Designed by Iniyas LTD
ஜி.எஸ்.டி. மசோதா – இந்திய ஜனநாயகத்திற்கு கிடைத்த மிகப்பெரிய வெற்றி : பிரதமர் மோடி பெருமிதம்!
ஜி.எஸ்.டி. மசோதா நிறைவேற்றம் என்பது இந்திய ஜனநாயகத்திற்கு கிடைத்த மிகப்பெரிய வெற்றி என மக்களவையில் பிரதமர் மோடி பேசினார்.
ஜி.எஸ்.டி எனப்படும் சரக்கு மற்றும் சேவை வரி மசோதா மாநிலங்களவையில் ஒருமனதாக நிறைவேறியது. இதற்கு மக்களவையில் இன்று நன்றி தெரிவித்த பிரதமர் நரேந்திர மோடி பின்னர் நடந்த விவாததில் பேசும் போது சரக்கு மற்றும் சேவை வரி மசோதாவுக்கு கிடைத்த வெற்றி பா.ஜ.கவுக்கு கிடைத்த வெற்றி அல்ல.
அனைத்து கட்சிகளுக்கும் இந்த வெற்றியில் பங்கு உள்ளது. இந்திய ஜனநாயகத்திற்கு கிடைத்த வெற்றி. இது வரி பயங்கரவாதத்திலிருந்து மக்களை விடுதலை பெற செய்யும். ஜி.எஸ்.டி மசோதா வெற்றி பெற உதவிய காங்கிரஸ் மற்றும் பிற கட்சிகளுக்கு எனது நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன்.
ஜி.எஸ்.டி. நிறைவேற்றம் மாற்றத்தை நோக்கிய பயணத்தில் மைல்கல். வெளிப்படைத்தன்மை நோக்கிய முன்னேற்றம்.
நான் குஜராத் முதல்வராக இருந்த அனுபவத்தின் மூலம் மாநிலங்களின் பிரச்னைகளை நன்கு அறிந்துள்ளேன்.சில மாநிலங்கள் தங்கள் உரிமைகள் பாதிக்கப்படும் என பயப்பட்டன. ஆனால், அவர்களுடன் பல்வேறு பிரச்னைகளை ஆராய்ந்து மாற்றம் கொண்டு வந்தோம். இறுதியில் ஒருமித்த கருத்துடன் மாநிலங்களவையில் நிறைவேற்றப்பட்டுள்ளது. ஜி.எஸ்.டி மூலம் பொருளாதாரத்தில் பின்தங்கியுள்ள மாநிலங்களுக்கு உதவ முடியும்.
ஜி.எஸ்.டி. விவாதிக்க ஆலோசனை வழங்க காங்கிரஸ் தலைவர் சோனியா மற்றும் முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங்கிற்கு அழைப்பு விடுத்தேன். நாங்கள் எப்போதும் அனைவருடனும் விவாதிக்க தயாராக உள்ளோம். அவர்களுடைய ஆலோசனைகள் எங்களுக்கு பயன் தரும்.
‛நுகர்வோர் தான் அரசர்’ என்னும் செய்தியை ஜி.எஸ்.டி மூலம் உணர்த்தியுள்ளோம். ஒவ்வொரு மாநிலமும் பிற மாநிலங்களை சார்ந்து உள்ளது. மத்திய அரசின் வருவாய் மற்றும் பற்றாகுறையை சமன்படுத்த உள்ளோம். இது மாநிலங்களின் பொருளாதார வளர்ச்சிக்கும் பயன்தரும் என்று அவர் பேசினார்.