தமிழினத்திற்கான தனித்துவமான ஊடகம்

மாலின் கிராமத்தில் மண் சரிவு – 200 பேர் சிக்கியிருக்கலாம்

flowபுனே அருகில் உள்ள மாலின் கிராமத்தில் ஏற்பட்ட மண் சரிவில் சிக்கி இறந்தவர்களில் இதுவரை 25 பேரின் உடல்கள் மீட்கப்பட்டுள்ளன. இந்த சம்பவத்தில் 200க்கும் மேற்பட்டோர் இடிபாடுகளில் சிக்கியிருக்கலாம் என அஞ்சப்படுகிறது.

மகாராஷ்டிரா மாநிலம், புனே மாவட்டத்தில் உள்ளது மாலின் கிராமம். சாலை மற்றும் போக்குவரத்து வசதி இல்லாத இந்த கிராமத்தில், மலையடிவாரத்தில் 44 குடிசைவீடுகளில் 200க்கும் அதிகமான மக்கள் வசித்து வந்தனர். இந்நிலையில், நேற்று முன்தினம் இரவு பெய்த கனமழை காரணமாக, மலையில் மண் சரிவு ஏற்பட்டு, அடிவாரத்தில் இருந்த குடிசை வீடுகளின் மீது மண் சரிந்து, மூடியது. இதனால், அவற்றில் இருந்த அனைவரும் மண்ணில் புதையுண்டனர்.

இதுவரை 25 பேர் பலி: தகவல் அறிந்ததும் பேரிடர் மீட்பு குழுவினர் சம்பவ இடத்திற்கு விரைந்து மீட்பு பணிகளில் ஈடுபட்டு வருகின்றனர். போதிய சாலை வசதி இல்லாததாலும், தொடர் மழை காரணத்தாலும் மீட்பு பணிகள் மந்தமாக நடந்து வருவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. இதுவரை இடிபாடுகளில் இருந்து 25 உடல்கள் மீட்கப்பட்டுள்ளன. மேலும், பலர் சிக்கியிருக்கலாம் என்று கூறப்படுகிறது.
தற்போது 250க்கும் அதிகமானோர் மீட்பு பணிகளில் ஈடுபட்டுள்ளனர். உள்ளூர் போலீசாரும், மக்களும் அவர்களுக்கு உதவி வருகின்றனர். சம்பவ இடத்தில் இருந்து 20 கி.மீ., தொலைவில் தான் மருத்துவமனை உள்ளது. இதை கருத்தில் கொண்டு, 100க்கும் அதிகமான ஆம்புலன்ஸ் வாகனங்கள் அவசர தேவைக்காக சம்பவம் நடந்த கிராமத்திற்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளன.

மீட்பு பணியில் சிக்கல்: மீட்பு பணிகள் குறித்து தேசிய பேரிடர் மேலாண்மை குழுவின் அதிகாரி அலோக் அவஸ்தி கூறுகையில், ‘தொடர்ந்து மழை பெய்வதால் சம்பவம் நடந்த இடம் சேறும், சகதியுமாக மாறிவிட்டது. இதனால், இடிபாடுகளில் சிக்கி உள்ளவர்களை மீட்பதில் சிரமம் ஏற்பட்டுள்ளது. மீட்பு பணிக்காக ராட்சத இயந்திரங்கள் கொண்டு வரப்பட்டுள்ளன. ஆனால், மண்ணில் புதைந்து உயிரோடு இருப்பவர்களுக்கு அந்த இயந்திரங்களால் ஆபத்து ஏற்படும் என்பதால், அவற்றை கவனமாக கையாள வேண்டி உள்ளது,’ என்றார். இதுபோன்ற காரணங்களால், மீட்பு பணிகள் மந்தமாக நடந்து வருகின்றன. தோண்டிய இடத்தில் எல்லாம் மனித உடல்கள் கிடைத்து வருவதால், இந்த சம்பவத்தில் பலி எண்ணிக்கை மேலும் அதிகரிக்கும் என அஞ்சப்படுகிறது.

பிரதமர் இரங்கல்:இந்த சம்பவத்திற்கு பிரதமர் நரேந்திரமோடி இரங்கல் தெரிவித்துள்ளார். மேலும், பாதிக்கப்பட்டவர்களின் குடும்பங்களுக்கு தேவையான உதவிகள் செய்யப்படும் என்றும் அவர் உறுதியளித்துள்ளார். தனது சார்பில் உள்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங்கை சம்பவ இடத்திற்கு பிரதமர் அனுப்பி உள்ளார்.

மண்சரிவுக்கு காரணம் என்ன?: மண் சரிவு ஏற்பட்ட இடத்தில் முன்னர் ஏராளமான மரங்கள் இருந்தன. அவை, பெரும் மழை பெய்தால் கூட, மண் சரிவு ஏற்படாமல் தடுத்து வந்தன. கடந்த சில ஆண்டுகளாக காடுகள் அழிக்கப்பட்டதால் மரங்கள் மாயமாகி விட்டன. இந்நிலையில் கனமழை பெய்ததால், மண் சரிவு ஏற்பட்டதாக கூறப்படுகிறது.

Comments
Loading...