடந்த பிளாஸ்டிக் பொருட்கள், குப்பைகளை எடுத்து சுத்தப்படுத்தும் பணியில் ஈடுபட்டார். அவருடன் போலீஸ் அதிகாரிகள், கடலோர பாதுகாப்பு அதிகாரிகள் என அனைவரும் கடற்கரையை சுத்தப்படுத்தும் பணியினை மேற்கொண்டனர். இதனால் நேற்று காலை சென்னை மெரினா கடற்கரை புதுப்பொலிவுடன் காணப்பட்டது.
‘சர்வதேச கடற்கரை சுத்தப்படுத்தும் தினத்தையொட்டி, சென்னை பட்டினம்பாக்கம், பெசன்ட்நகர் உள்ளிட்ட கடற்கரைகளில் தன்னார்வ தொண்டு நிறுவனங்கள், மாணவ-மாணவிகள் என ஏராளமானோர் கடற்கரையை சுத்தப்படுத்தும் பணியில் ஈடுபட்டனர்.