தமிழினத்திற்கான தனித்துவமான ஊடகம்

தமிழின அழிப்புக்கு நீதி கோரி யாழ்ப்பாணத்தில் திரண்ட பல்லாயிரக்கணக்கான மக்கள்…

தமிழின அழிப்புக்கு நீதி கோரியும் சர்வதேசத்தில் வழங்கப்படுகின்ற கால அவகாசத்திற்கு எதிர்ப்பு தெரிவிக்கும் முகமாக யாழ் பல்கலைக்கழக மாணவர்களால் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த மாபெரும் போராட்டம் இன்று யாழ்ப்பாணத்தில் இடம்பெற்றது.

தமிழினத்திற்கு எதிராக இழைக்கப்பட்ட  கொடூரங்களுக்கு இன்னும் நீதி கிடைக்காத நிலையில் அந்த குற்றங்களுக்கு நீதி கிடைக்க வேண்டும் எனவும் காணாமல்போனோர் உள்ளிட்ட விடயங்களில் சர்வதேசம்  தன்னுடைய தலையீடு தேவை எனவும் , சர்வதேசத்தில் கால அவகாசம் வழங்கப்படுவதற்கு எதிர்ப்பு தெரிவித்தும் பல்வேறு கோஷங்களை எழுப்பியவாறு மாணவர்கள் மாபெரும் போராட்டம் ஒன்றை மேற்கொண்டிருந்தனர்.

அந்தவகையிலே காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்கள் மற்றும் பலதரப்பட்ட பிரச்சினைகளுக்கு முகம் கொடுத்த பல்லாயிரக்கணக்கான தமிழ் உறவுகள் இணைந்து யாழ்ப்பாண பல்கலைக்கழக வளாகத்தில் ஆரம்பமான மாபெரும் கவனயீர்ப்பு பேரணியானது,யாழ் மாநகர சபை மைதானத்தை சென்றடைந்து அங்கு கண்டன அறிக்கை வாசிக்கப்பட்டது.

இந்த மாபெரும் கவனயீர்ப்புப் போராட்டத்தில் வடக்கு கிழக்கில் வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்கள் ,சார்பாக கிளிநொச்சி, முல்லைத்தீவு ,வவுனியா, மன்னார் ,யாழ்ப்பாணம் ஆகிய மாவட்டங்களைச் சேர்ந்த காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்கள் ,வடக்கு கிழக்கு பல்கலைக்கழக மாணவர்கள், நலன்விரும்பிகள், பொதுமக்கள் என பலதரப்பட்ட மக்களும் இணைந்து பல்லாயிரக்கணக்கான மக்கள் ஒரு மாபெரும் கவனயீர்ப்புப் பேரணி ஆக இந்த பேரணி இடம்பெற்றிருந்தமை குறிப்பிடத்தக்கது.

Comments
Loading...