Designed by Iniyas LTD
தருணம் பார்த்து பழி போடும் சிங்கள அரசு.

விடுதலைப் புலிகள் பொதுமக்களை கொலை செய்த சம்பவம் ஒருபோதும் நிகழ்ந்திருக்கவில்லை. தருணம் பார்த்து சிறீலங்காஅரசாங்கம் விடுதலைப்புலிகள் மீது பழிசுமத்துகின்றது என தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் சுரேஸ் பிரேமச்சந்திரன் தெரிவித்துள்ளார்.
முல்லைத்தீவு மூங்கிலாறு பிரதேசத்தில் கடந்த வெள்ளிக்கிழமை ஒன்பது மனித எலும்புக்கூடுகள் மீட்கப்பட்டிருந்தன. விடுதலைப் புலிகளால் கொலை செய்யப்பட்ட பொதுமக்களின் எலும்புக்கூடுகள் தான் அவையெனவும் அதற்கான சாட்சியாக பொதுமகன் ஒருவரின் வாக்குமூலமொன்று கிடைக்கப் பெற்றிருப்பதாக சிறீலங்காஅரசாங்கம் தகவல் வெளியிட்டுள்ளது தொடர்பாக அவர் கருத்து வெளியிடுகையில்-
இவ் விடயம் தொடர்பில் அவர் மேலும் கூறுகையில் 2009ஆம் ஆண்டு நடைபெற்ற இறுதி யுத்தத்தின் போது மக்கள் பாதுகாப்பு வலயங்கள் பல உருவாக்கப்பட்டிருந்தன. இருப்பினும் பாதுகாப்பு வலயங்களில் இடம்பெற்ற எறிகணை தாக்குதல்களினால் பொதுமக்கள் பலர் கொல்லப்பட்டனர். கொல்லப்பட்ட பொதுமக்களின் உடல்கள் அப் பாதுகாப்பு வலயத்தினுள்ளும் அதனைச்சூழவுள்ள பிரதேசங்களிலும் புதைக்கப்பட்டன என்பதற்கான சாட்சியங்கள் சிறீலங்கா அரசாங்கத்தினால் நியமிக்கப்பட்டிருந்த கற்றுத்தந்த பாடங்கள் மற்றும் நல்லிணக்க ஆணைக்குழுவிற்கு அளிக்கப்பட்டுள்ளன.
சிறீலங்காஅரசாங்கம் தற்போது ஜெனிவாவில் நெருக்கடிகளைச் சந்திக்கும் நிலையில் நாட்டின் பலபாகங்களிலும் மனித எலும்புக்கூடுகள் தொடர்ச்சியாக மீட்கப்பட்டுக் கொண்டிருக்கும் நிலையில் தருணம் பார்த்து விடுதலைப் புலிகளின் மீது பழியைச் சுமத்தி அழுத்தங்களிலிருந்து தப்பித்துக் கொள்ள முயல்கின்றது.
எவ்வாறாயினும் குறித்த மனிதஎலும்புக்கூடுகள் தொடர்பில் நியாயமான விசாரணைகள் மேற்கொள்ளப்படுவதோடு மேலும் அப்பகுதியில் மீட்புப்பணிகளை தொடரும் பட்சத்தில் உண்மை வெளிப்படும் என்று குறிப்பிட்டுள்ளார்.