Designed by Iniyas LTD
யாழில் காணாமற்போனவர்களின் உறவினர்களின் கண்ணீருக்கு அரசாங்கத்துடன் சேர்ந்து இயங்கிக்கொண்டிருக்கும் அமைப்புக்களின் தலைமைகள் பதில்கூற வேண்டும். அனலைதீவில் வடமாகாணசபை உறுப்பினர் பா.கஜதீபன் தெரிவிப்பு.
யாழ்மாவட்டத்தில் கடந்த காலங்களில் இனந்தெரியாதோர் என்ற போர்வையில் கடத்திக்காணாமற்போகச்செய்யப்பட்இவ்வாறான குற்றங்களைப்புரிந்து விட்டு இன்று இணக்க அரசியல் என்று பசப்பியபடி, அரசாங்கப்பதவிகளின் சுகங்களை அனுபவித்து வரும் அமைப்புக்களின் தலைமைகள் இந்தக்குற்றங்களுக்கும், மக்களின் கண்ணீருக்கும் கட்டாயம் பதிலளிக்கவேண்டும் என அவர் தெரிவித்தார்.
இன்று 25.02.2014 செவ்வாய்க்கிழமையன்று ஊர்காவற்றுறைத்தொகுதி, அனலைதீவில் நடைபெற்ற மக்கள் சந்திப்பிலேயே அவர் மேற்படி தெரிவித்தார். அனலைதீவு அருணோதயா சனசமூக நிலையத்தில் இடம்பெற்ற மக்களுடனான சந்திப்பில் யாழ்.மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினரும், தமிழ்த்தேசியக்கூட்டமைப்பின் பொதுச்செயலாளருமாகிய மாவை.சோ.சேனாதிராசா, வடமாகாணசபை உறுப்பினர் பா.கஜதீபன்,இலங்கைத்தமிழரசுக் கட்சி இளைஞரணியின் யாழ்.மாவட்டச்செயலாளர் ப.தர்சானந், சாவகச்சேரி நகரசபை உறுப்பினர் ஞா.கிஷோர் ஆகியோர் கலந்து கொண்டனர். பாண்ட் வாத்திய அணிவகுப்புடன், மாலை மரியாதைகளுடன் மக்கள் இவர்களை வரவேற்றனர்.

தொடர்புடைய பதிவு
பின்னர் மேலும் அவர் தெரிவிக்கையில் நான் இந்த ஊருக்குப்புதியவன் இல்லை. இதே ஊரில் எட்டு ஆண்டுகளாக ஆசியராகக் கடமையாற்றியவன். இவ்வூரிலுள்ள பலரும் என் மாணவர்களே. என்னிடம் படித்த பல மாணவ்ர்களின் பிள்ளைகள் கூட என்னிடம் கல்வி கற்றுள்ளனர். இவ்வூரின் ஒவ்வொரு அங்குலமும் எனக்கு அத்துப்படி. எமது இளைஞரணியின் யாழ்.மாவட்டசெயலாளர் தர்சானந் , கடந்த மாகாணசபைத்தேர்தலில் ஊர்காவற்றுறைத்தொகுதிக்கான வாக்கெண்ணும் முகவராகச்சென்ற போது, அனலைதீவு வாக்களிப்பு நிலைய பெட்டிகள் உடைத்து எண்ணப்பட்ட போது , சுமார் 95% மான வாக்குகள் தமிழ்த்தேசியக்கூட்டமைப்புக்கு வழங்கப்பட்டுள்ளதைக்கண்டு எனக்கு கூறியிருந்தார். தேர்தல் இடம்பெற்று ஒருவாரத்தின் பின் இங்கு வந்து உங்களுக்கு நன்றி கூறிச்சென்றபோது ஊர்காவற்றுறைப்பகுதியில் நான் தேர்தலில் தோல்வியடைந்த கட்சியினரால் கல்வீசித்தாக்கப்பட்டேன். ஆனாலும் எமது மக்களுக்கான எமது பணி என்றும் ஓயப்போவதில்லை. எமது மாகாணசபைக்குரிய அதிகாரங்கள் வழங்கப்படாமல் இருக்கின்றன. இங்கு பேசியவர்கள் தமது பல தேவைப்பாடுகள் பற்றியும், ஆசிரியர் பற்றாக்குறை குறித்தும் வலியுறுத்தினர். நான் எமது மாகாண கல்வி அமைச்சருடன் இதுகுறித்து கட்டாயம் பேசி குறைபாடுகளை நிவர்த்தி செய்து தர முயற்சிக்கிறேன்.

பாதைகள் அபிவிருத்தி பற்றிக்குறிப்பிட்டிருந்தனர். இவை பிரதேசசபைகளின் சேவை ஆகும். ஆனால் கடந்த 20 வருடங்களாக இப்பகுதியை தமது ஆதிக்கத்தின் கீழ்க்கொண்டிருந்த இணக்க அரசியல் பேசும் கட்சியினரின் ஆதிக்கத்திலுள்ள ஊற்காவற்றுறை பிரதேசசபைக்கு அரசாங்கமானது , யாழ். மாவட்டத்திலுள்ள எமது கட்சியின் பிரதேச சபைகளுக்குக்கூடத்தராமல் ரூ.100 மில்லியனை வழங்கியதாக அறிந்திருந்தோம். ஆனால் ஊர்காவற்றுறை பிரதேச சபைக்குட்பட்ட பகுதிகளிலும் சரி அனலைதீவிலும் சரி எவ்வித அபிவிருத்திச்செயற்பாடுகளும் இடம்பெறவில்லை. ஆனால் 2015 ஆம் ஆண்டு உள்ளூராட்சிசபைத்தேர்தலில் நாம் அச்சபையக்கைப்பற்றி உண்மையான அபிவிருத்திப்பணிகளை முன்னெடுப்போம். அதற்கிடையில் எமது மாகாணசபைஉறுப்பினர்களுக்குரிய பன்முகப்படுத்தப்பட்ட வரவு செலவுத்திட்ட நிதி மற்றும் எமது நாடாளுமன்ற உறுப்பினர்களுக்குரிய பன்முகப்படுத்தப்பட்ட வரவு செலவுத்திட்ட நிதி போன்றவற்றின் மூலம் எம்மால் முடிந்த அபிவிருத்திப்பணிகளை மேற்கொள்வோம் என உறுதியளிக்கின்றேன். என அவர் குறிப்பிட்டார்.

மேலும் அனலைதீவு சதாசிவ மகாவித்தியாலயம் மற்றும் , வடலூர் ஆரம்பப்பாடசாலை ஆகியவற்றில் இடம்பெற்ற இன்றைய சந்திப்புக்களில் இளைஞர்கள், முன்பள்ளி ஆசிரியர்கள், பாடசாலை ஆசிரியர்கள், பெண்கள், பொது மக்கள் எனப்பெருமளவானோர் ஆர்வத்துடன் கலந்து கொண்டனர்.