Designed by Iniyas LTD
நரேந்திரமோடி முதன்முதலாக சீன அதிபர் ஜி ஜின்பிங்கை சந்திக்கிறார்
பிரேசிலில் நடக்க உள்ள ‘பிரிக்ஸ்’ அமைப்பின் 6–வது உச்சி மாநாட்டில் கலந்து கொள்ள பிரதமர் நரேந்திரமோடி, ரஷிய அதிபர் விளாடிமிர் புதின், சீன அதிபர் ஜி ஜின்பிங், பிரேசில் அதிபர் டில்மாரோசெப், தென் ஆப்பிரிக்கா அதிபர் ஜேக்கப் ஜூமா ஆகியோர் பிரேசில் சென்றுள்ளனர்.பிரதமர் நரேந்திர மோடியுடன் தேசிய பாதுகாப்பு ஆலோசகர் அஜித் தோவால், மத்திய வர்த்தக மற்றும் தொழில் துறை மந்திரி நிர்மலா சீதாராமன், வெளியுறவுத்துறை செயலாளர் சுஜாதாசிங், நிதி அமைச்சக செயலாளர் அரவிந்த் மாயாராம் மற்றும் உயர் அதிகாரிகள் சென்றுள்ளனர்.
பிரதமர் நரேந்திரமோடி முதல் நாள் மாநாட்டுக்கு செல்லும் வழியில் ஜெர்மன் தலைநகர் பெர்லினில் நேற்று தங்கினார். இன்று போர்ட்டலிசா நகருக்கு செல்கிறார். நாளை (செவ்வாய்கிழமை) பிரதமர் நரேந்திரமோடி முதன்முதலாக சீன அதிபர் ஜி ஜின்பிங்கை சந்திக்கிறார். அப்போது இரு நாட்டின் புதிய தொடர்புக்கான அத்தியாயம் தொடங்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. மேலும் இந்தியாவும் சீனாவும் ஜூன் 30–ந் தேதி புரிந்துணர்வு ஒப்பந்தம் செய்துள்ளன.
அதன்படி இந்தியாவில் சீனா தொழில் பூங்கா அமைக்க உள்ளது.அதற்கான இடம் தேர்வு, முதலீடு செய்யும் நிதி ஆகியவை குறித்தும் பேச்சுவார்த்தை நடைபெறும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.பிரிக்ஸ் மாநாட்டில் கலந்து கொள்ளும்படி அர்ஜென்டினா, பொலிவியா, ஈகுவடார், பெரு, கரினாம், வெனிசுலா, உருகுவே, சிலி உள்ளிட்ட 11 தென்அமெரிக்க நாடுகளுக்கும் அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.