தமிழினத்திற்கான தனித்துவமான ஊடகம்

தன்னை நாடுபவர்களிற்கு நல்லருள் புரிவான் நல்லூர் கந்தன்…

கருணைகூர் முகங்கள் ஆறும் கரங்கள் பன்னிரண்டும் கொண்டு ஒரு திருமுருகன் வந்தாங்கு உதித்தனன் உலகமுய்ய”

ஈழமணித்திருநாட்டில்  முருகப் பெருமான் எழுந்தருளியிருக்கும்  ஆலயங்கள் முதன்மைபெற்றது நல்லைக் கந்தன் ஆலயம். முருகப் பெருமான் அலங்காரக் கந்தனாக வீற்றிருந்து, தன்னை நாடிவரும் அடியவர்களுக்கு நல்லருள் புரிந்து கொண்டிருக்கிறார்.

ஆலய வரலாறு

நல்லைக் கந்தன் ஆலயம் கட்டப்பட்ட காலம், . கைலாசமாலை, யாழ்ப்பாணச் சரித்திரம், யாழ்ப்பாண வைபவமாலை, யாழ்ப்பாண வைபவ விமர்சனம் போன்ற நூல்களில் வெளிவந்த குறிப்புகளை ஆதாரமாக வைத்தே, வரலாற்று ஆய்வாளர்கள் ஆலயம் தொடர்பான தகவல்களை வழங்கியிருக்கிறார்கள்.

1248ஆம் ஆண்டு யாழ்ப்பாண இராச்சியத்தை ஆட்சிபுரிந்த சிங்கையாரிய மன்னன் காலத்தில் மந்திரியாகவிருந்த புவனேகபாகு என்பவன் ஆலயத்தை கட்டுவித்தான் என்பது ஒரு தகவல். 1450ஆம் ஆண்டிலிருந்து 1467ஆம் ஆண்டுவரை யாழ்ப்பாண இராச்சியத்தில் ஆட்சிசெய்த ஸ்ரீசங்கபோதி புவனேகபாகு என்ற அரச பட்டத்துப் பெயருடன் விளங்கிய செண்பகப் பெருமாள் என்ற மன்னன் யாழ்ப்பாணத்தைக் கைப்பற்றும் நோக்கத்துடன் படையெடுத்த வேளையில், நல்லூர் கந்தசுவாமி ஆலயம் முற்றாக சேதமடைந்தது என்றும், தனது தவறுக்கு விமோசனம் தேடும் வகையில் யாழ்ப்பாண நகரத்தை மீண்டும் புதுப்பித்ததுடன், ஆலயத்தையும் கட்டுவித்தான் என்றும் இன்னொரு தகவல் சொல்கிறது.

ஆலய மகோற்சவ காலத்தின்போது முருகப் பெருமான் வீதியுலா வரும் போது சொல்லப்படும் கட்டியத்தில் “ஸ்ரீசங்கபோதி புவனேக பாகு” என்ற பெயர் இப்போதும் இடம்பெற்றுவருகின்றது.

இப்போதுள்ள இடத்திலிருக்கும் ஆலயம் 1734ஆம் ஆண்டில் இரகுநாத மாப்பாண முதலியாரால் சிறிய கோயிலாக நிறுவப்பட்டதாக வரலாறு சொல்கிறது. இந்த இடத்தை மாப்பாண முதலியார் விலைக்கு வாங்கி ஆலயத்தை அமைத்து, முதற்பூசகராக கிருஷ்ணையர் சுப்பையர் என்பவரை நியமித்தார் என்றும் சொல்லப்படுகிறது.

முருகப் பெருமான் உற்சவ காலத்தில் வீதியுலா செல்வதற்கு முன்பதாக சொல்லப்படும் கட்டியத்தில் இரகுநாதன மாப்பாண முதலியாரின் பெயரும் குறிப்பிடபடுகிறதை அவதானிக்க முடிகிறது.

1899ஆம் ஆண்டில் ஆறுமுகமாப்பாண முதலியாரின் பரிபாலனக் காலத்தில் ஆலயத்தில் மணிக்கோபுரம் அமைக்கப்பட்டது. தொடர்ந்து கருவறைத் தளம் கருங்கற் திருப்பணியாக நிறைவேறி 1902 இல் மகா கும்பாபிஷேகம் செய்யப்பட்டது. 1909இல் சுற்றுப் பிரகார மண்டபங்களும் கட்டப்பட்டதாக வரலாற்றுத் தகவல்கள் மூலம் நாம் அறிந்துள்ளக்கூடியதாக இருக்கின்றது.

