தமிழினத்திற்கான தனித்துவமான ஊடகம்

ஜனநாயகத்தினை காப்பாற்ற எங்கள் கூட்டணிக்கு ஒரு வாய்ப்பு தாருங்கள் – வைகோ

ம.தி.மு.க. பொதுச் செயலாளர் வைகோ நேற்று கோவில்பட்டி தொகுதிக்கு உட்பட்ட கழுகுமலை, செட்டிகுறிச்சி, கயத்தார், கடம்பூர், காமநாயக்கன்பட்டி, துறையூர், கரிசல்குளம், பாண்டவர்மங்கலம், அன்னை தெரசா நகர், மந்தி தோப்பு, ஊத்துப்பட்டி, இடைச்செவல், வில்லிசேரி, நாலாட்டின்புதூர், இந்திராநகர், சீனிவாசநகர், பத்திரகாளியம்மன் கோவில் அருகில் உள்ளிட்ட பல பகுதிகளில் பிரசாரம் மேற்கொண்டார்.vai

அப்போது அவர் பேசியதாவது:– நான் எல்லா சமூகத்திற்கும் பொதுவானவன். முதுகுளத்தூர், தாராபுரம், திருப்பூர் தொகுதிகளில் தாழ்த்தப்பட்ட, அருந்ததி சமூகத்தினை சேர்ந்தவர்களுக்கு கட்சி சார்பில் வாய்ப்பு அளித்துள்ளேன். நான் சிவகாசி தொகுதியில் எம்.பி.யாக இருந்த போது மஞ்சள்காமாலை தடுப்பு ஊசி முகாம், மாற்றுத்திறனாளிகள் முகாம் நடத்தியுள்ளேன், கோவில்பட்டி நகருக்கு 3 பாலங்கள் பெற்று தந்தேன். இருப்பினும் அடுத்தடுத்த தேர்தலில் நான் தோற்கடிக்கப்பட்டேன். காரணம் எனது சேவை பணத்தினால் மறக்கடிக்கப்பட்டது. பணத்திற்கு முன்னால் சேவைகள் நிற்பது இல்லை. தமிழகம் முழுவதும் அ.தி.மு.க., தி.மு.க.வினர் வாக்காளர்களுக்கு பணம் கொடுத்து வருகின்றனர். இதையும் மீறி வெற்றி பெற வேண்டும். தமிழகத்தில் 1 கோடியே 37 புதிய வாக்களார்கள் உள்ளனர்.

இந்த 2 திராவிட ஆட்சிகளில் ஊழல், மதுவிலக்கு, பெண்களுக்கு பாதுகாப்பு, போதிய மருத்துவவசதி இல்லை. எனவே மக்கள், இளைஞர்கள் மாற்றத்தினை விரும்புகின்றனர். இந்த மாற்றத்தினை எங்கள் அணி தரும் என்று இளைஞர்கள் நம்புகின்றனர். நாங்கள் கூட்டணி ஆட்சி என்று கூறி வருகிறோம், தமிழகத்தில் இதுவரை கூட்டணிஆட்சி நடைபெற்றது இல்லை. கூட்டணி ஆட்சியில் தவறுகள் செய்ய முடியாது. பொதுவாக ரோடு, பாலம் ஆகியவற்றில் ஊழல் அதிகம் நடைபெறுகிறது. இதனை கண்காணிக்க ஓய்வு பெற்ற அதிகாரிகள் கொண்ட குழு அமைப்போம். விவசாய கடன்கள் அனைத்தும் ரத்து செய்வோம். விவசாயிகள் தற்கொலை தொடர்கதையாக தமிழகத்தில் நடைபெற்று வருகிறது. ஒரு மாதத்தில் மட்டும் விவசாயிகள் 7பேர் தற்கொலை செய்து கொண்டுள்ளனர்.

இந்த நிலைமைகளை மாற்ற வேண்டும். இந்த தேர்தலில் நான் நிற்க முற்பட்டபோது, என்னை மையமாக கொண்டு, சாதி கலவரம் ஏற்பட இருந்ததால் நான் விலகி கொண்டேன். கோவில்பட்டி பகுதியில் குடிநீர் பிரச்சினை அதிகமாக உள்ளது 2– வது பைப்லைன் திட்டம் கொண்டுவந்தால் மட்டும் இதை தீர்க்க முடியும். தமிழகத்தில் கெயில் கேஸ் திட்டத்தினை செயல்படுத்த மத்திய அரசு முயற்சி மேற்கொண்டுள்ளது. இத்திட்டம் நிறைவேற்றப்பட்டால் விவசாயிகள் விவசாயம் பண்ண முடியாது. மீத்தேன் திட்டத்தினை விட மோசமான திட்டம் இது. இந்த திட்டத்தினை செயல்படுத்த முற்பட்டால் விவசாயிகளை திரட்டி போராட்டம் நடத்துவேன்.

தமிழகத்தில் தொழில் வளர்ச்சி இல்லை, மாநாடு என்ற பெயரில் அ.தி.மு.க. அரசு மக்களை கொலை செய்து வருகிறது, மக்கள் கஷ்டத்தினை அரசு உணரவேண்டும், தி.மு.க., அ.தி.மு.க. இரண்டு கட்சிகளும் மதுவிலக்கு கொண்டு வராது. தமிழகத்தில் இதே நிலை நீடித்தால் நமது குழந்தைகளின் எதிர்காலம் பாதிக்கப்படும். எங்கள் கூட்டணி 150 தொகுதிகளில் வெற்றி பெற்று ஆட்சியை கைப்பற்றும். சில பேர் மனசாட்சி இல்லாமல் கருத்துகணிப்பு என்ற பெயரில் வெளியிட்டு வருவது வருந்தககூடிய செய்தி. 100 நாள் வேலை வாய்ப்பு திட்டத்திற்கு செல்லும் பெண்களிடம் அ.தி.மு.க., தி.மு.க. பணம் கொடுத்து வருவதாக கூறப்படுகிறது.

ஆணவக் கொலைகளை தடுத்து நிறுத்த வேண்டும். இதற்கு ஆதரவாக பேசியதால் எனக்கு சிலர் எதிர்ப்புகள் தெரிவித்தனர். இந்த தேர்தலில் பணத்தினை கொடுத்து வெற்றி பெறலாம் என்று அ.தி.மு.க., தி.மு.க. நினைக்கிறது. இதனை தோற்கடித்து ஜனநாயகத்தினை காப்பாற்ற எங்கள் கூட்டணிக்கு ஒரு வாய்ப்பு தாருங்கள். இவ்வாறு அவர் பேசினார்.

Comments
Loading...