தமிழினத்திற்கான தனித்துவமான ஊடகம்

இந்தியாவில் பன்றிக் காய்ச்சல் வேகமாக பரவி வருகிறது

நாடு முழுவதும் பன்றிக் காய்ச்சல் நோய்த் தாக்கி 775 பேர் பலியாகியுள்ளனர். இதனால் மக்கள் மத்தியில் பீதி ஏற்பட்டுள்ளது.

தடுப்பு நடவடிக்கைகள்  மேற்கொண்ட போதிலும் பன்றிக் காய்ச்சல்  வேகமாக பரவி வருகிறது.  மருத்துவமனைகளில் சிகிச்சைக்காக அதிக அளவில் நோயாளிகள் அனுமதிக்கப்பட்டு வருகின்றனர். நேற்று ஒரே  நாளில் மட்டும்  31 பேர் பலியானதைத்  தொடர்ந்து,  இதுவரையில் பலியானவர்கள் எண்ணிக்கை775 ஆக அதிகரித்துள்ளது.swine_flue

நோயால் பாதிக்கப்பட்டோர்  எண்ணிக்கையும் 13,000 ஆக அதிகரித்துள்ளது. இதனால், மருந்து தட்டுப்பாடும் ஏற்பட்டுள்ளது.  பன்றிக் காய்ச்சல் பரவுவதை தடுக்க தேவையான தடுப்பு  நடவடிக்கைகளை சுகாதாரத் துறை எடுத்து வருவதாகவும், தட்டுப்பாடு இல்லாமல் மருந்து கிடைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு உள்ளதாகவும் அரசு  மருத்துவமனைகளில் கூடுதல் வார்டுகள் ஒதுக்கி சிகிச்சை அளிக்கவும் ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது. எனவே மக்கள் பீதி அடையத் தேவையில்லை என்று  மத்திய சுகாதார அமைச்சகம் தெரிவித்துள்ளது.

ஐதராபாத்தில் உள்ள போலீஸ் அதிகாரிகள் பயிற்சி மையத்தில் தங்கி பயிற்சி எடுத்து வருபவர்களில் 6 பேருக்கு பன்றிக் காய்ச்சல் பாதிப்பு ஏற்பட்டுள்ளது  கண்டுபிடிக்கப் பட்டுள்ளது. இதையடுத்து, சில அதிகாரிகள் எந்த தகவலும் தெரிவிக்காமல் பயிற்சி மையத்தில் இருந்து வீட்டிற்குச் சென்றுவிட்டதாகக்  கூறப்படுகிறது.

காஷ்மீரில் பன்றிக் காய்ச்சல் பாதிப்பு காரணமாக ஜம்மு கோட்ட காவல் தலைமையகத்தில் எஸ்பியாக பணியாற்றிய சுனில் குப்தா ஐபிஎஸ்  பலியானார். காஷ்மீரில் ஏராளமான பேருக்கு  பன்றி காய்ச்சல் பாதிப்பு இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. நேற்று மேலும் 13 பேருக்கு நோய் தொற்று  இருப்பதும்  கண்டறியப்பட்டது. கடந்த 24 மணி நேரத்தில் 109 பேர் பன்றிக் காய்ச்சலால் பாதிக்கப் பட்டு மருத்துவமனைகளில் சேர்க்கப்பட்டுள்ளனர்.

புனேயில் உள்ள கோத்ரூட் தொகுதி பாஜ எம்எல்ஏ மேதா குல்கர்னி பன்றி காய்ச்சலால் பாதிக்கப்பட்டுள்ளார். அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப் பட்டு  வருகிறது.

தமிழகத்தில் பன்றிகாய்ச்சல் வேகமாக பரவி வருகிறது. பன்றிக் காய்ச்சலால் இறந்தவர்கள் எண்ணிக்கை 8 என்று தமிழக அரசு கூறினாலும் எண்ணிக்கை  அதிகம் இருக்கும் என்று கூறப்படுகிறது. காரணம் தனியார் மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டு இறப்பவர்கள், கிராமப் பகுதிகளில் உயிரிழப்போர் எண்ணிக்கை  இதில் சேர்ப்பது இல்லை.

அதே போல் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை தமிழகத்தில் 220 பேர் என்று அரசு தரப்பில் கூறப்பட்டாலும் இந்த எண்ணிக்கை ஆயிரத்துக்கும் அதிகம் இருக்கும்  என்று கூறப்படுகிறது. சென்னையில் மட்டும் மூன்று பேர் இறந்துள்ளனர்.

பன்றி காய்ச்சல் பாதிப்புக்கு உள்ளானவர்களுக்கு எடுக்கப்படும் ஸ்வாப் மாதிரிக்கான கிட் ஒரு மாநகராட்சி சுகாதார மையத்தில் கூட இல்லை என்பது உண்மை.  அரசு ராஜிவ் காந்தி மருத்துவமனை, தண்டையார்பேட்டை தொற்று நோய் மருத்துவமனையில் மட்டுமே சிறப்பு வார்டுகள் உள்ளன என்பது குறிப்பிடத் தக்கது.

Comments
Loading...