Designed by Iniyas LTD
நாமலுக்கு விமானப்பணிப் பெண்களை அறிமுகம் செய்து வைத்தவரை தேடி வரும் சிறி.காவற்துறை
நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்சவிடம், விமானப் பணிப்பெண்ணான நித்தியா சேனானி சமரநாயக்க மற்றும் பூஜானி போகொல்லாகம ஆகிய இருவரை அறிமுகம் செய்து வைத்த சம்பிக்க கருணாரத்ன என்பவரை தேடி, பொலிஸ் நிதி மோசடி விசாரணைப் பிரிவினர் விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர். எப்.சீ.ஐ.டி 82/15 என்ற விசாரணை ஆவணங்களுக்கு அமைய இந்த நபர் சம்பந்தமாக விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன.
நித்தியா, விமான பணிப்பெண்ணாக பணியாற்றிய அதேநேரம் கவர்ஸ் கோபரேஷன் நிறுவனத்தின் பணிப்பாளராகவும் செயற்பட்டு வந்துள்ளதாக தற்போது தெரியவந்துள்ளது. அதேபோல் பூஜானி போகொல்லாகம, நாமல் ராஜபக்சவுக்கு சொந்தமான என்.ஆர்.அசோசியேட்ஸ் சட்ட நிறுவனத்தில் முகாமையாளராக பணியாற்றி வந்துள்ளார். சம்பிக்க கருணாரத்ன, சஷீந்திர ராஜபக்ச ஊடாகவே நாமல் ராஜபக்சவுக்கு அறிமுகமாகியுள்ளார். சஷீந்திர ராஜபக்சவுடன் நெருங்கி செயற்பட்ட சம்பிக்க, அவருடன் ஏற்பட்ட மோதல் காரணமாக அவரிடம் இருந்து விலகி, முன்னாள் ஜனாதிபதியின் பாரியார் ஷிரந்தி ராஜபக்சவின் பிரத்தியேக செயலாளராக பணியாற்றி வந்துள்ளார். அதில் இருந்தும் விலகிய சம்பிக்க, நாமலுடன் நெருங்கி செயற்பட்டு வந்துள்ளதாக கூறப்படுகிறது.
சம்பிக்க கருணாரத்ன என்ற இந்த நபர் கப்பம் சம்பி எனவும் அழைக்கப்படுவதுண்டு. சம்பிக்க கருணாரத்ன, கடந்த ஆட்சிக்காலத்தில் பெருந்தெருக்கள் அமைச்சின் இணைப்புச் செயலாளராகவும் அரச மரக்கூட்டுத்தாபனத்தின் பணிப்பாளர்களில் ஒருவராகவும் துறைமுகங்கள் மற்றும் கப்பற்துறை அமைச்சின் அதிகாரியாகவும் நாமல் ராஜபக்சவின் தலைமையில் இயங்கிய இளைஞர்களுக்கான எதிர்காலம் அமைப்பின் பிரதான அமைப்பாளராகவும் செயலாற்றி வந்துள்ளார். மேலும் தேசிய லொத்தர் சபை, பெருந்தெருக்கள் அமைச்சு, துறைமுகங்கள் மற்றும் கப்பற்துறை அமைச்சு ஆகியவற்றில் இருந்து சம்பிக்க மூன்று சம்பளங்களை பெற்று வந்துள்ளார்.
அத்துடன் சம்பிக்க கருணாரத்ன, அரச மரக் கூட்டுத்தாபனத்தில் நடந்த ஊழல் தொடர்பில் குற்றச்சாட்டை எதிர்நோக்கியுள்ளதுடன் அரச பணத்தை மோசடியான முறையில் பயன்படுத்தினார் என்ற குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்டு, கொழும்பு கோட்டை நீதவான் பிரியந்த லியனகேவின் உத்தரவின் பேரில் 25 ஆயிரம் ரூபா ரொக்கப் பிணை மற்றும் தலா பத்து லட்சம் ரூபா பெறுமதியான இரண்டு சரீரப் பிணையிலும் விடுதலை செய்யப்பட்டார்.
மேலும் பத்தரமுல்லை லேக் வீதி இலக்கம் 472 என்ற விலாசத்தில் உள்ள சம்பிக்க கருணாரத்னவின் வீட்டில் இருந்து 106 கிராம் எடை கொண்ட 10 தங்க கட்டிகளையும் நிதி மோசடி விசாரணைப் பிரிவினர் கைப்பற்றியிருந்தமை குறிப்பிடத்தக்கது.