Designed by Iniyas LTD
15-அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி அரசுப்பள்ளி ஆசிரியர்கள் வேலைநிறுத்தம்
ஜாக்டோ அமைப்பு சார்பில் 15-அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி அரசுப்பள்ளி ஆசிரியர்களில் ஒரு பகுதியினர் வேலைநிறுத்தத்தில் ஈடுபட்டுள்ளனர். அவர்கள் முன்வைக்கும் கோரிக்கைகள்…
6-ஆவது ஊதியக்குழுவின் பரிந்துரையின் படி இடைநிலை, முதுநிலை ஆசியர்களுக்கும் உயர்நிலை, மேல்நிலை தலைமை ஆசிரியர்களுக்கும் இடையிலான ஊதிய முரண்பாட்டை நீக்க வேண்டும் என வலியுறுத்தப்பட்டுள்ளது.
தன்பங்கேற்பு ஓய்வூதிய திட்டத்தை ரத்து செய்ய வேண்டும். தொகுப்பூதிய ஆசிரியர்களாக இருந்தவர்கள் ஆசிரியர்களாக பணி பெற்ற பிறகு, அவர்களுடைய தொகுப்பூதிய பணி அனுபவத்தையும் மூப்பில் சேர்க்க வேண்டும் என ஜாக்டோ வலியுறுத்தியிருக்கிறது.
நிரந்தரம் செய்யப்பட்ட தொழிற்கல்வி ஆசிரியர்களுக்கு 50 சதவீத ஓய்வூதியம் வழங்க வேண்டும், பள்ளிகளில் தமிழ் பாடத்தை முதல் பாடமாக்க வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளும் முன்வைக்கப்பட்டுள்ளன.
பள்ளி மாணவர்களுக்கான நலத்திட்டங்களை செயல்படுத்த உதவி அலுவலர்களை நியமிக்கவும், ஆசிரியர்களின் பாதுகாப்பை உறுதி செய்ய தனி சட்டம் இயற்றவும் ஜாக்டோ அமைப்பு வலியுறுத்தியிருக்கிறது. பள்ளிக் கல்வித்துறையில் பதவி உயர்வு இல்லாத பதவிகளில் 30ஆண்டுகளுக்கு மேலாக பணியாற்றுபவர்களுக்கு 6 சதவீத ஊதிய உயர்வு வழங்க வேண்டும் என்ற கோரிக்கையும் முன்வைக்கப்பட்டுள்ளது.
பணிமூப்பு அடிப்படையில் ஆசிரியர்களின் ஊதியத்தை முறைப்படுத்த வேண்டும். உடற்கல்வி ஆசிரியர்கள், இயக்குநர்களை நியமிக்க வேண்டும், பதவி உயர்வு பெறும் போது அளிக்கப்படும் ஊதிய உயர்வுத் தொகையை 3 சதவீதத்தில் இருந்து 6 சதவீதமாக மீண்டும் உயர்த்த வேண்டும் என்றும் கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது.
மேலும், தகுதித் தேர்வு முறையை ரத்து செய்து விட்டு, மூப்பு அடிப்படையில் ஆசிரியர் பணியிடங்களை நிரப்ப வேண்டும் என ஜாக்டோ அமைப்பு கோரிக்கை விடுத்திருக்கிறது. மாணவர்களின் எண்ணிக்கையை அடிப்படையாகக் கொண்டு அரசுப் பள்ளிகளை மூடக்கூடாது என்றும், தமிழ்வழி கல்விக்கும் அரசு முக்கியத்துவம் அளிக்க வேண்டும் எனவும் வேண்டுகோள் விடுக்கப்பட்டுள்ளது. ஆசிரியர்கள் தேர்வுநிலையில் இருந்து சிறப்பு நிலைக்கு செல்லும் போது, பணி உயர்வால் விடுபடும் ஆண்டுகளையும் சேர்க்க வேண்டும் என 15 அம்ச கோரிக்கைகள் முன்வைக்கப்பட்டுள்ளது.