Designed by Iniyas LTD
விரைவில் கூடங்குளம் 2-ஆவது அணு உலையில் முழு அளவில் உற்பத்தி
கூடங்குளம் அணுமின் நிலையத்தின் 2-ஆவது அலகில் ஆகஸ்ட் இறுதிக்குள் முழு அளவில் உற்பத்தி தொடங்கும் என்று கூடங்குளம் அணுமின் திட்ட வளாக இயக்குநர் ஆர்.எஸ்.சுந்தரம் கூறினார்.
பத்திரிகை தகவல் அலுவலகம் சார்பில் மதுரையில் சனிக்கிழமை நடைபெற்ற தென்மாவட்டங்களின் கட்டமைப்பு வசதிகள் என்ற கருத்தரங்கில் பங்கேற்ற அவர் செய்தியாளர்களிடம் கூறியது:
கூடங்குளம் அணுமின் நிலையத்தில் 2013-ல் உற்பத்தி தொடங்கியது. இதுவரை 1080 கோடி யூனிட் மின்சாரம் உற்பத்தி செய்யப்பட்டுள்ளது. இரண்டாவது அலகில் உற்பத்தி தொடங்கப்பட்டு இப்போது 230 முதல் 300 மெகாவாட் மின்சாரம் உற்பத்தி செய்யப்பட்டு வருகிறது. வணிக ரீதியிலான உற்பத்தி இன்னும் தொடங்கவில்லை. அணுசக்தி கழகத்தின் அனுமதி கிடைத்ததும் இம்மாத இறுதிக்குள் 1000 மெகாவாட் மின்சாரம் உற்பத்தி செய்யப்படும். மேலும் 2-ஆவது அலகை மின்சுற்றில் இணைக்கும் பணியும் இம்மாத இறுதிக்குள் நிறைவடையும்.
இதன்படி, இரண்டாவது அலகில் இருந்து ஏற்கெனவே இருக்கும் ஒப்பந்தத்தின் அடிப்படையில் 562 மெகாவாட் தமிழகத்துக்கு வழங்கப்படும். எஞ்சியவை தென்மாநிலங்களுக்கு வழங்கப்படும். தெலுங்கானா மாநிலத்துக்கு 50 மெகாவாட் மின்சாரம் வழங்கப்பட உள்ளது.
கூடங்குளம் அணுமின் நிலையத்தில் மூன்றாவது மற்றும் நான்காவது அணு உலைகளுக்கான அகழ்வாராய்வு பணி நடைபெற்று வருகிறது. அப் பணிகள் முடிந்தபின், 2017-இல் அணுஉலை கட்டுமானப் பணிகள் தொடங்கும். அடுத்த 6 ஆண்டுகளில் 3 மற்றும் 4-ஆவது அலகுகளில் மின்உற்பத்தி செய்யப்படும். அதேபோல, ஐந்து மற்றும் ஆறாவது அலகுகளுக்கான தொழில்நுட்ப ரீதியிலான சாத்தியக்கூறுகள் ஆராயப்பட்டு வருகின்றன. விரைவில் இதற்கான ஒப்பந்தம் கையெழுத்தாக உள்ளது.
வரும் 2022-2023 ஆம் ஆண்டுகளில் கூடங்குளம் அணுமின்திட்டத்தின் அனைத்து அலகுகளிலும் முழு அளவில் உற்பத்தி இருக்கும். அப்போதைய சூழலில் எதிர்பார்க்கப்பட்ட தொழில் மற்றும் கட்டமைப்பு வளர்ச்சிகளைக் கண்கூடாகக் காண முடியும் என்றார்.
முன்னதாக கருத்தரங்கில் பேசிய அவர், அனைத்து பாதுகாப்பு அம்சங்களுடன் கூடங்குளம் அணுமின்நிலையம் கட்டமைக்கப்பட்டிருக்கிறது. கூடங்குளம் அணுமின்நிலையம் மீதான அச்சம் இப்போது அங்குள்ள மக்களிடையே கொஞ்சம் கொஞ்சமாகக் குறைந்து வருகிறது. உண்மை நிலையை மக்கள் உணரத் தொடங்கிவிட்டனர். மனிதர்களுக்கோ அல்லது உயிரினங்களுக்கோ எவ்விதப் பாதிப்பு இல்லை என்பதை அறிந்து கொண்டிருக்கின்றனர்.
சூரியசக்தி, காற்றாலை போன்ற மின்உற்பத்தி திட்டங்களைக்காட்டிலும் அணுமின்திட்டங்களில் மட்டுமே நிர்ணயிக்கப்பட்ட முழு அளவிலான உற்பத்தி தொடர்ச்சியாகப் பெறுவது சாத்தியமாகும் என்றார்.
இந்த கருத்தரங்கை மாவட்ட ஆட்சியர் கொ.வீரராகவ ராவ் தொடங்கி வைத்தார். தூத்துக்குடி துறைமுகப் பொறுப்புக் கழகத் தலைவர் எஸ்.ஆனந்த சந்திரபோஸ், தேசிய நெடுஞ்சாலைகள் ஆணைய தலைமைப் பொதுமேலாளர் வி.சென்னா ரெட்டி, பத்திரிகை தகவல் அலுவலக கூடுதல் இயக்குநர் கே.முத்துக்குமார் உள்ளிட்டோர் பேசினர்.