தமிழினத்திற்கான தனித்துவமான ஊடகம்

தமிழ் மாணவர் குருதியை உறிஞ்சும் சிங்கள மாணவர் மனப்போக்கு!

photo_978465

“யாழ்ப்பாணத்திற்கு போய் சொல்லு அங்க முட்டினா இங்க வெடிக்கும் எண்டு, உங்களுக்கே இவ்வளவு இருக்கும் போது எங்களுக்கு எவ்வளவு இருக்கும்? நாங்கள் இல்ல எண்டதையும் உங்கட ஆக்களுக்கு சொல்லு.“

இது பேராதனைப் பல்கலைக்கழகத்தில் சிங்கள மாணவர் ஒருவர் தமிழ் மாணவரை தாக்கி மண்டையை உடைத்துவிட்டு உதிர்த்த மொழி. ஸ்ரீலங்காவின் இளைய தலைமுறையின் நல்லிணக்கிற்கான வரிகள். ஸ்ரீலங்காவின் சிங்களத் தலைமுறைகள் எப்படியான மன நிலையில் உள்ளார்கள் என்பதன் வெளிப்பாடு.

அண்மையில் யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தில் விஞ்ஞானபீட மாணவர் வரவேற்பு உபசார நிகழ்வில் தமிழ் மாணவர்களுக்கும் சிங்கள மாணவர்களுக்கும் இடையில் முரண்பாடு ஏற்பட்டது. முதலாம் வருட மாணவர்களுக்கான வரவேற்பு உபசாரத்தில் பாரம்பரியத்திற்கு மாறாகவும் அனுமதியின்றியும் சிங்கள கண்டிய நடனம் ஆட முற்பட்டபோதே முரண்பாடு வெடித்து. முரண்பாட்டில் சிங்கள மாணவர்கள் தமிழ் மாணவர்கள்மீது வன்முறை தாக்குதலில் ஈடுபட்டனர்.

இந்த சம்பவத்தின் மற்றுமொரு கட்டமாகவே பேராதனைப் பல்கலைக்கழகத்தில் சிங்கள மாணவர்கள் தமிழ் மாணவர்களை தாக்கியுள்ளனர். பேராதனைப் பல்கலைக்கழக வளாகத்தில் உள்ள குறிஞ்சிக் குமரன் ஆலயத்திற்கு சென்று திரும்பியபோது வழிமறித்த மாணவர்கள் தமிழ் மாணவர்களை கொடூரமாக தாக்கியுள்ளனர். இதனால் அங்கு மாத்திரமின்றி தெற்கில் கல்வி கற்கும் தமிழ் மாணவர்கள் மத்தியிலேயே பெரும் பதற்றம் ஏற்பட்டுள்ளது.

யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தில் வன்முறை நிகழ்ந்தபோது அதன் தாக்கம் குறித்து செண்பகப் பார்வை சுட்டிக்காட்டியிருந்தது. அதன் தொடர்ச்சியான சம்பவமாகவே பேராதனை வன்முறை இடம்பெற்றுள்ளது. சிங்கள மாணவர்கள் மத்தியில் இன வேற்றுமையும் இன ஒடுக்குமுறை மனோபாவமும் எப்படி உள்ளது என்பதையே இங்கு இனம் காண முடிகின்றது. வன்முறையை உள்ளே வைத்துக்கொண்டிருப்பவர்களுடன் தமிழ் மாணவர்கள் எப்படி இணைந்து கல்வி கற்பது?

நாம் சிங்களவர். நாம் பெரும்பான்மையர். இந்த நாட்டில் எமது ஆட்சி நடக்கிறது. உங்களுக்கு எதுவும் இல்லை. நீங்கள் எங்கள் அடிமைகள்… இப்படிப்பட்ட ஒடுக்குமுறை வன்ம உணர்வுடகளுடன்தான் சிங்கள மாணவர்கள் உள்ளனர். அவையே இத்தகைய வன்முறைகளை தூண்டுகின்றன.

யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தில் நடந்ததும் இதுதான். அத்துடன் யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தில் நடந்த சம்பவத்தை உரிய வகையில் கையாலாமல் ஆளும் சிங்கள அரசுக்கு சாதகமாக கையாள முற்பட்டமையும் பேரனைப் பல்கலைக்கழக நிகழ்வுக்கு அடிக்கோலிட்டது. உதாரணமாக யாழ்ப்பாணம் வந்த சந்திரிக்கா யாழ் பல்கலைக்கழகத்திற்கு விஜயம் செய்தார். அங்கு சென்று மாணவர்களை முற்போக்கானவர்களாக வளர்க்கும்படி கூறியுள்ளார்.

அவருடைய பார்வையில் முற்போக்கு என்பது சிங்கள இனத்துடன், சிங்கள கலாசாரத்துடன் இனக்கலப்பு செய்வதே. இதையே அவர்கள் தெற்கில் செய்ய மாட்டார்கள். வடக்கிழக்கில்தான் அவர்கள் இனக் கலப்பு செய்வார்கள். அத்துடன் ஆட்சியில் இல்லாத ஒருவர் வந்து பல்கலைக்கழகத்திற்கு இப்படி உத்தரவு போடுகிறார். இதையே ஒரு தமிழ் எம்.பி தெற்கில் சென்று கூறி விட்டு வடகிழக்கு வந்து சேர முடியுமா என்பதைத்தான் பேராதனை சம்பவம் உணர்த்துகிறது.

இது இத் தீவில் இனப்பிரச்சினைகள் தீர்க்கப்பட்டு அவரவர் உரிமைகள் வழங்கப்பட்டு அவரவர் தேசம் அங்கீகரிக்கப்படுதலில்தான் அனைத்தும் தங்கியுள்ளது. அதனை இத் தீவின் எதிர்காலத் தலைமுறைகள் உணர்த்துகின்றன. இத் தீவின் நிரந்தர அமைதிக்கும் வன்முறை முடிவுக்குமான வழிகள் மிக அவசியம் என்பதையே இவை வலியுறுத்துகின்றன.

ஈழத் தமிழ் மாணவர்கள் இதனை தமது தேசமாக கருதுகிறார்கள். சிங்கள மாணவர்களோ இது எங்கள் தேசம் நாங்கள்தான் பெரும்பாண்மை என்று வடக்கில் கூறுகிறார்கள். இன மேலாதிக்க, இன ஒடுக்குமுறை சிந்தனை வயப்பட்ட நாட்டின் சிங்கள தலைமுறைகள் எக்காலத்திலும் இப்படியே உருவாகுவார்கள்.

அத்துடன் பின்னர் தெற்கில் தாக்கிவிட்டு வடக்கில் போய் சொல்லுங்கள் என்பதன் மூலம் வடக்கிழக்கே உங்கள் தாயகம் என்கிறார்கள். 1983இல் தெற்கில் இனப்படுகொலை நடத்தி வடக்கு போய் சேருங்கள் என்பதற்கு ஒப்பானவையே இவை.

சிங்கள அரசு – சிங்களப் படைகள் தம்முடைய இன ஒடுக்குமுறைசார் குற்றங்களையும் புனிதப்படுத்துவதுபோல் சிங்கள மாணவர்கள் தமிழ் மாணவர்களின் குருதியை உறிஞ்சுவதையும் புனிதப்படுத்துகிறார்கள். தமிழ் நிலத்தில் சிங்கள குடிகளை ஏற்றி, தமிழ் நிலத்தில் புத்தரை குடியேற்றுவதுதான் சிங்கள தேசத்தின் புனித நடவடிக்கை. தமிழ் இனத்தை அழிப்பதுதான் சிங்கள தேசத்தின் புனித நடவடிக்கை. இன மேலாதிக்க ஒடுக்குமுறை சகல மட்டங்களிலும் ஆழ அகல வேரேடி கிளைபரப்பிய நாட்டின் சிறுபான்மையர் நிலை இதுதான் என்பதே இங்கு வெளிப்படுகிறது.

இதனை இன்றைய சிங்கள அரசும் நன்றாக ஊக்குவிக்கிறது.

ஆசிரியர்.
செண்பகம்.
26.08.2016

Comments
Loading...