Designed by Iniyas LTD
த.தே.கூட்டமைப்புக்கு எதிராக தமிழ் மக்கள் பேரவை ஆரம்பம்
தமிழ்த் தேசிய கூட்டமைப்புக்கு மாற்றீடாக தமிழ் மக்கள் பேரவை ஒன்று யாழ்ப்பாணத்தில் உருவாக்கப்பட்டுள்ளது. இது தொடர்பான கூட்டம் நேற்று சனிக்கிழமை மாலை ஆரம்பமாகி இரவு ஒன்பது மணிவரை இடம்பெற்றதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.![tna1-1024x6832]()

யாழ்.நூலக கேட்போர் கூடத்தில் இடம்பெற்ற கூட்டத்தில், வடமாகாண முதலமைச்சர் சீ.வி. விக்கினேஸ்வரன், இலங்கைத் தமிழரசு கட்சியின் உபதலைவர் பேராசிரியர் சீ.கே. சிற்றம்பலம், ஈழமக்கள் புரட்சிகர விடுதலை முன்னணியின் தலைவர் சுரேஸ் பிரேமசந்திரன், தமிழ்தேசிய மக்கள் முன்னணியின் தலைவர் கஜேந்திரகுமார் பொன்னம்பலம், வடமாகாண சபை உறுப்பினர் க.சிவநேசன் ஆகியோர் உட்பட பொது அமைப்புகளின் பிரதிநிதிகள் வடமாகாண மருத்துவர்கள், மதத்தலைவர்கள் என பலரும் கூட்டத்தில் பங்குபற்றியுள்ளனர்.
தமிழ்த்தேசிய கூட்டமைப்பு என்ற பெயரில் இலங்கைத் தமிழரசுக் கட்சி மற்றும் சில தமிழ் கட்சிகளின் செயற்பாடுகள் ஸ்ரீலங்கா அரசாங்கத்துக்கு துணைபோவதாகவும், இனப்பிரச்சினைக்கான பேச்சுக்கள் கூட இடம்பெறவில்லை என்றும் குற்றம் சுமத்திய பிரதிநிதிகள் எதிர்காலத்தில் தமிழ் மக்களின் நலன் சார்ந்து செயற்படவுள்ளதாகவும் கூறியுள்ளனர்.
அதேவேளை தமிழ் மக்கள் பேரவை அங்குரார்ப்பண நிகழ்வுக்கு ஊடகவியலாளர்கள் அனுமதிக்கப்படவில்லை. ஆனாலும் கூட்டம் நடைபெறுவதை அறிந்து ஊடகவியலாளர்கள் அங்கு சென்றனர். எனினும் உள்ளே செல்ல அனுமதிக்கப்படவில்லை. கூட்டம் முடிவடைந்து வெளியே வந்த முதலமைச்சர் விக்னேஸ்வரன் கருத்துக் கூறவில்லை. எனினும் கூட்டத்தில் கலந்து கொண்ட கஜேந்திரக்குமார் பொன்னம்பலம் சில கருத்துக்களை கூறியதாக ஊடகவியலாளர்கள் குறிப்பிட்டனர். தமிழ் மக்கள் பேரவை தொடர்பாக விரைவில் ஊடங்களுக்கு அறிவிக்கப்படும் என இதன் ஏற்பாட்டாளர்கள் தெரிவித்தனர்.
A