Designed by Iniyas LTD
தமிழ் அரசியல்வாதிகளுக்கு வாழ்வு கொடுத்த எங்கள் பிள்ளைகள் இன்று சிறையில்..
“அரசியல்வாதிகளுக்கு வாழ்வைக்கொடுத்த எங்களது பிள்ளைகள், இன்று சிறைகளிலும் இரகசிய முகாம்களிலும் உள்ள நிலையில், அவர்களது விடுதலைக்காக எந்தவொரு அரசியல்வாதியும் நடவடிக்கை எடுக்கவில்லை” என, நேற்று (07) 16ஆவது நாளாகவும் கவனயீர்ப்புப் போராட்டத்தில் ஈடுபட்டிருந்த கிளிநொச்சி மாவட்டத்திலிருந்து காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவினர்கள் குற்றஞ்சாட்டினர்.
காணாமல் ஆக்கப்பட்ட தங்களது உறவுகளை மீட்டுத்தருமாறு கோரி, கிளிநொச்சி கந்தசுவாமி ஆலயத்துக்கு முன்னால் நடத்தப்பட்டு வரும் இந்தப் போராட்டம் தொடர்பில், கிளிநொச்சி மாவட்டத்திலிருந்து காணாமல் ஆக்கப்பட்ட உறவுகள் சங்கத்தின் உப தலைவி ஆனந்த நடராஜா லீலாதேவி கூறியதாவது, ‘எங்களின் உறவுகளின் விடுதலைக்;காகவே போராடி வருகின்றோம். இதில் எந்தவித அரசியலும் கிடையாது. எந்த அரசியல்வாதிகள் வந்தாலும், அவர்களை வெளியேற்றவும் இல்லை. கொடும்பாவிகளை எரித்து மனிதாபிமானமற்ற முறையிலும் நடந்துகொள்ளவுமில்லை. எந்த எதிரி வந்தாலும், அவர்களை வரவேற்றுக்கொள்வதே தமிழர்களின் பண்பாடு. அந்த வகையில், அரசியல்வாதிகள் பலர் வந்துபோகின்றனர்.
அவர்களுக்கும் எங்களுக்கும் தனிப்பட்ட கோபங்கள் எதுவும் இல்லை. எங்களது எதிர்ப்பார்ப்புகள் எதனையும் நிறைவுசெய்யவில்லை என்பதே எங்களுக்கு உள்ள கோபம். எங்களிடம் வருகின்ற அரசியல்வாதிகள் எவரும், தங்களது உறவுகளைத் தொலைத்தவர்கள் அல்லர். நல்ல சுகபோக வாழ்க்கை வாழுபவர்கள். நாங்கள், எங்களது பிள்ளைகளை பறிகொடுத்து விட்டு இன்று எட்டு வருடங்களாக தெருவிலே அலைகின்றோம். எல்லோரும் ஒற்றுமையாக குரல் கொடுத்திருந்தால், எங்களுக்குத் தீர்வு கிடைத்திருக்கும். அவர்களது கொள்கைகள் வேறாக இருக்கலாம். இவர்கள் ஒற்றுமையாக இருந்து குரல் கொடுத்திருக்க வேண்டும். இந்தப் போராட்டத்தை ஒரு வெகுஜனப் போராட்டமாக முன்னெடுத்து, அரசாங்கத்துக்கு அழுத்தத்தைக் கொடுப்பதன் மூலம், எங்களுக்கான பதிலை இந்த அரசாங்கம் வழங்கியே தீரும்’ என அவர் மேலும் கூறினார்.