Designed by Iniyas LTD
தமிழை ஒரு பாடமாக நடத்த வேண்டும் – அரசு உத்தரவு
தமிழகத்தில் செயல்படும் அனைத்து வகை நர்சரி, பிரைமரி, நடுநிலை, உயர்நிலை மற்றும் மேனிலைப் பள்ளிகளில் தமிழை ஒரு பாடமாக நடத்த வேண்டும் என்று அரசு உத்தரவிட்டுள்ளது. இதன் மூலம் தமிழகத்தில் செயல்படும் சிபிஎஸ்இ பள்ளிகளும் தமிழை நடத்த வேண்டும். தமிழகத்தில் கடந்த முறை ஆட்சியில் இருந்த திமுக அரசு அனைத்து பள்ளிகளிலும் தமிழை கட்டாய பாடமாக நடத்த வேண்டும் என சட்டம் இயற்றியது. ஆனால் அதற்கு தமிழகத்தில் ஆதரவு இருந்தாலும் சிலர் குறை கூறினர். இந்நிலையில், தற்போது ஆட்சியில் உள்ள அதிமுக அரசு மேற்கண்ட சட்டத்தை அடிப்படையாக கொண்டு கடந்த 18ம் தேதி ஒரு உத்தரவை தயாரித்துள்ளது.
இதன்படி, தமிழகத்தில் செயல்படும் அனைத்து நர்சரி, பிரைமரி, நடுநிலைப் பள்ளிகள், உயர்நிலைப் பள்ளிகள், மேனிலைப் பள்ளிகள், தனிப்பட்ட நபரோ அல்லது அமைப்போ நடத்தும் சிறுபான்மை பள்ளிகள் ஆகியவை அனைத்திலும் தமிழ் ஒரு பாடமாக நடத்தப்பட வேண்டும். மத்திய அரசின் 2009ம் ஆண்டு சட்டம் 35ல் குறிப்பிட்டுள்ள சிறப்பு பிரிவு பள்ளிகள் கேந்திரிய வித்தியாலயா 40, நவோதயா பள்ளிகள் 2, சைனிக் பள்ளி 1 அடங்கும். அவை தவிர தமிழக அரசின் உத்தரவின்படி தமிழகத்தில் செயல்படும் 565 சிபிஎஸ்இ பள்ளிகளும் தமிழை ஒரு பாடமாக நடத்த வேண்டும்.