தமிழினத்திற்கான தனித்துவமான ஊடகம்

வவுனியா புதூர் நாகதம்பிரான் ஆலய பகுதியில் விடுதலைப்புலிகளின் புலனாய்வுத்துறை…

வவுனியா புதூர் நாகதம்பிரான் ஆலய பகுதியில் சந்தேகத்திற்கிடமாக நடமாடிய நபர் தமிழீழ விடுதலைப்புலிகளின் புலனாய்வுத்துறையைச் சேர்ந்தவராக இருக்கலாம் என  வவுனியா பொலிஸார் புதிய சர்ச்சையொன்றை ஏற்படுத்தியுள்ளனர்.

சந்தேக நபர் கைவிட்டுச் சென்ற கையடக்க தொலைபேசியின் சிம் அட்டையின் அடிப்படையிலேயே தாங்கள் இந்தத் தகவல்களை தெரிவிப்பதாக  வவுனியா பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

புத்தாண்டு தினமான ஜனவரி முதலாம் திகதி இரவு  வவுனியா புதூர் நாகதம்பிரான் ஆலய வீதியில் சந்தேகத்திற்கிடமான முறையில் சிலர் நடமாடுவதாக   புளியங்குளம் பொலிசாருக்கு கிடைத்த இரகசியத் தகவலை  அடுத்து அங்கு  சிவில் உடையில் நான்கு பொலிசார் மோட்டார் சைக்கிள்களில் சென்றுள்ளனர்.

இதன்போது வீதியில் சென்ற இனந்தெரியாத நபர் ஒருவர் தனது கையில் வைத்திருந்த மர்மப் பொதியை தூக்கி எறிந்துவிட்டு அங்கிருந்து தப்பிச் சென்றுவிட்டதாகவும்,

அதன்பின் தாம்  மேற்கொண்ட தேடுதலின் போது கைத்துப்பாக்கி  ரவைகள், கைக்குண்டுகள் நான்கு, ஸ்மாட் கையடக்கத்தொலைபேசிகள் 2  என்பன கைப்பற்றப்பட்டதாக பொலிசார் தெரிவித்தனர்.

இது தொடர்பில் புளியங்குளம் பொலிஸ் பொறுப்பதிகாரிக்கு தெரிவித்த நிலையில், ஏராளமான பொலிசார், இராணுவத்தினர், விஷேட அதிரடிப்படையினர், மோப்ப நாய்களுடன் குறித்த பகுதிக்கு சென்று பாரிய தேடுதல் வேட்டையொன்றை முன்னெடுத்துள்ளனர்.

ஜனவரி முதலாம் திகதி இரவு முன்னெடுக்கப்பட்ட இந்தத் தேடுதல் வேட்டை ஜனவரி 3 ஆம் திகதியான இன்று வியாழக்கிழமையும் தொடர்ந்ததாக  அறியக்கிடைத்துள்ளது.

இந்த நிலையில் இன்றைய தினம் மதியம் 12மணியுடன் பொலிசார் மற்றும் இராணுவத்தினரின் தேடுதல் நடவடிக்கைகள் முடிவிற்குக் கொண்டுவரப்பட்டதாகவும் , எனினும் இதுவரை யாரும் கைதுசெய்யப்படவில்லை எனவும் தெரியவருகின்றது.

இந்தநிலையில் கைப்பற்றப்பட்ட  தொலைபேசியின் விபரத்தினை அடிப்படையாகக் கொண்டு  தொலைபேசி சிம் அட்டைக்குரிய நபர் யாழ்ப்பாணத்தைச் சேர்ந்தவர் என பொலிசார் தெரிவித்துள்ளனர்

குறித்த சந்தேக நபர்  தமிழீழ விடுதலைப்புலிகளின் புலனாய்வுத்துறையைச் சேர்ந்தவராக இருக்கக்கூடும் என்றும்  பொலிசார் ஐயம்  வெளியிட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

 

Comments
Loading...