தமிழினத்திற்கான தனித்துவமான ஊடகம்

வடக்கில் இராணுவமுகாங்கள் விஸ்தரிப்பு

kilinochchi-11

கிளிநொச்சி மாவட்டத்தில் இராணுவ முகாம்களை விஸ்தரிக்கும் நடவடிக்கையில் ஸ்ரீலங்கா இராணுவத்தினர் ஈடுபட்டு வருவது அப் பகுதி மக்களை பெரும் அதிர்ச்சிக்கு உள்ளாக்கியுள்ளது.

நல்லாட்சி அரசு என ஸ்ரீலங்கா அரசு தன்னை அறிவித்துள்ள நிலையில் தங்களது காணிகளை ஆக்கிரமித்து அமைக்கப்பட்டுள்ள இராணுவ முகாம்கள் பலப்படுத்தப்பட்டு வருகின்றமை தங்களுக்கு பெரும் கவலையை அளித்துள்ளதாகவும், எங்களின் காணிகள் எங்களுக்கு என்ற நம்பிக்கை சிதறடிக்கப்பட்டுள்ளதாகவும் மக்கள் தெரிவித்துள்ளனா்.

கிளிநொச்சி பளை பிரதேச செயலக பிாிவிலுள்ள ஊா்வணிகன்பற்று கிராமத்தில் அமைந்துள்ள பொது மக்களுக்கு சொந்தமான ஏழு உறுதி காணிகளில் அமைந்துள்ள இராணுவ முகாம் சுற்று மதில் அமைக்கப்பட்டு பலப்படுத்தப்பட்டு வருகிறது. இது தொடா்பிலேயே அந்த மக்கள் கவலை தெரிவித்துள்ளனா்.

ஏ9 வீதியோடு அமைந்துள்ள தங்களது உறுதி காணிகள் கோடிக்கணக்கான பெறுமதி மிக்க காணிகள் எனவும், மாதாந்தம் தென்னையின் மூலம் மட்டுமே பல ஆயிரக்கணக்கான வருமானத்தை ஈட்டித் தந்த காணிகள் என்றும் குறிப்பிடும் குறித்த காணிகளுக்குரிய மக்கள் தாங்கள் தற்போது போதிய வருமானம் இன்றி பொருளாதாரத்தில் நலிவுற்ற நிலையில் வாழ்ந்து வருவதாகவும், தெரிவித்துள்ளனா்.

அத்தோடு குறித்த காணியை நம்பியே தனது பெண் பிள்ளைகளின் திருமணம் இருந்ததாகவும் ஆனால் தற்போது முகாம் பலப்படுத்தப்பட்டு வருவதனை நோக்கும் போது தனது பிள்ளைகளின் எதிா்காலம் என்னவாகப் போகிறது என்று பெரும் ஏக்கம் ஏற்பட்டுள்ளது என தந்தை ஒருவா் துயரத்தோடு தெரிவித்துள்ளாா்.
குறித்த காணியை மீட்டுதருமாறு பல்வேறு தரப்பினரிடமும் மக்கள் கோரிக்கை விடுத்து வந்திருந்தனர். நல்லாட்சி அரசாங்கம் உருவாக்கப்பட்டு பொது மக்களின் காணிகளைவிட்டு இராணுவம் படிப்படியாக வெளியேற்றப்பட்டுவருவதாக கூறப்படுகின்ற போதிலும், கிளிநொச்சி மாவட்டத்தில் நிலைமை வேறாக காணப்படுவதாக மக்கள் விசனம் தெரிவிக்கின்றனர். வடக்கில் இராணுவ முகாம்கள் அமைந்துள்ள பொது மக்களின் காணிகளை விடுவிக்க கோரி பல்வேறு போராட்டங்கள் முன்னெடுக்கப்பட்டுள்ள நிலையில், பொது மக்களின் காணிகளைவிட்டு இராணுவம் வெளியேறி காணி உரிமையாளர்களிடம் காணிகளை கையளிக்க வேண்டும் எனமக்கள் கோரிக்கை விடுக்கின்றனர்.

யுத்தம்நிறைவுக்கு கொண்டுவரப்பட்டு 6 வருடங்கள் நிறைவுற்றும்,நல்லாட்சிஅமைக்கப்பட்டு ஒரு வருடம் பூர்த்திஆகியுள்ள நிலையில், வடக்கில் இராணுவ முகாம்கள் பலப்படுத்தப்பட்டு வருவதுதொடர்பில் மக்கள் கேள்வி எழுப்புகின்றனர்.

Comments
Loading...