Designed by Iniyas LTD
ஸ்ரீலங்கா பொலிசும் தமிழீழக் காவல்துறையும்!
யாழ்ப்பாணத்தில் யாழ் பல்கலைக்கழக மாணவர்கள் இருவரை ஸ்ரீலங்கா பொலிஸார் சுட்டுப் படுகொலை செய்துள்ளனர். ஆரம்பத்தில் விபத்தில் மாணவர்கள் இறந்ததாக பொலிஸார் கூறியுள்ளனர். எனினும் துப்பாக்கி வேட்டுக்கள் தீர்க்கப்பட்ட சத்தம் கேட்டதாகவும் இது திட்டமிட்ட படுகொலை என்றும் சம்பவம் நடைபெற்ற பகுதியில் வசித்த மக்கள் தெரிவித்தனர். அத்துடன் மாணவர்களில் ஒருவரின் உடலில் துப்பாக்கி குண்டுகள் பாய்ந்த அடையாளம் உள்ளதாக யாழ் போதனா வைத்தியசாலை தெரிவித்தது.
இதனையடுத்து மாணவர்கள் விபத்தில் இறக்கவில்லை என்றும் அவர்கள் சுட்டுக்கொல்லப்பட்டுள்ளனர் என்றும் தெரியவந்தது. உண்மையில் இந்தச் செயற்பாடு நமக்கு பல்வேறு விடயங்களை உணர்த்துகின்றது. அண்மையில் வடக்கு பகுதியில் இரவில் கடமையாற்றும் காவல்துறைக்கு துப்பாக்கியால் சுடும் அதிகாரம் வழங்கப்பட்டது. நீதிமன்றத்தின் ஊடாக இந்த அதிகாரம் வழங்கப்பட்டு சில மணிநேரங்களில் அப்பாவி இளைஞர்கள் சுட்டுக் கொல்லப்பட்டுள்ளனர்.
கடந்த காலத்தில் வடகிழக்கில் எங்கும் குண்டு வீசலாம். எவரையும் சுட்டுக் கொல்லலாம். எவரையும் கடத்தலாம் போன்ற அதிகாரங்கள் வழங்கப்பட்டிருந்ததைப்போல இப்போது வடக்கில் துப்பாக்கியால் சுட்டுக்கொல்லும் அதிகாரம் வழங்கப்பட்டுள்ளது. தமிழர்களை ஸ்ரீலங்கா அரசு எப்போதும் தனி நாடாக கையாள்கிறது. வடக்கில் வழங்கப்பட்ட துப்பாக்கியால் சுடும் அதிகாரத்தை தெற்கில் நடைமுறைப்படுத்தாதது ஏன்?
தெற்கில் இன்னமும் பல கொலைகளும் வன்முறைகளும் கொள்ளைகளும் நடக்கும் பகுதிகள் இல்லையா? வடக்கில் வன்முறைகளை ஏற்படுத்தி அதனையே காரணம் காட்டி கண்ட இடத்தில் சுடும் அதிகாரத்தை ஸ்ரீலங்கா அரசு வழங்கியிருப்பது இன அழிப்பின் செயற்பாடா? உண்மையில் இந்தப் படுகொலையை விபத்தாகவே பொலிஸார் முடித்துள்ளனர். உண்மை தெரியவந்த பின்னர் பொலிஸாரால் எதுவும் செய்ய முடியாமல் போய்விட்டது.
மைத்திரிபால சிறிசேன அரசு தன்னைப் பாதுகாக்கும் நோக்குடன் உடனடியாக குற்றச் செயல்களில் ஈடுபட்ட பொலிஸாரை பணி நீக்கி அவர்களை கைது செய்துள்ளது. ஆனால் இது மாணவர்களை இழந்த எங்கள் சமூகத்தின் இழப்பை வெற்றிடத்தை நிரப்பி விடாது. அத்துடன் இதன் மூலம் வடகிழக்கில் ஸ்ரீலங்காப் பொலிஸாரின் அடாவடிகள் குறைந்துவிடாது.
வடகிழக்கைப் பொறுத்த வரையில் ஸ்ரீலங்கா இராணுவமும் ஸ்ரீலங்காப் பொலிஸாரும் ஒன்றே. ஸ்ரீலங்காப் பொலிஸார் சிங்களப் பொலிஸாகவே நடந்து கொள்ளுகின்றனர். ஸ்ரீலங்காப் பொலிஸில் உள்ள தமிழ் உறுப்பினர்கள்கூட சிங்களம் பேசி, சிங்களச் சாயலில் தமிழ் பேசி சிங்களவராக நடிக்கின்றனர். ஏனெனில் ஸ்ரீலங்காப் பொலிஸில் சிங்களப் பொலிஸாக இருப்பதே அதிகாரமானது. தமிழ் பகுதியில் எதனையும் செய்யலாம்.
