Designed by Iniyas LTD
புலிகளை ஒழிக்க முழுமையாக ஒத்துழைத்தோம்!
முப்பது வருடகால யுத்தம் துரதிஷ்டவசமானது. புலிகளை முற்றாக ஒழிப்பதற்காக நாம் முழுமையான ஒத்துழைப்புக்களை வழங்கியிருந்தோமென பாகிஸ்தான் பிரதமர் நவாஸ் ஷெரிப் தெரிவித்தார்.
பயங்கரவாதம் எமக்கு பொதுவான எதிரியாகும் எனச் சுட்டிக் காட்டிய பிரதமர் நவாஸ் ஷெரிப் தெற்காசிய வலயத்தில் கேந்திர முக்கியத்துவம் வாய்ந்த ஸ்திரத்தன்மை அவசியமாகின்றதெனவும் குறிப்பிட்டார். அத்துடன் இலங்கை வர்த்தகர்கள் பாகிஸ்தானில் பாரியளவில் முதலீடுகளை மேற்கொள்வதற்கும் அழைப்பு விடுத்துள்ளார்.
லக்ஷ்மன் கதிர்காமர் சர்வதேச உறவுகள் மற்றும் மூலோபாயக் கற்கைகளுக்கான நிலையம், வௌிவிவகார அமைச்சு ஆகியவற்றின் இணை ஏற்பாட்டில் பாகிஸ்தான் மற்றும் இலங்கைக்கிடையிலான தொடர்புகள் எனும் தலைப்பில் இலங்கைக்கு விஜயம் செய்துள்ள பாகிஸ்தான் பிரதமர் நவாஸ் ஷெரிப் விசேட உரையாற்றியிருந்தார்.
கொழும்பு சினமன் லேக்சைட் ஹோட்டலில் நேற்று நடைபெற்ற இந்நிகழ்வில் வௌிவிவகார அமைச்சர் மங்கள சமரவீர, எதிர்க்கட்சித்தலைவர் இரா.சம்பந்தன், பல்வேறு நாடுகளின் இலங்கைக்கான தூதுவர்கள், இராஜதந்திரிகள், அமைச்சர்கள், பாராளுமன்ற உறுப்பினர்கள் சமயத்தலைவர்கள் உட்பட பலர் கலந்துகொண்டிருந்தனர்.
இங்கு உரையாற்றும் போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார். அவர் அங்கு மேலும் உரையாற்றுகையில்,
முன்னாள் வெளிவிவகார அமைச்சர் லக்ஷ்மன் கதிர்காமரின் நினைவாக இந்தக் கல்லூரி இயங்குகின்றது. லக்ஷ்மன் கதிர்காமர் இந்த நாட்டின் வௌிவிவகார அமைச்சராக பதவிவகித்த காலத்தில் சர்வதேசத்திலும் உள்நாட்டிலும் மிக முக்கியமான செயற்பாடுகளை முன்னெடுத்திருந்தார்.
பாகிஸ்தானுக்கும் இலங்கைக்கும் இடையில் வரலாற்று ரீதியான நெருங்கிய தொடர்புகள் காணப்படுகின்றன. ஜனநாயக தலைமைகளைக் கொண்ட இரு நாடுகளும் சமாதானம் நிறைந்த சூழலில் இளையோர் சமூகம் ஆற்றல்மிகுந்ததாக உருவாக வேண்டுமென்பதை இலக்காக கொண்டிருக்கின்றன.
இரு நாடுகளும் அடிப்படைவாதம், பயங்கரவாதம் ஆகியவற்றிலிருந்து வௌியேறி பொருளாதாரத்தை வலுவூட்டுவதுடன் நிலையான கல்வியை உறுதி செய்வதில் கவனம் செலுத்தியுள்ளன. இந்த இலக்கை அடைவதையே உயரிய நோக்கமாக கொண்டிருக்கின்றன.
