தமிழினத்திற்கான தனித்துவமான ஊடகம்

யோஷித கைது ; ஒட்டுமொத்த அரசியல் பழிவாங்கல் – மஹிந்த

முன்னாள் ஜனாதிபதியின் புதல்வரான யோஷித ராஜபக்ச பாரிய நிதிமோசடிக் குற்றச்சாட்டின் பேரில் கைதானதையடுத்து தென்னிலங்கையில் சிங்கள மக்கள் மத்தியில் பரபரப்பை உருவாக்கும் வகையிலான காரியங்கள் முன்னெடுக்கப்படத் தொடங்கியுள்ளன.  makintha

இச்செயற்பாடுகளின் பின்னணியில் மஹிந்த ராஜபக்ச எம்.பியும் அவரது அரசியல் சகாக்களும் மிகத் தீவிரமாக ஈடுபட்டு வருவதை அவதானிக்க முடிகிறது. முன்னைய ஆட்சிக் காலத்தின் போது சி.எஸ்.என். தொலைக்காட்சி நிறுவனத்தின் தேவைக்காக பெருந்தொகை அரசாங்க நிதியை மோசடி செய்ததாக யோஷித ராஜபக்சவுக்கும் ஏனைய சிலருக்கும் எதிராக குற்றம் சுமத்தப்பட்டுள்ளது. இக்குற்றச்சாட்டுகளை நிரூபிப்பதற்கான ஆதாரங்கள் பாரிய நிதி மோசடி விசாரணைப் பிரிவுக்குக் கிடைத்துள்ளதாக பரவலாகத் தகவல்கள் வெளிவந்து கொண்டிருக்கின்றன. பொலிஸ் ஊடகப் பிரிவும் இத்தகவலை வெளியிட்டுள்ளது.

ஆனாலும் தென்னிலங்கையில் இப்போது பரபரப்பாக முன்னெடுக்கப்பட்டுக் கொண்டிருக்கின்ற தீவிர பிரசாரங்களைப் பார்க்கின்ற போது, யோஷித ராஜபக்ச என்பவர் பாரியதொரு குற்றச் சம்பவத்துக்குரிய சந்தேகநபராக சித்தரிக்கப்படவில்லை. யோஷித ராஜபக்ச எந்தவிதக் குற்றமும் இழைக்காதவரென அவரது தந்தையான மஹிந்த ராஜபக்சவும் சகாக்களும் உறுதி கூறுகின்றனர்.

யோஷித ராஜபக்ச நிதி மோசடிக் குற்றம் இழைக்காதவரென நிரூபிக்கக் கூடிய எந்தவித ஆதாரத்தையும் அவர்கள் முன்வைக்கவில்லை. வெறுமனே அவர் அப்பாவியென்று மட்டுமே பிரசாரங்களை முன்னெடுக்கின்றனர். அதாவது அரசியல் பழிவாங்கலுக்காக யோஷித கைது செய்யப்பட்டுள்ளாரென்ற கருத்தை தென்னிலங்கை எங்கும் பரப்புவதே மஹிந்த அணியினரின் நோக்கமாக உள்ளது. அரசாங்கத்தின் எதிராளிகள் என்பதற்காக எந்தவொரு முக்கிய நபரையும் குற்றச் செயல்களுக்கான சந்தேகத்தில் விசாரணை செய்ய முடியாதென்றோ கைது செய்ய முடியாதென்றோ இலங்கை உட்பட எந்தவொரு நாட்டிலுமே சட்டவிதிகள் கிடையாது.

அதேசமயம் முன்னைய ஆட்சியில் பாரிய நிதி மோசடிகள் இடம்பெற்றுள்ளதாக நாட்டில் பரவலாக குற்றச்சாட்டுகள் வெளிவந்து கொண்டிருக்கையில், அது பற்றி விசாரணை நடத்தாமல் இருப்பின் அது அரசாங்கத்தின் தவறேயாகும். யோஷித ராஜபக்சவுக்கு எதிரான குற்றச்சாட்டுகள் சாதாரணமானவையல்ல. அவை மிகவும் பாரதூரமானவை. அக்குற்றச்சாட்டுகளில் உண்மையுள்ளதாவென்ற ஆதாரங்களைத் திரட்ட வேண்டிய பொறுப்பு பாரிய நிதி மோசடிகள் விசாரணைப் பிரிவைச் சேர்ந்தது. குற்றங்களுக்கான சாட்சியங்களையும் ஆதாரங்களையும் நீதிமன்றத்தில் சமர்ப்பிக்க வேண்டியதும் அவர்களது பொறுப்பு.

