Designed by Iniyas LTD
புலம்பெயர் தமிழர் போராட்டங்களின் அவசியம்!

ஸ்ரீலங்கா அரசு புலம்பெயர் தமிழரின் போராட்டங்களை முடக்குவதற்கு பெரும் நிதியை செலவழித்து பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டது. தாயகத்தைப் பொறுத்தவரையில் அங்குள்ள மக்களை இராணுவத்தின் துப்பாக்கி கொண்டு அடக்கிவிடலாம் என்றும் ஸ்ரீலங்கா அரசு நினைத்தது. அதனால் தமிழ் ஈழம் குறித்த புலம்பெயர் தமிழர் போராட்டங்களை எப்படியேனும் ஒடுக்கிவிட வேண்டும் என்று ஸ்ரீலங்கா அரசு பல வகையிலும் முனைந்தது.
தமிழ் ஈழ விடுதலைப் போராட்டத்தில் புலம்பெயர் மக்களின் பங்கு அளப்பெரியது. அவர்கள் தமது உழைப்பால் போராட்டத்தை நகர்த்தினார்கள். உலக அரங்கில் நின்று கொண்டு தாம் புலம்பெயர்ந்த அரசியல் துயரத்தை ஆயுதமாக பாவித்து ஏன் புலம்பெயர்ந்தோம் என்பதை சொன்னார்கள். இலக்கியம், ஊடகம், ஆயுதம், நிதி என பலவகையிலும் புலம்பெயர் மக்கள் தமது பங்கை ஆற்றினார்கள்.
ஒவ்வொரு குடிமகனும் தனது தாய் நாட்டை விட்டு வெளியேறிய பின்னரே அதன் அருமையை உணர்கிறான். காலநிலை, பண்பாடு, கலாசாரம், பழக்க வழக்கங்கள், குடிசனங்கள் என யாவற்றையும் இழந்து அந்நிய தேசம் ஒன்றில் வாழும்போதுதான் தன் தாய் நாட்டின் அத்தனை கூறுகளின் அருமையையும் அவன் உணர நேரிடுகிறது. ஒவ்வொரு மனிதனும் தனது வாழ்வியல் அமைப்பு புறித்த பசியை விரதத்தை உணர இயலும்.
சர்வதேசத்தின் நடவடிக்கைகள் ஸ்ரீலங்கா அரசுக்கு சாதாகமாக முன்னெடுக்கப்படும் இந்தக் காலத்தில் ஸ்ரீலங்காவுக்கு எதிராகவும் தமிழ் ஈழ மக்களுக்கு நடந்த அநீதிகளுக்கு நீதி கோரியும் போராட்டங்களை முன்னெடுக்க வேண்டியது காலத்தின் கட்டாயமானது.
சிங்கள பேரினவாத அரசால் ஒடுக்கப்படும் தமிழ் ஈழ மக்கள் புலம்பெயர் தேசத்திலிருந்து தாய் மண்ணை நோக்கி கொள்ளும் ஈர்ப்பே அவர்களின் போராட்டங்கள், பங்களிப்புக்கள் போன்றவை. கடந்த காலத்தில் தமிழ் ஈழ விடுதலைப் போராட்டத்தின் நியாயத்தை உலக அரங்கில் கொண்டு சென்று சேர்த்ததில் புலம்பெயர் மக்கள் ஆற்றிய பணி மிக மிக முக்கியமானது.
தமிழ் ஈழத்தில் ஸ்ரீலங்கா அரசு மேற்கொண்ட யுத்தம் மற்றும் இன அழிப்புச் செயல்கள் குறித்து நிலத்தில் வாழுகின்ற மக்கள் எதனையும் செய்ய முடியாத கையறு நிலையில் அடக்கி வைக்கப்பட்ட வேளையில் புலம்பெயர் தமிழ் மக்களே அவர்களின் உள்ளக்கிடக்கைகளை உலக அரங்கில் எடுத்துரைத்தனர். புலம்பெயர் சக்தி என்பது மாபெரும் சக்தி. இதனைக் கண்டு ஸ்ரீலங்கா அரசு அச்சம் கொண்டது.
