Designed by Iniyas LTD
ஜி.கே.வாசன் தமிழ் மாநில காங்கிரஸ் கட்சியைத் தொடங்க முடிவு செய்துள்ளார்
மத்திய முன்னாள் அமைச்சர் ஜி.கே.வாசன் ஆதரவு மாநில நிர்வாகிகள், மாவட்டத் தலைவர்கள் ஒட்டுமொத்தமாக விலகியுள்ளனர். மீண்டும் தமிழ் மாநில காங்கிரஸ் கட்சியை (தமாகா) தொடங்க ஜி.கே.வாசன் முடிவெடுத்து விட்டதாக அவரது ஆதரவாளர்கள் தெரிவித்தனர்.
அதற்கு முன்னோட்டமாக தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி பொருளாளர் கோவை தங்கம் தனது பதவியை வெள்ளிக்கிழமை ராஜிநாமா செய்தார்.
அவரைத் தொடர்ந்து வாசன் ஆதரவு மாநில நிர்வாகிகள், மாவட்டத் தலைவர்கள் தங்களது ராஜிநாமா கடிதங்களை வெள்ளிக்கிழமை வாசனிடம் ஒப்படைத்தனர்.
மாநிலத் தலைவர் பதவிக்கு மேலிடம் முக்கியத்துவம் அளிக்கவில்லை எனக் கூறி, தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் பதவியை பி.எஸ்.ஞானதேசிகன் வியாழக்கிழமை ராஜிநாமா செய்தார். காமராஜர், மூப்பனார் போன்ற தலைவர்களை முன்னிறுத்தாமல் தமிழகத்தில் கட்சியை வளர்க்க முடியாது. கட்சிக்கு எதிராக செயல்படும் நிர்வாகிகள் மீது நடவடிக்கை எடுக்காமல் அவர்களை ஊக்கப்படுத்தும் வகையில் மேலிடப் பொறுப்பாளர்கள் செயல்படுவதாக ஞானதேசிகன் பகிரங்கமாக குற்றம்சாட்டியுள்ளார்.
இந்த நிலையில், தனது ஆதரவாளர்களுடன் கடந்த இரண்டு நாள்களாக ஆலோசனை நடத்தி வரும் ஜி.கே.வாசன், மீண்டும் தமிழ் மாநில காங்கிரஸ் கட்சியைத் தொடங்க முடிவு செய்துள்ளதாக அவரது ஆதரவாளர்கள் தெரிவிக்கின்றனர்.
அதனை உறுதிப்படுத்தும் வகையில், வாசனின் தீவிர ஆதரவாளரான மாநிலப் பொருளாளர் கோவை தங்கம் தனது பதவியை வெள்ளிக்கிழமை ராஜிநாமா செய்தார். காமராஜர், மூப்பனார் படத்துடன் அச்சிடப்பட்டுள்ள உறுப்பினர் அட்டையை பயன்படுத்தக் கூடாது என்ற மேலிடத்தின் உத்தரவுக்கு எதிர்ப்புத் தெரிவித்து இந்த முடிவை எடுத்துள்ளதாக அவர் தெரிவித்தார்.
அவரைத் தொடர்ந்து, வாசன் ஆதரவு மாநிலப் பொதுச் செயலாளர்கள் விடியல் சேகர், சக்திவடிவேல், வேணுகோபால், கடலூர் ஜெயச்சந்திரன், மாநில துணைத் தலைவர்கள் சேலம் கந்தசாமி, கடலூர் பி.ஆர்.எஸ். வெங்கடேசன், சாருபாலா தொண்டைமான், மாணவர் காங்கிரஸ் தலைவர் சுனில் ராஜா உள்ளிட்ட 30-க்கும் அதிகமான மாநில நிர்வாகிகளும், மாநில செயற்குழு உறுப்பினர்களும் தங்களது ராஜிநாமா கடிதங்களை வாசனிடம் அளித்துள்ளனர்.
20-க்கும் அதிகமான மாவட்டத் தலைவர்களும் ராஜிநாமா செய்ய முடிவு செய்துள்ளதாகக் கூறப்படுகிறது.
ஞானதேசிகன் ராஜிநாமா கடிதத்தின் மீது மேலிடம் முடிவு எடுத்த பிறகு, வாசன் தனது முடிவை அறிவிப்பார் என அவரது ஆதரவாளர்கள் தெரிவித்தனர். மேலிடம் அழைத்துப் பேசி மாநிலத் தலைவர் பதவியை அளித்தால் ஏற்றுக் கொள்ளலாம் என சிலர் வாசனுக்கு ஆலோசனை கூறியுள்ளனர்.
ஆனால், காங்கிரஸிலேயே தொடர்ந்தால் கார்த்தி சிதம்பரத்திடமும், விஷ்ணுபிரசாத்திடம்தான் தொகுதி பங்கீடு குறித்துப் பேச வேண்டியிருக்கும். மேலிடத் தலைவர்கள் உரிய மரியாதை அளிக்காத நிலையில் தனிக் கட்சி தொடங்குவதுதான் சரியாக இருக்கும் என பெரும்பாலானோர் தெரிவித்துள்ளனர்.
