தமிழினத்திற்கான தனித்துவமான ஊடகம்

நூற்றுக்கணக்கான மாணவர்களுடன் வயலுக்குள் புதைந்த பேருந்து – யாழில் சம்பவம் …

யாழ் சுழிபுரத்தில் உள்ள வெண்கரம் வள நிலையத்தில் மாணவர்களுக்கான வருடாந்த ஒன்றுகூடல் நிகழ்வு  நேற்று  இடம்பெற்றது.

குறித்த ஒன்று கூடலுக்காக   அராலி, பொன்னாலை, பாண்டவெட்டை – காட்டுப்புலம் பிரதேசங்களில்  கல்வி பயிலும் நூற்றுக்கணக்கான மாணவர்கள்  பேருந்தில் ஏற்றிவரப்பட்டுள்ளனர்.

பேருந்து பாண்டவெட்டையில் இருந்து சுழிபுரம் நோக்கி சென்றபோது வீதியால் சென்ற மோட்டார் சைக்கிள் ஒன்றுக்கு வழிவிட முற்பட்டபோது  வயலுக்குள் சரிந்து புதைந்துள்ளது.

இதன்போது வீதியோரமாக இருந்து பெரிய கல் ஒன்றுடன் வாகனத்தின் அடிப்பகுதி தொடுகையுற்றதால் வாகனம் வயலுக்குள் குடை சாயும் நிலைக்கு சென்றபோது   மாணவர்கள் பெரும் பீதிக்குள்ளாகினர்.

எனினும், அவர்கள் வயலுக்கூடாக இறக்கப்பட்டு பாதுகாப்பாக வெளியேற்றப்பட்ட  பின்னர் அங்கிருந்து கால்நடையாக சுழிபுரம் வெண்கரம் வள நிலையத்திற்கு கூட்டிச்செல்லப்பட்டுள்ளனர்.

இதேவேளை  சுழிபுரத்தில் இருந்து   பாண்டவெட்டை காட்டுப்புலம்  செல்லும் ஒரு கிலோமீற்றர் நீளமான   வீதி மிக மோசமாகச் சேதமடைந்துள்ளது.

இந்த வீதியூடாகச் செல்லும் வாகனங்கள் அடிக்கடி தடம்புரள்வதும் சேதமடைவதுமாக உள்ளதாகவும் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

இவ்வாறான நிலையில்   குறித்த  வீதியைத் திருத்தித் தருமாறு அப்  பிரதேச மக்கள் தொடர்ச்சியாகக் கோரிக்கை விடுத்து வருகின்ற நிலையில், அரச அதிகாரிகளும் அரசியல்வாதிகளும் தொடர்ந்தும் பாரமுகமாக இருந்து வருகின்றதாக  குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.

மேலும் குறித்த  வீதியைத் திருத்துமாறு  வலி.மேற்கு பிரதேச சபையில்   பிரேரணை நிறைவேற்றப்பட்ட போதிலும் அது கிடப்பில் போடப்பட்டுள்ளதாக தெரியவந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

Comments
Loading...