இந்த நிலையில் ராஜபக்ச அரசு புலம்பெயர் தமிழர்களை நோக்கி யுத்த நடவடிக்கைகளை மேற்கொண்டது. புலம்பெயர் அமைப்புக்கள் மற்றும் புலம்பெயர்ந்த ஈழ மக்கள் பலரை நாட்டில் தடைசெய்தது. இது பாரியதொரு யுத்தம். நிலத்தில் முள்ளிவாய்க்கால் யுத்தம் செய்து விடுதலைப் போராட்டத்தை முடக்க நினைத்த ராஜபக்ச அரசு புலத்தில் இவ்வாறு தடை செய்யுமொரு யுத்தத்தை நடத்தியது.
ஸ்ரீலங்காவின் புதிய அரசு புலம்பெயர் மக்களை அணைத்து அழிக்கும் செயலில் ஈடுபடுகிறது. அதாவது ராஜபக்ச தடைசெய்த புலம்பெயர் அமைப்புக்கள் மற்றும் புலம்பெயர் தமிழர்களை பெரும் நிதியை செலவு செய்து அவர்களை தன் வசம் இழுக்கும் செயற்பாட்டில் ஈடுபடுகின்றது. நிலத்தில் தமிழ் மக்கள்மீதான கடந்த கால செயற்பாடுகள் எவையும் நிறுத்தப்படாத நிலையில் வெறும் வாக்குறுதிகளை வைத்து இந்த விளையாட்டு இடம்பெறுகின்றது.
சர்வதேச நெருக்கடிகளை குறைக்க புலம்பெயர் தமிழர்களை ஒடுக்க வேண்டும், அவர்களின் போராட்டங்களை ஒடுக்க வேண்டும் என்று ஸ்ரீலங்கா கருதுகிறது. போருக்குப் பிந்தைய காலத்தை அவ்வாறே ஸ்ரீலங்கா அரசு பயன்படுத்துகிறது. 2001இற்குப் பின்னரான சமாதான ஒப்பந்த காலத்தில் விடுதலைப் போராட்டத்தை ஒடுக்க ஸ்ரீலங்கா அரசு முன்னெடுத்த நடவடிக்கைகளுக்கு இவை ஒப்பானவை.
ஸ்ரீலங்கா அரசு தமிழ் ஈழத்தில் நிகழ்த்திய இனப்படுகொலை யுத்தம் குறித்த சர்வதேசத்தின் நடவடிக்கைகள் ஸ்ரீலங்கா அரசுக்கு சாதாகமாக முன்னெடுக்கப்படும் இந்தக் காலத்தில் ஸ்ரீலங்காவுக்கு எதிராகவும் தமிழ் ஈழ மக்களுக்கு நடந்த அநீதிகளுக்கு நீதி கோரியும் போராட்டங்களை முன்னெடுக்க வேண்டியது காலத்தின் கட்டாயமானது.
எதிர்வரும் மார்ச் மாதம் ஐக்கிய நாடுகள் சபையில் இடம்பெறவுள்ள ஐக்கிய நாடுகள் மனித உரிமைப் பேரவையின் கூட்டத் தொடரில் நடக்கும் ஸ்ரீலங்கா தொடர்பான விவகாரம் எப்படி அமையப் போகின்றது? என்ற கேள்வி அனைவரிடமும் உண்டு. புலம்பெயர் தமிழர்களின் போராட்டங்கள் பெருமளவானவற்றை முடக்கிய நிலையில் மனித குல விரோத குற்றங்களிலிருந்து ஸ்ரீலங்கா தப்பிக்கொள்ள சந்தர்ப்பம் ஏற்பட்டுள்ளது.
போரைவிடவும் அமைதியே கொடியது என்பதை எமது போராட்ட வரலாற்றில் பல கால கட்டங்களில் உணர்ந்திருக்கிறோம். எனவே ஸ்ரீலங்கா அரசின் இரண்டாம் முள்ளிவாய்க்கால் யுத்தத்தை முறியடிக்க புலம்பெயர் தேசங்களில் வாழும் தமிழ் ஈழ உறவுகள் தமிழ் இனத்தின் நீதி கோரிய, தமிழ் ஈழத்தின் விடுதலை வேண்டிய போராட்டங்களை முன்னெடுக்க வேண்டும்.
ஆசிரியர், செண்பகம், 22.02.2016