தமிழினத்திற்கான தனித்துவமான ஊடகம்

விருப்பத்திற்கு மாறாக தமிழ் மக்கள் ஆளப்படுகின்றனர்- இரா .சம்பந்தன்

 

இலங்கைக்கு விஜயம் செய்துள்ள ஐ.நா.வுக்கான முன்னாள் அரசியல் பிரிவின் செயலாளர் நாயகம் ஜெப்ரி பெல்ட்மன் தமிழ் தேசிய கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தனை சந்தித்துள்ளார்.

குறித்த  சந்திப்பு இன்று (திங்கட்கிழமை) கொழும்பில் இடம்பெற்றது.

இதன்போது  கடந்த   அக்டோபர் 26, 2018 அன்று இடம்பெற்ற சம்பவங்களின் பின்னர் தமிழ் தேசிய கூட்டமைப்பும் அதன் தலைவரும் செயற்பட்ட விதம் குறித்து தனது பாராட்டுக்களை ஜெப்ரி பெல்ட்மன் தெரிவித்தார்.

இந்நிலையில் அரசியல் யாப்பிற்கு முரணான சம்பவங்களை தமிழ் மக்கள் ஒருபோதும் ஏற்பதில்லை என  இரா சம்பந்தன் கூறியுள்ளார்.

மேலும், காணாமல் போனோருக்கான அலுவலகம், நஷ்டஈடு அலுவலகம் மற்றும் உண்மை மற்றும் நல்லிணக்க அலுவலகம் போன்றவை மக்கள் மத்தியில் செயற்படுவது அவசியம் எனவும் அவர்  தெரிவித்துள்ளார்.

அத்தகைய அலுவலகங்கள் உண்மையை நிலைநாட்டும் முகமாக தொடர்ச்சியாக மக்களோடு இடைப்பட வேண்டும் எனவும் முன்னாள் ஐ.நா. அரசியல் பிரிவின் செயலாளர் நாயகத்திடம்  சம்பந்தன் வலியுறுத்தியுள்ளார்.

மேலும்  இலங்கை அரசாங்கம் சர்வதேச சமூகத்திற்கு வழங்கிய வாக்குறுதிகளை நிறைவேற்றும் முகமாக இலங்கை தொடர்பான பிரச்சினையை சர்வதேச மட்டத்தில் எடுத்துச்செல்ல வேண்டும் எனவும் அவர்  குறிப்பிட்டுள்ளார்.

அதோடு   அரசாங்கமும் சில அரசியல்வாதிகளும்   தமிழ் சிங்கள பிரச்சினையாக இதனை  உருவாக்க முயற்சிப்பதாகவும்,  ஆனால் இது அடிப்படை மனித உரிமையுடன் சம்பந்தப்பட்ட பிரச்சனை எனவும் சுட்டிக்காட்டியுள்ளார்.

அத்துடன்  பிரிக்க முடியாத, பிரிபடாத ஒருமித்த நாட்டிற்குள் நியாயமான ஒரு அரசியல் தீர்வினையே தமிழ் மக்கள் எதிர்பார்ப்பதாகவும் சம்பந்தன் தெரிவித்துள்ளார்.

இதேவேளை   விருப்பத்திற்கு மாறாக தமிழ் மக்கள் ஆளப்படுவதாகவும் ஐநாவுக்கான முன்னாள் அரசியல் பிரிவின் செயலாளர் நாயகம் ஜெப்ரி பெல்ட்மனிடம் சம்பந்தன் கூறியுள்ளதாக தெரிவிக்கபப்ட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Comments
Loading...