முப்பது வருடகால யுத்த நிலைமைகள் துரதிஷ்டவசமானது. பயங்கரவாதத்தை முற்றாக ஒழிப்பதற்காக நாம் முழுமையான ஒத்துழைப்புக்களை வழங்கியிருந்தோம். அனைவரினதும் ஏக ஒத்துழைப்பின்றி பயங்கரவாத்தை ஒழித்துவிடமுடியாது. எமது நாடு பத்தாண்டுகள் இராணுவக் கட்டுப்பாட்டில் காணப்பட்டமையால் உட்கட்டமைப்பு முழுமையாக பாதிக்கப்பட்டிருந்ததோடு இழப்புக்களும் நிகழ்ந்திருந்தன.
அதுமட்டுமன்றி பயங்கரவாதிகளின் செயற்பாடுகள் எமது நாட்டில் வெகுவான பாதிப்புக்களை ஏற்படுத்தியிருந்தன. குறிப்பாக பழங்குடி மக்கள் வசிக்கும் பகுதிகளில் முகாம்களை அமைத்த பயங்கரவாதிகள் தமது செயற்பாடுகளை முன்னெடுப்பதற்காக அப்பகுதிகளில் முழுமையான ஆதிக்கத்தை செலுத்தியிருந்தனர். பொதுமக்களை பாதுகாக்க வேண்டிய பொறுப்பு எமக்கு காணப்பட்டது. அதற்காக பயங்கரவாதத்திற்கு எதிரான நடவடிக்கைகளை தீவிரமாக முன்னெடுக்கவேண்டியிருந்தது.
இதன்போது பயங்கரவாதிகள் தங்கியிருந்த பகுதிகள் முற்றாக அழிக்கப்பட்டன. அவர்களுக்கு நிதியுதவி உள்ளிட்ட பல்வேறு உதவிகளை வழங்கியவர்கள் ஆதரவளித்தவர்கள் ஆகியோரை சட்டத்தின் முன் நிறுத்தவேண்டிய தேவை ஏற்பட்டிருந்தது. இராணுவத்தினரது தியாங்களே நாட்டில் மீண்டும் சட்டம் ஒழுங்கு பாதுகாப்பை உறுதிப்படுத்துவதற்கு உதவியிருந்தது.
மறுபக்கத்தில் பயங்கரவாதச் செயற்பாடுகள் தலைதூக்குவதற்கு அடிப்படையில் காணப்படும் விடயங்களை ஒழிக்கவேண்டியது மிக முக்கியமானதாகவுள்ளது. உண்மையான ஜனநாயகமானது மக்கள் ஏற்றுக்கொள்வதன் அடிப்படையிலேயே காணப்படுகின்றது. அதுவரையில் உண்மையான ஜனநாயகத்தை எட்டமுடியாது. இதுவே யதார்த்தமாகவுள்ளது. ஜனநாயகமானது பொருளாதார வளர்ச்சிக்கும் கலாசார செயற்பாடுகளுக்கும் வாய்ப்புக்களை ஏற்படுத்துகின்றது.
எனது தலைமையிலான அரசாங்கம் பொருளாதாரத்தில் மிக முக்கியத்துவம் வாய்ந்த முன்னேற்றத்தை எட்டியுள்ளது. கடந்த ஏழுவருடமாக காணப்பட்ட பாகிஸ்தானின் மொத்த தேசிய உற்பத்தியானது மூன்றுவீதத்தால் அதிகரித்துள்ளது. அதேநேரம் எனது அரசாங்கத்தின் ஆட்சிக்காலத்தின் முதலிரண்டு வருடத்தில் மொத்த வருமானமானது 12.9சதவீதமாகியுள்ளது. சர்வதேச அளவில் முன்னெடுக்கப்பட்ட ஆய்வுகள், ஆலோசனைகள், ஆதரவுகள் ஆகியனவே பொருளதாரத்தில் பாகிஸ்தான் தற்போதைய நிலையை எட்டுவதற்கு காரணமாக அமைந்திருகின்றன. அத்துடன் சர்வதேச நிறுவனங்களும் உதவிகளை வழங்கியிருந்தன.