1921 இல் ஆலய பரிபாலனத்தைப் பொறுப்பேற்ற நான்காவது இரகுநாத மாப்பாண முதலியார், ஆலய வரலாற்றில் ஆன்மிகப் புரட்சியை ஏற்படுத்தியவர் என்ற பெருமையைப் பெறுகிறார். ஆலய அர்ச்சனைக்கு பற்றுச்சீட்டு நடைமுறையை அறிமுகப்படுத்தியதுடன் அர்ச்சனைக் கட்டணத்தையும் ஒரு ரூபாவாக நிர்ணயித்தார். அன்று அறிமுகமான ஒரு ரூபா அர்ச்சனைக் கட்டண நடைமுறை இன்றுவரை தொடர்கிறது என்பது கந்தனின்  சிறப்புக்குரியது.

இந்த ஆலயத்தில் காலத்துக்காலம் திருத்த வேலைகள், புனருத்தாரணப் பணிகள் என்பன மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. 1964 டிசெம்பர் மாதத்தில் வசந்த மண்டபம் புதிய அமைப்பில் மாற்றம் பெற்றது. தொடர்ந்து ஆலய நுழைவாயில் புதுவடிவம் பெற்றது. 2011 ஆம் ஆண்டு தெற்கு வீதியில் புதிதாக நவதள கிளிக்கோபுரமும், இந்தக் கோபுரத்தை நோக்கிய வண்ணம் அருணகிரிநாதருக்கு சிறுகோயிலும், 2015ஆம் ஆண்டு ஆலய வடக்கு வீதியில் புதிய நவதள குபேரவாசல் இராஜகோபுரமும், அமைக்கப்பட்டது.

நல்லூர் கந்தன்  நீண்டகாலமாகவே நேரமுகாமைத்துவம் பேணப்பட்டு வருவது சிறப்பான அம்சம் இங்கு நாளாந்தம் இடம்பெற்றுவரும் பூசைகளும், வருடாந்த மகோற்சவம் மற்றும் சிறப்பு நிகழ்வுகளும் திட்டமிடப்பட்ட குறிப்பிட்ட நேரத்திலேயே மேற்கொள்ளப்படுகின்றன.

இலங்கை அரசாங்கம் 2013ஆம் ஆண்டில் மாவட்ட ரீதியிலான சின்னங்களுடன் பத்து ரூபா நாணயக் குற்றிகளை வெளியிட்டிருந்த போது, யாழ்ப்பாண மாவட்டத்திற்குரிய சின்னமாக நல்லூர் கந்தசுவாமி கோயில் முகப்பை தேர்ந்தெடுத்திருந்தது. இது ஆலயத்தின் பெருமையை மேலும் உயர்த்துவதாகவே அமைந்துள்ளது.

இங்கு வருடாந்த மகோற்சவம்  ஆடி அமாவாசையின் பின்னர் ஆறாவது நாளன்று ஆரம்பமாகி 25 நாட்கள்  மகோற்சவம் இடம்பெறும்.

அந்தவகையில் இவ்வருட மகோற்சவம் கடந்த ஆகஸ்ட் 13  திகதியன்று கொடியேற்றத்துடன் ஆரம்பமாகி நடைபெற்று வருகிறது. இன்று செப்ரெம்பர்  8 ஆம் திகதி  இரதோற்சவம் இடம்பெறுகிறது.

நாளை தீர்த்தோற்சவமும், நாளை மறுதினம் பூங்காவன உற்சவமும் இடம்பெற்று, நல்லைக் கந்தனின் இவ்வருட மகோற்சவப் பெருவிழா இனிதே நிறைவுபெறும்.

குறிப்பு

இந்த வருடம் (2018) இலங்கையில் பொற்கூரை வேய்ந்த முதல் ஆலயமாக நல்லூர்  கந்தசுவாமி ஆலயம் வரலாற்றில் பொறிக்கப்பட்டுள்ளமையும் குறிப்பிட்டு சொல்லவேண்டிய விடயம்.

 

யாழ் கனக சனா.

Comments
Loading...