Designed by Iniyas LTD
லண்டனில் இந்திய தேசியக்கொடி கிழிக்கப்பட்டு ஆர்ப்பாட்டம் இடம்பெற்றுள்ளது
இங்கிலாந்து தலைநகர் லண்டனில் காமன்வெல்த் மாநாடு நடந்து வருகிறது.
இதில் பங்கேற்பதற்காக அங்கு சென்ற பிரதமர் நரேந்திர மோடி இங்கிலாந்து பிரதமர் தெரசா மேயை சந்திது பேசியுள்ளார்.
பிரதமர் தெரசா மேயை சந்திப்பதற்காக டவுனிங் தெருவுக்கு மோடி சென்ற போது, அவர் செல்லும் வழியில் திரண்ட இங்கிலாந்து வாழ் இந்தியர்கள் மோடிக்கு எதிராக ஆர்ப்பாட்டம் நடத்தியுள்ளனர்.
காஷ்மீர், உத்தரபிரதேச கற்பழிப்பு சம்பவங்கள் மற்றும் இந்தியாவில் சமீபத்தில் நடந்த வன்முறைகளை கண்டித்து அவர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
இதில் இங்கிலாந்து நாடாளுமன்ற சதுக்கத்தில் குவிந்திருந்த காலிஸ்தான் ஆதரவாளர்கள் உள்ளிட்ட சுமார் 500 இந்தியர்கள், மோடிக்கு எதிரான வாசகங்கள் அடங்கிய பதாகைகளை ஏந்திக்கொண்டு ஆர்ப்பாட்டம் நடத்தியுள்ளனர். இந்த போராட்டத்தில் பல்வேறு இந்திய பெண்கள் அமைப்பினரும் பங்கேற்றுள்ளனர்.
இதேவேளை காமன்வெல்த் மாநாட்டையொட்டி அங்கு ஏற்றப்பட்டு இருந்த இந்திய தேசியக்கொடியை, கொடிக்கம்பத்தில் இருந்து இறக்கிய சிலர் பின்னர் அதை கிழித்துள்ள நிலையில் அங்கு மோதலும், வன்முறையும் ஏற்பட்டுள்ளது.
இதன்போது குறித்த சம்பவங்களை படம் பிடித்த இந்திய தொலைக்காட்சி நிருபரை போராட்டக்காரர்கள் தாக்கியுள்ளனர். இதனால் அங்கு பெரும் பரபரப்பு ஏற்பட்ட நிலையில் நிருபரை ஸ்காட்லாந்து யார்டு போலீசார் மீட்டதுடன் அங்கு பாதுகாப்பு ஏற்பாடுகள் பலப்படுத்தப்பட்டதாகவும் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
பிரதமர் மோடியுடன் இங்கிலாந்துக்கு சென்றிருக்கும் மூத்த அதிகாரிகளில் ஒருவர் இந்த போராட்டம் குறித்து கூறுகையில், ‘இந்த போராட்டம் மற்றும் தேசியக்கொடி கிழிப்பு சம்பவம் குறித்து இங்கிலாந்து அதிகாரிகளின் கவனத்துக்கு கொண்டு சென்தாக கூறியுள்ளார்.
மேலும் அதற்கு வருத்தம் தெரிவித்த அதிகாரிகள் இதற்கு நடவடிக்கை எடுப்பதாக உறுதியளித்துள்ளதாகவும் அவர் கூறியுள்ளார்.
இதேவேளை முன்னதாக பிரதமர் மோடிக்கு ஆதரவாகவும், அவரை வரவேற்கும் வகையிலும் நேற்று முன்தினம் காலையில் டவுனிங் தெருவில் ஏராளமான இந்தியர்கள் குழுமி இருந்தது குறிப்பிடத்தக்கது.