Designed by Iniyas LTD
‘திரில்’ வெற்றி பெற்று, தங்கப்பதக்கத்தை தட்டிச் சென்றது இந்திய ஆண்கள் கபடி அணி.
ஆசிய விளையாட்டு கபடி போட்டியில் இந்திய ஆண்கள் அணி, தொடர்ந்து ஏழாவது முறையாக தங்கம் வென்று அசத்தியது. இன்று நடந்த இதயத்துடிப்பை எகிறச் செய்த பைனலில், கடைசி நிமிடத்தில் எழுச்சி பெற்ற இந்திய அணி, ஈரானை வீழ்த்தியது.
தென் கொரியாவின் இன்ச்சான் நகரில் 17வது ஆசிய விளையாட்டு நடக்கிறது. இதன் ஆண்கள் கபடி பைனலில் இந்தியா, ஈரான் அணிகள் மோதின.
திணறல் துவக்கம்:
கடந்த 2010 குவாங்சு ஆசிய விளையாட்டு பைனலில், இந்திய அணியிடம் 37–20 என, ஈரான் தோற்றிருந்தது. இதனால் இம்முறை ஈரான் அணியினர் கடும் சவால் கொடுக்கத் துவங்கினர்.
மாறாக, இந்திய வீரர்கள் துவக்கத்தில் இருந்தே தவறு செய்யத் துவங்கினர். இதனால், போட்டி துவங்கிய 9 வது நிமிடத்தில் இந்திய அணி 7–13 என, பின்தங்கியது.
ஆறு முறை சாம்பியன் அணியான இந்தியா மீண்டும் சொதப்ப, வித்தியாசம் 7–17 என, அதிகரித்தது. முதல் பாதி முடிவில் இந்திய அணி 13–21 என்ற கணக்கில் இந்திய அணி பின் தங்கி இருந்தது.
திடீர் எழுச்சி:
இரண்டாவது பாதி துவங்கியதும், இந்திய வீரர்கள் சற்று சுதாரித்துக் கொண்டனர். இதனால், 21–21 என, புள்ளி சமனிலை அடைந்தது.
தொடர்ந்து மிரட்டிய இந்திய அணி போட்டியின் 17வது நிமிடத்தில் 25–24 என, முன்னிலை பெறத்துவங்கியது. கடைசி நிமிடத்தில் ஈரான் வீரரை மடக்க, 27–25 என்ற புள்ளிக்கணக்கில்
இந்திய அணி ‘திரில்’ வெற்றி பெற்று, தங்கப்பதக்கத்தை தட்டிச் சென்றது.
ஏழாவது முறை:
கடந்த 1990, பீஜிங் ஆசிய விளையாட்டில் கபடி அறிமுகம் ஆனது. அன்று முதல் 1994 (ஹிரோஷிமா), 1998 (பாங்காக்), 2002 (புசான்), 2006 (தோகா), 2010 (குவாங்சு) என, தொடர்ந்து ஆறு முறை இந்திய அணி தங்கம் வென்றிருந்தது.
இன்று மீண்டும் வென்றதன் மூலம், ஆசிய விளையாட்டு கபடி போட்டியில் இந்திய அணி தொடர்ந்து ஏழாவது முறையாக, தங்கம் வென்று அசத்தியது.