தமிழினத்திற்கான தனித்துவமான ஊடகம்

யாழ் மண்டைதீவில் பொது மக்களின் காணிகளை கைப்பற்ற கடற்படையினர் முயற்சிப்பதாக குற்றம் சுமத்தப்பட்டுள்ளது

மண்டைதீவு கடற்படை முகாம் அமைந்துள்ள காணியின் உரிமையாளர்கள் உடனடியாகத் தொடர்பு கொள்ளுமாறு வடமாகாணசபை உறுப்பினர் பா.கஜதீபன் அவசர வேண்டுகோள் விடுத்துள்ளார்.

மண்டைதீவில் நன்னீர் வளமுள்ள பகுதியில் சுமார் 18 ஏக்கர் பரப்பளவில் கடற்படை முகாம் அமைந்துள்ளது.

கடற்படைமுகாம்  அமைந்துள்ள  காணியின் உரிமையாளர்கள் பல இடங்களிலும் வசித்து வருகின்றனர்.

இந்நிலையில் மேற்படி காணிகளை நிரந்தரமாக கைப்பற்ற கடற்படையினர் முயற்சிகளை மேற்கொண்டு வருகின்றதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதையடுத்து மண்டைதீவுக்கு  விஜயம் மேற்கொண்ட வடமாகாணசபை உறுப்பினர்களான பா.கஜதீபன் மற்றும் விந்தன் கனகரத்தினம் ஆகியோர் அப்பகுதியின் கிராமசேவகர் மற்றும் மக்களைச் சந்தித்துக் கலந்துரையாடியதுடன், உரிமையாளர்களின் சரியான விபரங்கள் இல்லாமையால் , குறித்த காணியின் , உரிமையாளர்களை  உடனடியாகத் தொடர்புகொள்ளுமாறு அவசர வேண்டுகோள் விடுத்துள்ளனர்.

இதுவரை 29 குடும்பங்களைச் சேர்ந்தவர்கள் இனங்காணப்பட்டுள்ளதாகவும், மீதி யாராக இருப்பினும் உடனடியாகத் தொடர்பு கொள்ளுமாறும்  அவர்கள் கேட்டுக்கொண்டுள்ளனர்.

மண்டைதீவிலேயே மேற்படி பகுதியில் மட்டும் தான் நன்னீர் வளம் காணப்படுவதாகவும், அதனாலேயே கடற்படையினர் மேற்படி பொதுமக்களின் காணியை அபகரிக்க முயல்வதாகவும்  குற்றஞ்சாட்டியுள்ளனர்.

மேற்படி காணிகளை கடற்படை ஆக்கிரமிப்பிலிருந்து காப்பாற்றும் பொருட்டு உரிமையாளர்கள் தம்மை உடனடியாகத் தொடர்பு கொள்ளுமாறு அவர்கள்  அறிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

 

Comments
Loading...