எனது அரசாங்கம் நாட்டின் பொருளாதாரத்தை மட்டும் கருத்தில் கொள்ளாது பிராந்திய அபிவிருத்திக்கும் முக்கியத்துவம் அளித்திருந்தது. அதற்காக பிரந்திய நாடுகளுடன் உறுதியான உறவுகளை ஏற்படுத்துவதையும் சமாதானத்தை கட்டியெழுப்புவதற்காகவும் அதீத ஒத்துழைப்புக்களை வழங்கி ஊக்குவித்திருந்தது.
பாகிஸ்தானுக்கும் சீனாவுக்கும் இடையில் மேற்கொள்ளப்பட்ட பொருளாதார உடன்படிக்கை இதற்கான சிறந்த உதாரணமாக அமைகின்றது. இந்த உடன்படிக்கையானது பல்வகை உட்கட்மைப்புத் திட்டங்களைக் கொண்ட 46 பில்லியன் டொலர் பெறுமதியானதாகும். பாகிஸ்தான், ஆப்கானிஸ்தான் துர்கினிஸ்தான் இந்தியா ஆகிய நாடுகளுக்கிடையிலான குழாய் வாயு திட்டத்தையும் ஊக்குவிக்கின்றது.
சமாதானமது அனைவரினதும் ஒத்துழைப்புக்களுடன் ஒன்றுபட்ட செயற்பாட்டின்மூலமே எட்ட முடியும். தனியே பேச்சுவார்த்தைகளால் அதனை அடைந்து விடமுடியாது. இந்திய பிரதமர் நரேந்திர மோடி பிரதமராக தெரிவு செய்யப்பட்டு பதவியேற்பு நிகழ்வுக்கு அழைப்பு விடுத்திருந்தபோது நான் அதில் பங்கேற்றிருந்தேன். இதன் விளைவாகவே இருநாடுகளுக்கிடையிலான உறவு புத்துயிர் பெற்று பேச்சுக்கள் விஜயங்கள் என்பன இடம்பெற்று வருகின்றன. விசேடமாக இரு நாட்டுக்கும் பொதுவான எதிரியாக காணப்படும் வறுமையை ஒழிப்பதென்று முடிவு எட்டப்பட்டது.
இதன்தொடர்ச்சியாக கடந்த மாதம் 25ஆம் திகதி இந்தியப்பிரதமர் நரேந்திர மோடி பாகிஸ்தானுக்கு விஜயம் மேற்கொண்டிருந்தார். என்னுடன் பல விடயங்களை பேசியிருந்தார். இவ்வாறான செயற்பாடுகள் இரு நாடுகளுக்கிடையில் உறவுகளை வலுப்படுத்துவதற்கு அவசியமாகின்றது. அதன்பிரகாரம் இரு நாடுகளுக்கிடையில் உறவுகள் மீளவும் வலுவடைந்துள்ளன. இரு நாடுகளுக்கிடையில் பேச்சுவார்த்தைகள் தொடர்ந்தும் இடம்பெறவிருக்கின்றன. அதற்கான திட்டவரைவுகள் முன்வைக்கப்பட்டு உயர் மட்டத்திலான பேச்சுகள் தொடர்ந்தும் முன்னெடுப்பது குறித்து ஆராயப்பட்டு வருகின்றன.
பாகிஸ்தானில் நிலைநாட்டப்படும் அமைதியானது பிராந்தியத்தின் அமைதியில் பாரிய செல்வாக்கை செலுத்துகின்றது. அது மிகவும் முக்கியமானதாகவும் உள்ளது. பயங்கரவாதம் என்பது எமக்கு பொதுவான எதிரியாகும். பிரந்திய நாடுகளில் நிலையான சமாதானத்திற்கும் நல்லிணக்கத்தை கட்டியெழுப்புவதற்கும் பாகிஸ்தான் தனது முழுமையான ஒத்துழைப்புக்களை தொடர்ந்தும் வழங்கும். தொடச்சியான பேச்சுக்களின் அடிப்படையில் தெற்காசிய வலயத்தில் கேந்திர முக்கியத்துவம் வாய்ந்த ஸ்திரத்தன்மை அவசியமாகின்றது.
