Designed by Iniyas LTD
வடக்கில் வெள்ளத்தினால் 1,35000 பேர் பாதிப்பு : 1500 பேருக்கு மட்டும் வீடுகள்!
நிலவிவரும் சீரற்ற காலநிலை காரணமாக ஏற்பட்ட வெள்ளத்தினால் வடமாகாணத்தில் மொத்தமாக மூவாயிரத்து 597 வீடுகள் முழுமையாக பாதிக்கப்பட்டுள்ளதோடு, 236 வீடுகள் பகுதியளவில் சேதமடைந்துள்ளன. எனினும் பாதிக்கப்பட்டவர்களில் 1500 பேருக்கே புதிய வீடுகள் அமைத்துக் கொடுக்க அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளதாக அமைச்சரவைப் பேச்சாளரும் அமைச்சருமான கயந்த கருணாதிலக தெரிவித்துள்ளார்.
முல்லைத்தீவு மாவட்டத்தின் மணலாறு பிரதேசத்தில் இடம்பெயர்ந்த 1000 பேருக்கு புதிய வீடுகளை அமைத்துக் கொடுக்கவுள்ளதோடு, வெள்ளத்தினாலும், பாதிக்கப்பட்டவர்களுக்கு 500 வீடுகளும் அமைத்துக் கொடுக்கப்படும் என்றும் குறிப்பிட்டார்.
அமைச்சரவை முடிவுகளை அறிவிக்கும் ஊடக சந்திப்பு அரசாங்க தகவல் திணைக்களத்தில் இன்று வியாழக்கிழமை நடைபெற்றது. இதில் கலந்துகொண்டு உரையாற்றிய அமைச்சர் இவ்வாறு குறிப்பிட்டார்.
அவர் தொடர்ந்து கருத்து தெரிவிக்கையில்,
முல்லைத்தீவு மணலாறு பிரதேசத்தில் இடம்பெயர்ந்த 1000 பேருக்கான வீடுகள் அமைத்தல், இருக்கும் வீடுகளைப் புனரமைக்கும் திட்டத்திற்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது. அதேபோல வெள்ளத்தினாலும, போரினாலும் பாதிக்கப்பட்டவர்களுக்கு புதிய 500 வீடுகளும், மேலும் 500 வீடுகளை திருத்தியமைத்தலுக்கும் இதனூடாக சந்தர்ப்பம் ஏற்படும்.
மேலும் யாழ். மாவட்டம் மற்றும் அதனை அண்மித்த தீவுகளில் வாழும் மக்களின் வாழ்க்கைத் தரத்தை மேம்படுத்துவதற்கு மீள்குடியேற்ற அமைச்சர் சுவாமிநாதன் முன்வைத்த அமைச்சரவைப் பத்திரத்திற்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது. புங்குடுதீவு, நாகதீபம், மண்டைதீவு உள்ளிட்ட 6 தீவுகளில் 15 ஆயிரம் குடும்பங்கள் வரை வசிக்கின்றன. இவர்கள் பிரதான பகுதிகளுக்கு செல்வதற்கு அதிக நேரமும், செலவினமும் ஏற்படுகின்றது.
இந்த நிலையில் சிறந்த போக்குவரத்து அமைப்பதற்கும், வாழ்க்கைத் தரத்தை முன்னேற்றுவதற்கும் 10 வேலைத்திட்டங்கள் இதனூடாக முன்னெடுக்கப்படவுள்ளன – என்றார்.
இதேவேளை வடமாகாணத்தில் வெள்ளம் காரணமாக ஒரு இலட்சத்து 35 ஆயிரத்து 154 பேர் பாதிக்கப்பட்டுள்ளதாக அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம் இன்று வியாழக்கிழமை வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
யாழ். மாவட்டத்திலேயே அதிகளவானோர் பாதிக்கப்பட்டுள்ளனர். இதற்கமைய அந்த மாவட்டத்தில் 87 ஆயிரத்து 684 பேர் பாதிக்கப்பட்டுள்ளதுடன், 4 ஆயிரத்து 827 பேர் இடம்பெயர்ந்துள்ளனர். அதற்கு அடுத்தபடியாக கிளிநொச்சி மாவட்டத்தில் 22 ஆயிரத்து 990 பேர் பாதிக்கப்பட்டுள்ளதோடு, 882 பேர் இடம்பெயர்ந்துள்ளனர்.
மன்னார் மாவட்டத்தில் வெள்ளத்தினால் பாதிக்கப்பட்ட 16 ஆயிரத்து 23 பேரில் 491 பேர் இடம்பெயர்ந்து 136 தற்காலிக நலன்புரி முகாம்களில் தங்கவைக்கப்பட்டுள்ளனர். ஒட்டுமொத்தமாக நாடளாவிய ரீதியில் ஏற்பட்டுள்ள வெள்ளம் மற்றும் சீரற்ற காலநிலை காரணமாக ஒரு இலட்சத்து 42 ஆயிர்தது 259 பேர் பாதிக்கப்பட்டுள்ளதோடு, 6 ஆயிரத்து 224 பேர் இடம்பெயர்ந்து, ஆயிரத்து 749 தற்காலிக நலன்புரி முகாம்களில் தங்கவைக்கப்பட்டுள்ளனர்.