தமிழினத்திற்கான தனித்துவமான ஊடகம்

தமிழக அரசு ஆதரவுடன் தேனி மாவட்டத்தில் நியூட்ரினோ ஆய்வு தொடரும்: அணுசக்தி விஞ்ஞானிகள் நம்பிக்கை

theniதமிழகத்தின் தேனி மாவட்டத்தில் பல்வேறு காரணங்களால் தேக்கம் அடைந்துள்ள நியூட்ரினோ ஆய்வு மாநில அரசின் முழு ஆதரவுடன் விரைவில் தொடங்கும் என்று இந்திய அணுசக்தி விஞ்ஞானிகள் நம்பிக்கை தெரிவித்தனர்.

இந்திய அணுசக்தி துறையின் செயல்படும் பாபா அணுசக்தி ஆராய்ச்சி நிலையமும் தேசிய பத்திரிகையாளர் சங்கமும் இணைந்து கடந்த 2-ஆம் தேதி முதல் நடத்திய அறிவியல் ஆசிரியர்கள், பத்திரிகையாளர்களுக்கான பயிற்சிப் பயிலரங்கு திங்கள்கிழமை (மார்ச் 6) நிறைவடைந்தது.

இதையொட்டி நடைபெற்ற நிகழ்ச்சியில் இந்திய அணுசக்தி ஒழுங்குமுறை வாரிய தலைவர் எஸ்.ஏ.பரத்வாஜ், பாபா அணுசக்தி ஆராய்ச்சி மைய உயிரி அறிவியல் குழும இயக்குநர் சத்தோபாத்யாய், பாபா ரேடியோ ஐசோடோப் தொழில்நுட்ப தலைமை செயல் அதிகாரி கணேஷ், டாடா நினைவு மருத்துவமனை மருத்துவமனை மூத்த மருத்துவர் சித்தார்த் லஷ்கர், இந்திய அணுசக்தித் துறை விஞ்ஞானிகள், ஆராய்ச்சியாளர்கள் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

அணுசக்தித் துறையின் பணி, அணுமின் உற்பத்தி, அணுசக்தி மூலம் தயாரிக்கப்படும் மருந்துகள், மருத்துவ உபகரணங்களின் பயன்கள், அவை தொடர்பான சந்தேகங்கள் குறித்து பயிலரங்கில் பங்கேற்றவர்கள் எழுப்பி கேள்வகளுக்கு விஞ்ஞானிகள் பதிலளித்தனர்.

அப்போது, தமிழகத்தின் தேனியில் மேற்கொள்ளப்பட்டு வரும் நியூட்ரினோ திட்டம் குறித்து ஒரு தரப்பினர் தெரிவித்து வரும் ஆட்சேபம் குறித்து மூத்த விஞ்ஞானியும் ஏஇஆர்பி தலைவருமான பரத்வாஜிடம் கேட்டதற்கு, “இந்த விவகாரம் அணுசக்தி ஒழுங்குமுறை வரம்புக்குள் வரவில்லை என்றாலும், திட்டம் பற்றிய தவறாக புரிந்து கொண்டு சிலர் ஆட்சேபம் தெரிவிக்கின்றனர். அவை விரைவில் களையும் என நம்புகிறேன்” என்று கூறினார்.

இதையடுத்து நியூட்ரினோ திட்டத்தின் தற்போதைய நிலை குறித்து மூத்த விஞ்ஞானிகள் சிலரிம் “தினமணி” நிருபர் கேட்டதற்கு, “நியூட்ரினோ திட்ட ஆய்வின்போது சுற்றியுள்ள பகுதிகளில் நீர் வளங்கள், உயிரினங்களுக்கு பாதிப்பு ஏற்படும் என ஒரு தரப்பினர் அச்சம் தெரிவித்துள்ளனர். நீதிமன்றத்திலும் வழக்கு தொடர்ந்துள்ளதாக அறிகிறோம். இத்திட்டம் தொடர்பாக மாநில அரசின் மாசு கட்டுப்பாட்டு வாரியம் சார்பில் ஏழு பேர் கொண்ட குழு அமைக்கப்பட்டுள்ளது.