விசேடமாக சார்க் கட்டமைப்பில் உள்ள நாடுகளிடையே பேச்சுக்கள் முன்னெடுக்கப்பட்டு சார்க் வலயம் உறுதியானதாக அமைக்கப்படவேண்டும். இந்து சமுத்திர பிராந்தியத்தில் நிலையான அமைதி நிலைநாட்டப்படுவதோடு பிரந்திய நாடுகளுக்கிடையிலான கடல்வழி மார்க்கமான தொடர்புகளும் பாதுகாப்பான வகையில் உறுதிப்படுத்தப்படவேண்டும். இதற்காக பிரந்திய நாடுகளில் வசிக்கும் மக்களிடையே நம்பிக்கையை கட்டியெழுப்ப வேண்டும்.
தற்போதைய நிலையில் பாகிஸ்தான் முதலீடுகளை மேற்கொள்வதற்கும் வர்த்தக நடவடிக்கைகளை முன்னெடுப்பதற்குமான ஏதுநிலைகளை முழுமையாக கொண்டிருக்கின்றது. ஆகவே இலங்கை வர்த்தக துறையினர் எமது நாட்டில் முதலீடுகளை பாரியளவில் மேற்கொள்ளவேண்மென இத்தருணத்தில் அழைப்பு விடுகின்றேன்.
இலங்கையிலிருந்து ஏற்றுமதி செய்யப்படும் பொருட்களுக்கான விசேட சந்தை வாய்ப்பினை முழுமையான அளவில் ஏற்படுத்தித் தருவதற்கு நாம் தயாராகவிருப்பதோடு விசேட வரிசலுகைகள் விலக்குகளை வழங்குவதற்கும் தயாரகவிருக்கின்றோம். இது எதிர்காலத்தில் இருநாடுகளுக்கிடையிலாக உறவுகளை மேலும் வலுவடைவதற்கு வழிசமைக்கும்.
பாகிஸ்தான் சுதந்திரமடைந்தது முதல் ஆறுதசாப்த நெருக்கமான உறவுகளை இலங்கையுடன் கொண்டிருக்கின்றது. இரு நாட்டு மக்களிடையேயும் சகோதரப்பிணைப்புடைய உறவுகள் காணப்பட்டிருந்தன. அந்த நிலைமை தொடவேண்டுமென நான் விரும்புகின்றேன்.
சுதந்திர இலங்கையின் இலங்கையின் முதலாவது பிரதமர் டி.எஸ்.சேனநாயக்க பதவியேற்றதன் பின்னர் தனது உத்தியோக பூர்வமான முதலாவது விஜயத்தை எமது நாட்டிற்கே மேற்கொண்டிருந்தார். ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவும் பதவியேற்றபின்னர் கடந்த ஏப்ரல் மாதம் பாகிஸ்தானுக்கு வருகைதந்து பல்வேறு விடயங்கள் குறித்து பேச்சுவார்த்தை நடத்தியிருந்தார். இரு நாடுகளிடையே உறவுகளை மென்மேலும் வலுப்படுத்துவதாகவே அமையும்.
1971ஆம் ஆண்டு பாகிஸ்தானுக்கு இலங்கையர்கள் வழங்கிய பாரிய ஆதரவினை என்றுமே மறக்க முடியாது. ஆகவே பாகிஸ்தான் எந்தவொரு சந்தர்ப்பத்திலும் இலங்கைக்கு சகல வழிகளிலும் உதவிகளை வழங்குவதற்கு தயாரவே உள்ளது. விசேடமாக இராணுவ, பொலிஸ் துறைக்கான உதவிகள், கூட்டுறவுகளை மேம்படுத்தல் ஆகியவற்றை தொடர்ந்தும் பாகிஸ்தான் வழங்கும் என்பதை இச்சந்தர்ப்பத்தில் உறுதியாக கூறுகின்றேன் என்றார்.