தமிழினத்திற்கான தனித்துவமான ஊடகம்

திமுகவின் பதில் விசித்திரமாக உள்ளது : பழ.நெடுமாறன் குற்றச்சாட்டு

nedumaranஇலங்கை நடந்த இனப் படுகொலை பிரச்னையில் திமுகவினர் அளித்துள்ள பதில்கள் விசித்திரமாக இருக்கிறது என்று தமிழர் தேசிய முன்னணி தலைவர் பழ. நெடுமாறன்.

இதுகுறித்து  தஞ்சாவூரில் அவர் செய்தியாளர்களிடம் கூறியதாவது:

இலங்கை வடக்கு மாகாணக் குழு உறுப்பினர் அனந்தி அந்நாட்டில் உள்ள நீதிமன்றத்தில் ஆட்கொணர்வு மனு தாக்கல் செய்துள்ளார். அதில் தனது கணவரும், விடுதலைப்புலிகள் இயக்கத்தை சேர்ந்தவருமான எழிலன் என்கிற சசிதரனின் நிலைப்பற்றி கோரியுள்ளார். கடந்த 2009 ஆம் ஆண்டில் எழிலன் என்கிற சசிதரன் இலங்கையில் போர் நிகழ்ந்த காலத்தில் கனிமொழிக்குச் செயற்கைக்கோள் தொலைபேசி மூலம் தொடர்பு கொண்டு பேசினார். கனிமொழியின் ஆலோசனையின் பேரில் எழிலனும், அவருடன் பலரும் சரணடைந்தனர். ஆனால் அவர்களைப் பற்றி எந்தத் தகவலும் எங்களுக்குத் தெரியவில்லை. இதுதொடர்பாக கனிமொழியைத் தொடர்பு கொள்ள பலமுறை முயற்சித்தும், முடியவில்லை எனக் கூறியுள்ளார்.

 இதற்கு கனிமொழி சார்பில் திமுகவின் செய்தி தொடர்பாளர் டி.கே.எஸ். இளங்கோவன் அளித்துள்ள பதில் வேடிக்கையாக இருக்கிறது. விடுதலைப்புலிகளைச் சரணடையுமாறு யாரும் ஆலோசனை கூறவில்லை என்றும், போர் நிறுத்தம் செய்ய வேண்டும் என இந்திய அரசு வற்புறுத்தி வந்த நிலையில், அது நிறைவேறாமல் போனபோது, விடுதலைப் புலிகளை எப்படி சரணடையச் சொல்வோம் என அவர் விளக்கம் அளித்துள்ளார்.

 ஆனால் இலங்கைப் போர் முடிந்த பிறகு 2011 ஆம் ஆண்டில் எங்கள் மீது கனிமொழி பகிரங்கமான குற்றச்சாட்டை முன் வைத்தார். விடுதலைப்புலிகள் இயக்கத்தினர் எங்களிடம் ஆலோசனை கேட்டபோது ஆயுதங்களைக் கீழே வைத்துவிட்டு சரணடையுமாறு கூறியபோது நெடுமாறனும், வைகோவும் சரணடைய வேண்டாம் என்றும், போரை தொடருங்கள் எனவும் அவர்களுக்குத் தவறான வழிகாட்டுதலை அளித்ததாகக் குற்றம் சாட்டினார். இந்தக் குற்றச்சாட்டை இப்போது இளங்கோவனே மறுத்திருப்பது விசித்திரமாக உள்ளது என்றார் நெடுமாறன்.

Comments
Loading...