தமிழினத்திற்கான தனித்துவமான ஊடகம்

மீண்டும் எழுச்சி பெறும் தமிழீழம்! அரசின் குரலாகிறாரா சம்பந்தன்?

land-2-1

வடக்கு கிழக்கில் தமிழீழ மக்கள் வீதிக்கு வந்து போராட்டங்களை நடத்திக் கொண்டிருக்கிறார்கள். தமிழ் மக்களின் தலைவர்களோ கொழும்பில் இருந்து கொண்டு சிங்கள அரசின் குரலாக ஒலிக்கிறார்கள். எல்லாப் படையினரும் போர்க்குற்றம் இழைத்தவர்கள் என்று சொல்லவில்லை என்றும் சிலர் மாத்திரமே போர்க்குற்றம் புரிந்தவர்கள் என்றும் தமிழ் தேசியக் கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினரும் எதிர்கட்சித் தலைவருமான இரா. சம்பந்தன் கூறியுள்ளார்.

சிங்கள அரசும், மகிந்தவும், மைத்திரியும் ரணிலும் மங்களவும் பொன்சேகாவும் இதுநாள் வரை கூறி வந்ததை இப்போது சம்பந்தர் கூறுகிறார். அதாவது போர்க்குற்றம் மற்றும் இனப்படுகொலையை புரிந்தவர்கள் தம்மை காப்பாற்ற சொல்லி வந்ததை சம்பந்தர் இப்போது சொல்கிறார். எங்கள் மக்கள் பனியிலும் வெயிலிலும் குளிரிலும் நடுக்கிக் கிடக்கிறார்கள். இரா. சம்பந்தரோ சிங்கள அரசை குசிப்படுத்தும் செயல்களில் கடும் அக்கறையாய் உள்ளார்.

24ஆவது நாளாக கேப்பாபுலவில் நில மீட்புப் போராட்டம் நடக்கிறது. இதுவரையில் சிங்கள அரசு எந்தப் பதிலையும் தரவில்லை. அந்த மக்கள் சிங்கள அரசின் விமானப்படை முகாமின் முன்பாக போராட்டம் நடத்துகிறார்கள். குளிரில் நடுங்கி, வெயிலில் வாடி அந்த மக்கள் நடத்தும் போராட்டம் உன்னதமானது. தங்கள் நிலத்தை விட்டு சிங்களப் படைகளே வெளியேறு என்று அவர்கள் கொடுக்கும் குரல் உக்கிரமானது.

அத்துடன் புதுக்குடியிருப்பிலும், கிளிநொச்சி பரவிப்பாஞ்சானிலும் மண்ணுக்காக போராட்டம் நடக்கிறது. அத்துடன் கிளிநொச்சியில் காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவுகள் அவர்களை விடுவிக்கக் கோரி மற்றுமொரு போராட்டத்தை தொடங்கியுள்ளனர். இதேவேளை கேப்பாபுலவு மண்மீட்புப் போராட்டத்திற்கு ஆதரவாக தமிழீழத்தின் பல்வேறு பகுதிகளிலும் போராட்டம் நடைபெற்று வருகிறது. இந்தப் போராட்டங்களை சிங்கள அரசு கணக்கில் எடுக்கவில்லை என்பதைவிட தமிழ் அரசே கணக்கில் எடுக்கவில்லை என்பதுதான் தமிழீழர்களின் இன்றைய அதிர்ச்சியான நிலையாகும்.

வடக்கு மாகாண சபையில் அவைத் தலைவர் சி.வி.கே. சிவஞானம் “இப்போது எல்லாருக்கும் போராட்டம் நடத்துவதே வேலையாய் போச்சுது” என்று கூறியிருப்பதுதான் சமூக வலைத்தளங்களின் பரவும் பேச்சு. தமிழ் மக்களின் ஏகோபித்த ஆதரவுடன் பெரும்பான்மையான அரசாக அமைக்கப்பட்ட வடக்கு மாகாண சபை இப்படிக் கூறுகிறது என்றால் எங்கள் மக்களின் நிலமை எப்படி இருக்கிறது என்று பெரும் கவலை கொள்ள வைக்கிறது.

ஒரு பக்கம் இப்பிடி நடக்கிறது. மறு பக்கம் சம்பந்தர் அரசின் குரலாக மாறிவிட்டார். இப்படி இருந்தால் எங்கள் போராட்டங்களுக்கு சிங்கள அரசு எப்படிப் பணியும்? நாங்கள் எதை செய்தாலும் சிங்கள அரசு பணியாது. சிங்கள இராணுவமே வெளியேறு என்பதும், சிங்களப் படைகளின் இனப்புடுகொலைக்கு சர்வதேசமே தண்டனை வழங்கு என்பதும் தமிழீழ மக்களின் கோரிக்கை. அதனை கைவிடும் தலைமை தமிழீழ மக்களின் தலைமையல்ல.

எல்லாவற்றையும் கடந்தே தமிழீழம் இன்று எழுச்சி பெறுகிறது. சிங்கள இராணுவத்தை வெளியேற்றி, அவர்களுக்கு தண்டனை வழங்கி, நீதியை நிலைநாட்டுவதற்காக தமிழீழ மக்கள் அனைவரும் வீதிக்கு வந்துபோராட வேண்டும். ஜல்லிக் கட்டுக்காக அன்றைக்கு மெரீனாவுக்கு முன்னால் திரண்டதைப்போல திரள வேண்டும். மக்கள் புரட்சி வெடிக்கட்டும் சுதந்திர தமிழீழம் மலரட்டும் என்ற திலீபனின் பொன்மொழி தீர்க்க தரிசனம் பெறட்டும்.

ஆசிரியர்.
செண்பகம்.
23.02.2017

Comments
Loading...