Designed by Iniyas LTD
பொட்டுஅம்மான் தமிழ் நாட்டில் தலைமறைவாக வாழ்கிறாராம்?
இறுதி யுத்தத்தின் போது வீரமரணமடைந்துவிட்டதாக கூறப்படும் தமிழீழ விடுதலைப் புலிகளின் புலனாய்வுத்துறைப் பொறுப்பாளர் பொட்டு அம்மான் என்றழைக்கப்படும் சண்முகலிங்கம் சிவசங்கரன், மறைந்திருப்பதாகச் செய்தி வெளியாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
இந்தியாவில், தமிழ் நாட்டிலேயே அவர், தலைமறைவாக வாழ்வதாக அச்செய்தியில் தெரிவிக்கப்பட்டுள்ளது. அவர், ”குருடீ” என்ற பெயரிலேயே தன்னுடைய மனைவி மற்றும் பிள்ளையுடன் வாழ்வதாகவும் அச்செய்தி குறிப்பிடுகின்றது.
தமிழீழ விடுதலைப் புலிகளின் புலனாய்வுத்துறைப் பொறுப்பாளரான பொட்டு அம்மான், முல்லைத்தீவு நந்திக்கடலில் பலியாகிவிட்டதாக இறுதி யுத்த காலத்தில் ஸ்ரீலங்கா அரசால் பிரசாரப்படுத்தப்பட்டிருந்தாலும், அவருடைய சடலத்தைப் ஸ்ரீலங்கா படையினர் கைப்பற்றவில்லை என்றும் அச்செய்தியில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதேவேளை, பொட்டு அம்மான் வீரமரணமடைந்ததை உறுதிப்படுத்துவதற்கான சாட்சிகளை, இந்திய அரசாங்கத்துக்கு அனுப்புவதற்கு முன்னைய அரசாங்கத்தினால் முடியாமல் போய்விட்டது என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது.
இதேவேளை, இந்தச் செய்தியின் உண்மைத்தன்மை தொடர்பில் ஸ்ரீலங்கா இராணுவப் பேச்சாளர் பிரிகேடியர் ஜயநாத் ஜயவீரவிடம் செய்தியாளர்கள் கேட்டபோது, அது தொடர்பில் அறிக்கை கிடைக்கவில்லை என்று கூறியுள்ளார்.
நீண்ட காலத்துக்கு பின்னர் இப்படியான ஒரு புரளியை இந்திய புலனாய்வுத்துறையோ அல்லது ஸ்ரீலங்கா புலனாய்வுத்துறையோ பரப்புவதால் தமிழ் நாட்டிலும் சரி ஏனைய நாடுகளில் வசிக்கும் முன்னாள் போராளிகளுக்கு அச்சுறுத்தலாகவே அமையும். ஏனெனில் இந்தியாவில் புலிகளின் தடையை நீடிப்பதற்கும் இலங்கையில் மீண்டும் புலிகள் ஒருங்கிணைகிறார்கள் என கூறி பயங்கரவாத தடைச்சட்டத்தை நீடிக்கவும் சர்வதேசத்தில் புலிகள் மீதான தடையை நீடிக்கச் செய்யும் ஒரு சதியாகவே கருத முடியும்.