Designed by Iniyas LTD
பிரித்தானிய புலம்பெயர் மக்களால் நினைவுகூரப்படும் முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் வாரம்.
நாடு கடந்த தமிழீழ அரசாங்கத்தின் ஏற்பாட்டில் மே மாதம் 12ம் திகதி முதல் 18ம் திகதி வரை முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் வாரத்தை நினைவு கூறுமுகமாக மாபெரும் தொடர் மிதிவண்டி கவனயீர்ப்பு போராட்டமும் குருதிக்கொடை நிகழ்வுகளும் சிரமதானப்பணிகளும் ஏற்பாடு செய்யப்பட்டு நடைபெற்று வருகின்றன.
இதில் பல பிரித்தானியாவின் பல பிரதேசங்களிலிருந்து நாடு கடந்த தமிழீழ அரசாங்கத்தின் செயற்பாட்டாளர்களும் பொதுமக்களும் கலந்து கொண்டு குருதிக்கொடை மற்றும் சிரமதானப்பணிகளில் ஈடுபட்டதன் மூலம் சிறீ லங்கா அரசாங்கத்தால் நடாத்தப்பட்ட இனப்படுகொலை குறித்தான பரப்புரைகளில் ஈடுபட்டனர்.
அத்துடன் மே 11ம் திகதியிலிருந்து 13ம் திகதி வரை ”Keep the Britain Plastic Free” என்ற தொனிப்பொருளில் சுத்திகரிப்பு சிரமதானப்பணியும் பொது மக்களாலும் நாடு கடந்த தமிழீழ அரசாங்கத்தின் செயற்பாட்டாளர்களாலும் நடாத்தப்பட்டது.
மிதி வண்டி கவனயீர்ப்பு போராட்டமானது மே 12ம் திகதி இலன்டன் டவுனிங் வீதியிலிருந்து ஆரம்பித்து ஈஸ்ட்ஹம், கிங்ஸ்டன், பெர்மிங்ஹம், மில்டன் கெய்ன்ஸ், எட்ஜ்வேர், வெம்ளி அரீனா ஆகிய இடங்கள் வழியாக 7ம் நாளான மே 18ம் திகதி மீண்டும் பிரித்தானிய பிரதமர் வாயிற்தளமான இலன்டன் டவுனிங் வீதி வந்தடயவுள்ளமையும் குறிப்பிடத்தக்கது.
இந்த தொடர் கவனயீர்ப்பு நிகழ்வுகளில் நாடு கடந்த தமிழீழ அரசாங்க அரசவை உறுப்பினர்களும் கலந்து பிரித்தானிய பாராளுமன்ற உறுப்பினர்களையும் அரசியல் பிரமுகர்களையும் சந்தித்து சிறீ லங்கா அரசாங்கத்தை அதன் போர்க்குற்றங்களுக்காக சர்வதேச குற்றவியல் நீதிமன்றின் முன் நிறுத்தவும், சர்வதேசத்திடம் தமிழ் மக்களுக்கான பரிகார நீதிக்கோரியும், ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் ஆணைக்குழுவின் சிறீலங்கா அரசுக்கான காலக்கெடுவை நீடிக்க வேண்டாமெனக்கோரியும், சிறீலங்கா அரசாங்கம் ஐக்கிய நாடுகள் மனிதவுரிமை ஆணைக்குழுவுக்கு அளித்த அதன் வாக்குறுதியை நிறைவேற்றத்தவறும் பட்சத்தில் அதனை பொது நலவாய நாடுகளிலிருந்து இடை நிறுத்த வேண்டியும் தமது மனுக்களை கையளித்து அதற்கான ஆதரவுகளை பெற்றமை சிறப்பம்சமாகும்.