லஞ்சம் பெறுதல், அடக்கி ஒடுக்குதல், காரணமின்றி கைது செய்தல், மிரட்டுதல் போன்ற அத்தனை அடாவடிகளுக்கு சிங்களப் பொலிஸாக இருப்பதே சௌகரியமானது என்று தமிழ் பொலிஸ் உறுப்பினர்கள்கூட நினைக்கும் அளவில் ஸ்ரீலங்காப் பொலிஸின் நிர்வாக ஆளுமை காணப்படுகிறது.
வடகிழக்கு மண் ஒழுக்கமான, சீரிய ஒரு காவல்துறையை ஒரு காலத்தில் கொண்டிருந்தது. அதுதான் தமிழீழக் காவல்துறை. உலகில் உள்ள பெரும்பாலான நாடுகளில் காவல்துறை என்பது மக்களை ஒடுக்கும் அரச எந்திரமாகவே இருக்கிறது. விதிவிலக்காக தமிழீழக் காவல்துறை என்பது மக்களின் காவல்துறையாக, மக்களை பாதுகாக்கும், சட்டத்தை பாதுகாக்கும், தன் கடமையிலிருந்து துளியேனும் விலகாத காவல்துறையாக இருந்தது.
இதனை தமிழீழ அரசாட்சியில் வாழ்ந்த எவராலும் மறக்க முடியாது. தமிழீழ மக்களின் சிவில் பிரச்சினைகளை தீர்ப்பது, போக்குவரத்து நடவடிக்கைகளை கண்காணிப்பது என்று தமிழீழ மக்களின் நெஞ்சில் தமிழீழக் காவல்துறை ஆற்றிய பணிகளை மறக்க முடியாது. போர், இயற்கை அனர்த்த காலம் என்று அனைத்துக் காலத்திலும் வினைதிறன் மிக்க காவல்துறையாக தமிழீழக் காவல்துறை செயற்பட்டது.
அண்மையில் ஸ்ரீலங்கா காவல்துறை நிலையம் ஒன்றுக்கு சென்று முறைப்பாடு ஒன்று தெரிவித்தேன். அரைகுறை தமிழ் தெரிந்த சிங்கப் பெண் காவல்துறை முறைப்பாட்டை கேட்டு சிங்களத்தில் எழுதினார். சிங்களத்தில் முழுமையாக எழுதப்பட்ட முறைப்பாட்டுக் கடித்தின் நடுவே தமிழில் ஒப்பமிட்டேன். இதுதான் ஸ்ரீலங்கா அரசாட்சியில் தமிழீழ மக்களின் நிலை. தமிழில் முறைப்பாடு கேட்டு, தமிழில் எழுதி நாம் வாசித்த பின்னர் ஒப்பமிட்ட தமிழீழக் காவல்துறையின் காலத்தில் வாழ்ந்த நமக்கு இதுவே இன்றைய நிலை.
விபத்தில் இறந்த கிளிநொச்சியை சேர்ந்த மாணவனின் வீட்டுக்குச் சென்ற ஸ்ரீலங்காப் பொலிஸார், பிஸ்கட், வெற்றிலை வாங்கித் தந்து மரண வீட்டுச் செலவுகளை செய்வதுடன் போஸ்மோட்டச் செலவுகளையும் ஏற்றுக்கொள்வதாகவும் தம்மை மன்னிக்குமாறும் கோரியுள்ளனர். உயிரை பறித்துவிட்டு இலஞ்சம் கொடுக்கின்றனர் ஸ்ரீலங்காப் பொலிஸார். அந்த மாணவர்களின் உயிருக்கு இதுதானா பெறுமதி? ஈடற்ற அவர்களின் இடத்தை, உயிரை இவைதான் நிரப்புமா?
இதுவே நல்லாட்சி. மைத்திரியின் நல்லாட்சியில் இதுவே தமிழர் உயிரின் மதிப்பு.
இந்த சம்பவம் புதிய சம்பவமல்ல. இதுபோன்ற ஒடுக்குமுறைகளை வடகிழக்கில் தமிழ் மக்கள் இன்று சந்தித்து வருகின்றனர். இவை தமிழ் இனம்மீதான ஒடுக்குமுறைப் போக்கு கொண்ட சிங்கள மேலாதிக்கத்தின் வெளிப்பாடு. தமிழீழ மக்களைப் பொறுத்தவரையில் அவர்கள் தங்களை தாங்கள் ஆளும் தமிழ் காவல்துறை கொண்ட தேசத்தில் வாழ்வதே பாதுகாப்பானது.
ஆசிரியர்,
செண்பகம்.
22.10.2016