இறுதியில் நீதிமன்றமே இவ்விடயத்தில் முடிவு செய்ய வேண்டும். யோஷித ராஜபக்ச மீதான குற்றச்சாட்டுகள் தொடர்பான விசாரணை நீதிமன்றத்தில் ஆரம்பமாவதற்கு முன்னர் யோஷிதவை நிரபராதியென நிரூபிக்கும் பொறுப்பு எந்தவொரு அரசியல்வாதிக்கும் உரியதல்ல. அதுமட்டுமன்றி அவர் கைதான விடயத்தை அரசியல் மயப்படுத்துவதற்கு மேற்கொள்ளப்படுகின்ற முயற்சிகளும் ஏற்புடையதல்ல. இவ்விடயத்தைத் துரும்பாக வைத்துக் கொண்டு சிங்கள மக்களை உணர்ச்சி வசப்படுத்துவதோ அல்லது அனுதாபம் மூலம் அரசியல் ஆதாயம் பெற முற்படுவதோ அரசியல் பண்புகள் அல்ல.

யோஷித ராஜபக்ச கைது செய்யப்பட்டமை ஒட்டுமொத்தமான அரசியல் பழிவாங்கல் என்றே மஹிந்த அணியினர் தற்போது பிரசாரம் செய்து வருகின்றனர். முன்னைய ஆட்சியின் போது மஹிந்த ராஜபக்சவின் கொள்கைகளுக்கு முரணானோர் எனக் கருதப்பட்டவர்கள் தராதரம் பாராமல் பழிவாங்கப்பட்டதனால் நாட்டில் உருவாகியுள்ள கீழ் மட்ட அரசியல் கலாசாரத்தின் அழுக்குகள் இன்னும் ஒட்டிக் கொண்டிருப்பதனாலேயே இத்தகைய சிந்தனைகள் இப்போதும் எழுகின்றன. யோஷித கைதானதை எதிர்த்து கையெழுத்து வேட்டை நடத்தப் போவதாகவும், தேங்காய்கள் உடைக்கப் போவதாகவும் ஊடகங்களில் செய்திகள் வெளியாகியிருக்கின்றன.

இவையெல்லம் அபத்தமான நடவடிக்கைகள். தேங்காய்கள் உடைப்பதன் மூலம் நீதித்துறையின் செயற்பாடுகளை மாற்றிவிட முடியாதென்பது சம்பந்தப்பட்டோருக்குத் தெரியாத விடயமல்ல. தென்னிலங்கையின் பாமர மக்களை தம்வசம் ஈர்த்தெடுப்பதற்கு இன்றைய சூழலை நன்கு பயன்படுத்திக்கொள்ளவே அவர்கள் முற்படுகின்றனரென்பது நன்றாகவே தெரிகிறது. இது ஒருபுறமிருக்க ஞானசார தேரர் மற்றும் யோஷித ராஜபக்ச ஆகியோர் கைதானமை நீதித்துறையின் நடவடிக்கைகளாக அமைந்த போதிலும் அரசைப் பொறுத்தவரை இவையெல்லாம் சங்கடமானதும் பிரதிகூலமானதுமான விடயங்களென்பதை மறுப்பதற்கில்லை.

உள்ளூராட்சித் தேர்தலை இலக்கு வைத்து தனது பலத்தைக் காண்பிக்கலாமென்ற எண்ணத்தில் மஹிந்த அணியினர் இது போன்ற உபாயங்களைக் கையாளுகையில், அரசாங்கம் சிங்கள மக்கள் தரப்பிலிருந்து எவ்வகையில் செல்வாக்கைத் திரட்டப் போகிறதென்பதை பொறுத்திருந்தே பார்க்க வேண்டியுள்ளது

Comments
Loading...