தமிழினத்திற்கான தனித்துவமான ஊடகம்

10 விபத்துக்களில் 11 பேர் பலி!

நாடளாவிய ரீதியில் இடம்பெற்ற பாரிய பத்து விபத்துகளில் 11 பேர் பலியாகியுள்ளனர் என்பதுடன், 19 பேர் படுகாயமடைந்த நிலையில் வைத்தியசாலைகளில் அனுமதிக்கப்பட்டுள்ளனர் என்று, பொலிஸ் தலைமையகம் விடுத்துள்ள ஊடக அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

வறக்காபொலயில் நேற்று (26) காலை 7:50க்கு இடம்பெற்ற விபத்தில் ஒருவர் பலியாகியுள்ளார். அத்துடன், 14 பேர் காயமடைந்து, வறக்காபொல வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

குருநாகல் பக்கமாகப் பயணித்த தனியார் பஸ்ஸொன்று, அதே​ திசையில் பயணித்த, இலங்கைப் போக்குவரத்து சபைக்குச் சொந்தமான பஸ்ஸொன்றை முந்திச் செல்வதற்கு முயன்றுள்ளது. அதன்போது, நிறுத்திவைக்கப்பட்டிருந்த லொறியொன்றுடன் தனியார் பஸ் மோதி விபத்துக்குள்ளாகி, கட்டுப்பாட்டை இழந்து, எதிரேவந்த காருடன் மோதுண்டு விபத்துக்குள்ளானது.

இந்த விபத்தி​ல், 15 பேர் காயமடைந்து வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டனர். அதில் ஒருவ​ரே மரணமடைந்துள்ளார்.

இதேவேளை, மீஹாதென்னையில், சனிக்கிழமை மாலை 4:30க்கு இடம்பெற்ற விபத்தில், ஒருவர் பலியாகியுள்ளார் என்பதுடன், ஐந்து வயதான சிறுவன் உட்பட பெண்ணொருவரும் காயமடைந்துள்ளனர்.
இதேவேளை, பசறையில் இடம்பெற்ற விபத்தில், ஒருவர் பலியாகியுள்ளார். அத்துடன், இருவர் காயமடைந்தனர்.

மேலும், தியத்தலாவையில் இடம்பெற்ற விபத்தில் இருவர் பலியாகியுள்ளனரென பொலிஸார் தெரிவித்தனர்.
இந்நிலையில், கந்தானை, முல்லைத்தீவு, கொடகவெல, ஹூங்கம, பெல்மதுளை, ஹெலியகொட ஆகிய பிரதேசங்களில் கடந்த இரண்டு நாட்களில் இடம்பெற்ற பாரிய விபத்துகளில், தலா ஒருவர் பலியாகியுள்ளனர் என, பொலிஸ் தலைமையகம் விடுத்துள்ள ஊடக அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Comments
Loading...