கூடங்குளத்தில் அணுமின் நிலைய திட்டம் தொடங்கப்படும்போதும், செயல்வடிவம் பெற்றபோதும், இதுபோன்ற பல தவறான புரிதல்களுடன் ஒருதரப்பினர் பிரச்னையை அணுகினர். அவர்களின் சந்தேகங்களையும் பொதுமக்களிடையே நிலவிய அச்சத்தையும் களைந்து பின்னர் கூடங்குளத்தில் மின்னுற்பத்தி திட்டம் வெற்றிகரமாக செயல்படுத்தப்பட்டு வருகிறது. தலா 1000 மெகா வாட் மின்சாரம் தயாரிக்கும் திறன் கொண்ட இரு அணுஉலைகள் செயல்பாட்டில் உள்ளன. இரண்டாவது அணுஉலை அதன் நிர்ணயித்த மின்சார உற்பத்தி அளவை எட்டும் என எதிர்பார்க்கிறோம்.

அதுபோலவே, தேனி மாவட்டம் பொட்டிப்பட்டி அருகே நியூட்ரினோ திட்ட ஆய்வு மீது மக்களுக்கு உள்ள சந்தேகங்கள் களையப்பட்டு அத்திட்ட ஆய்வு,  மாநில அரசின் முழுமையான ஒத்துழைப்புடன் செயல்படும் என நம்புகிறோம். விரைவில் இது தொடர்பாக தமிழகத்துக்குச் சென்று மாநில அரசு பிரதிநிதிகளுடன் பேச திட்டமிட்டுள்ளோம் என்று விஞ்ஞானிகள் தெரிவித்தனர்.

நியூட்ரினோ திட்டம் என்றால் என்ன?

உலகம் முழுவதும் நியூட்ரினோ (அணுத்துகள்) சக்தி பரவி உள்ளது. சுமார் நூறாயிரம் கோடி நியூட்ரினோக்கள் ஒவ்வொரு விநாடியும் நமது உடலுக்குள் புகுந்து வெளியேறிய வண்ணம் உள்ளன. இந்த அணுத்துகளை ஆய்வு செய்தால் சூரியன் குறித்த ரகசியங்களையும், விண்வெளியின் ஆற்றல் பற்றியும் பூமியின் பிறப்பு குறித்தும் தெரிந்து கொள்ளலாம் என்ற நோக்கத்துடன் நியூட்ரினோ ஆய்வு முயற்சி 1930களில் இருந்து தொடங்கியது.
இதேபோல, இந்தியாவில் முதன் முதலாக காஸ்மிக் கதிர்களில் இருந்து உண்டாகும் நியூட்ரினோக்கள், கோலார் தங்க வயல் சுரங்கத்தில், 1965 ல் கண்டுபிடிக்கப்பட்டன. ஆனால் அச்சுரங்கங்கள், 15 ஆண்டுகளுக்கு முன் மூடப்பட்டன. எனவே, மீண்டும் இந்த ஆராய்ச்சியை நடத்துவதற்காக இந்திய நியூட்ரினோ அறிவியல் கூடம் (en:Indian neutrino observatory) என்ற திட்டம் உருவாக்கப்பட்டுள்ளது.

இந்த ஆய்வு மையம், தமிழ்நாட்டில் தேனி மாவட்டம் தேவாரம் அருகேயுள்ள பொட்டிபுரம் எனும் ஊரிலுள்ள மேற்குத் தொடர்ச்சி மலையின் உள்ளே அமைக்கப்படுகிறது. மலையின் உச்சியில் இருந்து 1.3 கி.மீ., கீழே, மலையின் அடிவாரத்தில் 2.5 கி.மீ., தூரத்திற்கு சுரங்கப் பாதை தோண்டப்படும். அதையடுத்து பெரிய ஆய்வுக் கூடம் அமைக்கப்படும்.

அங்கு 50 கிலோ டன் இரும்பிலான நியூட்ரினோ காணும் கருவி (டிடெக்டர்) அமைக்கப்படும். இதைச் சுற்றி, நான்கு திசைகளிலும் மேலேயும் கீழேயும் குறைந்தபட்சம் ஒரு கி.மீ., பரிமாணமுள்ள பாறை இருந்தால் தான், ஆராய்ச்சி நடத்த முடியும். இவ்வளவு பெரிய பாறையால் தான், வானவெளியில் இருந்து வரும் காஸ்மிக் கதிர்களை தடுத்து, நிறுத்த முடியும். அதன் பிறகு தான், நியூட்ரினோவை காண முடியும். முதற்கட்டமாக ஐ.என்.ஓ., கூடத்தில், காஸ்மிக் கதிர்கள் உண்டாக்கும் நியூட்ரினோக்களைப் பற்றி ஆராய்ச்சிகள் நடத்தப்படும்.

 

Comments
Loading...