இந்த நிலையில், உறுப்பினர் அட்டை பிரச்னையைக் காரணம் காட்டி கட்சிக்குள் குழப்பம் விளைவிக்க வாசனும், ஞானதேசிகனும் முயற்சிப்பதாக மேலிடப் பொறுப்பாளர் முகுல் வாஸ்னிக்கிற்கு நெருக்கமான அகில இந்திய காங்கிரஸ் கமிட்டி உறுப்பினர் பொன். கிருஷ்ணமூர்த்தி குற்றம்சாட்டியுள்ளார்.
முன்னாள் எம்.எல்.ஏ.க்கள் வேலூர் ஞானசேகரன், டி. யசோதா, மத்திய முன்னாள் இணை அமைச்சர் எஸ்.ஆர்.பாலசுப்பிரமணியன், தனுஷ்கோடி ஆதித்தன், முன்னாள் எம்.பி.க்கள் ராம்பிரபு, ராணி உள்ளிட்ட பலர் வாசனுக்கு ஆதரவு தெரிவித்துள்ளதாகக் கூறப்படுகிறது. இதனால், தமிழக அரசியல் வட்டாரத்தில் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
அடுத்த தலைவர் ஈ.வி.கே.எஸ். இளங்கோவன்
ராகுல் காந்தி தலைமையில் தில்லியில் வெள்ளிக்கிழமை நடைபெற்ற அகில இந்தியப் பொதுச் செயலாளர்கள் கூட்டத்தில், ஞானதேசிகன் ராஜிநாமா குறித்து விவாதிக்கப்பட்டுள்ளது. அதனைத் தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய பொதுச் செயலாளர் அஜய் மக்கான், எந்தக் கோஷ்டியையும் சாராத ஒருவர் தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டித் தலைவராக நியமனம் செய்யப்படுவார் தெரிவித்தார்.
இந்த தலைவர் பதவியை கைப்பற்ற ப.சிதம்பரம், சுதர்சன நாச்சியப்பன், திருநாவுக்கரசர், டாக்டர் செல்லக்குமார், பீட்டர் அல்போன்ஸ், எச்.வசந்தகுமார், மாணிக்கம் தாகூர் ஆகியோர் முயற்சித்ததாக கூறப்பட்டது இந்நிலையில் தமிழக காங்கிரஸ் கட்சியின் தலைவராக ஈ.வி.கே.எஸ். இளங்கோவனை நியமித்து காங்கிரஸ் மேலிடம் இன்று அதிரடியாக அறிவித்துள்ளது. இதனைத்தொடர்ந்து நாளை(ஞாயிற்றுக்கிழமை) ஈ.வி.கே.எஸ். இளங்கோவன் தலைவராக பொறுப்பேற்கிறார்.
இது தொடர்பாக இன்று செய்தியாளர்களை சந்தித்த ஈ.வி.கே.எஸ். இளங்கோவன், காங்கிரஸ் கட்சியின் மேலிடத்தின் எதிர்பார்ப்புக்கு ஏற்றவாறு பணியாற்றுவேன் என்றார், மேலும் வாசன், ஞானதேசிகன். தங்கபாலு உள்ளிட்ட காங்கிரஸ் தலைவர்களை சந்தித்து ஆலோசனை நடத்துவேன் என்றார்.
வாசன் செய்தியாளர்களுடன் சந்திப்பு: மீண்டும தாமாக?
சென்னையில் இன்று செய்தியாளர்களை சந்தித்த ஜி.கே. வாசன், கூறியதாவது: தமிழக காங்கிரஸ் கட்சியின் தலைவராக நியமிக்கப்பட்டுள்ள ஈ.வி.கே.எஸ். இளங்கோவனுக்கு மனமாற்ற வாழ்த்துக்கள்.
சில ஆண்டுகளாகவே காங்கிரஸ் தலைமையின் செயல்பாடு தொண்டர்களின் மனநிலைக்கு மாறாகவே உள்ளது. கடந்த நாடாளுமன்ற தேர்தல் தோல்விக்குப் பிறகு தமிழக காங்கிரசை, கட்சி மேலிடம் கண்டு கொள்ளவில்லை. தமிழகத்தை புறக்கணிக்கிறது. கட்சியின் உறுப்பினர் அட்டையில் காமராஜர், மூப்பனார் படங்களை சேர்க்க வேண்டுமா? வேண்டமா என்று காங்கிரஸ் மேலிடம் யோசித்தது.இது கட்சி தொண்டர்களிடையே பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது.
இதனைத்தொடர்ந்து மாநில காங்கிரஸ் கட்சியின் தலைவர் ஞானதேசிகன் பொருளாளர் கோவை தங்கம்,உள்ளிட்டர்டோர் ராஜினாமா செய்துள்ளனர்.இந்நிலையில் கட்சி மேலிடம் எங்களது புகாரை மறுத்திருப்பது வேதனையளிக்கிறது.
தமிழகம் முழுவதும் தலைவர்கள் மற்றும் தொண்டர்களை நேரில் சந்தித்து கருத்துகளை கேட்டு வருகிறேன் என்று தெரிவித்தார்.
மேலும், தனிக்கட்சி அமைப்பது தொடர்பான சூழல் ஏற்பட்டால் தெரிவிப்பேன். நவம்பர் 3ம் தேதி அடுத்த கட்ட நடவடிக்கை குறித்து அறிவிக்கப்படும் என்று கூறியுள்ளார்.